தமிழ்நாடு

வங்கக்கடலில் நாளை தீவிர புயல் உருவாகிறது- 10 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை

Published On 2024-05-24 08:13 GMT   |   Update On 2024-05-24 08:13 GMT
  • வட திசையில் நகர்ந்து நாளை மாலை தீவிர புயலாக வலுவடையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
  • தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் திருநெல்வேலி மாவட்டம் நாலுமுக்கில் 10 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

சென்னை:

மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது. அது வடகிழக்கு திசையில் நகர்ந்து இன்று காலை தாழ்வு மண்டலமாக மேலும் வலுவடைந்தது.

அது வங்காளதேசத்திற்கு தென்மேற்கே 800 கிலோமீட்டர் தூரத்தில் நிலை கொண்டுள்ளது. அது மேலும் வலுவடைந்து வடகிழக்கு திசையில் நகர்ந்து நாளை (25-ந்தேதி) காலை மத்திய கிழக்கு வங்கக்கடலில் புயலாக உருவாகக்கூடும்.

இது மேலும் வட திசையில் நகர்ந்து நாளை மாலை தீவிர புயலாக வலுவடையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தீவிர புயலானது 26-ந்தேதி நள்ளிரவு தீவிர புயலாக மேற்கு வங்காள கடற்கரையை ஒட்டிய சாகர் தீவு மற்றும் கிபுபராவுக்கும் இடையே நாளை மறுநாள் நள்ளிரவு கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் கேரள கடற்கரையை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் இன்று லேசான மழை பெய்யும்.

கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி, திண்டுக்கல், நீலகிரி, மதுரை, விருதுநகர், திருப்பூர், நெல்லை மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை இலாகா தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் திருநெல்வேலி மாவட்டம் நாலுமுக்கில் 10 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

Tags:    

Similar News