தமிழ்நாடு

ரூ.20 ஆயிரம் கோடியில் அமைக்கப்படுகிறது: அடுத்த ஆண்டு பரந்தூர் விமான நிலைய பணிக்கு 'டெண்டர்'

Published On 2024-05-24 09:03 GMT   |   Update On 2024-05-24 09:10 GMT
  • புதிய விமான நிலையம் அமைப்பது தொடர்பாக 7 பேர் கொண்ட உயர்மட்டக் குழுவினர் பரந்தூர் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களுக்கு சென்று ஆய்வு செய்தனர்.
  • நிலத்தடி நீர், மழை வெள்ள பாதிப்பு, நீர் நிலை பகுதிகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்து உள்ளனர்.

காஞ்சிபுரம்:

சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய உள்ளது. சுமார் 4 ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பளவில் ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் புதிய விமான நிலையம் அமைக்கப்பட இருக்கிறது.

விமான நிலையம் அமைக்க தேர்வு செய்யப்பட்ட இடத்தில் ஆயிரத்து 317 ஏக்கர் நிலம் மட்டுமே அரசு நிலம் ஆகும். 3 ஆயிரத்து 200 ஏக்கர் பட்டா நிலங்கள். 799 ஏக்கர் நீர் நிலைப்பகுதிகளாக உள்ளன.

இதையடுத்து புதிய விமான நிலையத்திற்காக விவசாயம் மற்றும் நீர் நிலை நிலங்களை கையகப்படுத்த பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட சுற்றுப்புறத்தை சேர்ந்த 13 கிராமமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். மேலும் நிலங்களை கையகப்படுத்த தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் நிலங்களை கையகப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சந்தை மதிப்பை விட 3.5 மடங்கு இழப்பீடு தொகை வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.கடந்த நில நாட்களுக்கு முன்பு கிராமங்களில் நிலம் கையகப்படுத்துவது தொடர்பான அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே புதிய விமான நிலையம் அமைப்பது தொடர்பாக 7 பேர் கொண்ட உயர்மட்டக் குழுவினர் பரந்தூர் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களுக்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது அவர்கள் நிலத்தடி நீர், மழை வெள்ள பாதிப்பு, நீர் நிலை பகுதிகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்து உள்ளனர்.

இந்த நிலையில் சென்னையின் 2-வது விமான நிலைய பணிக்கான டெண்டர்களை அடுத்த ஆண்டு இறுதிக்குள் அரசு வெளியிடும் என்று தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் (டிட்கோ) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, பரந்தூர் விமான நிலையத்திற்காக நிலங்களை கையகப்படுத்தும் பணி முடிய இன்னும் ஒரு ஆண்டு ஆகும். இதன்பின்னர் அடுத்த ஆண்டு இறுதிக்குள் பணிகளுக்கான டெண்டர் விடப்படும். மத்திய அரசின் கொள்கை அடிப்படையிலான ஒப்புதலுக்காக மாநில அரசு காத்திருக்கிறது என்றார்.

Tags:    

Similar News