தமிழ்நாடு

விபத்தில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்

Published On 2024-05-24 08:30 GMT   |   Update On 2024-05-24 08:30 GMT
  • சுடர் கொடிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
  • உடல் உறுப்புகள் தேவைப்படுபவர்களுக்கு ஆபரேசன் மூலம் பொருத்தப்பட்டது.

திருப்பூர்:

திருப்பூர் மாவட்டம் உகாயனூர் பகுதியை சேர்ந்தவர் தனபாண்டியன். இவரது மனைவி சுடர்கொடி (வயது 35) . இவர்களுக்கு சின்னத்தங்கம், அட்சயநிதி என்ற 2 மகள்கள் உள்ளனர். இதில் சின்ன த்தங்கம் பிளஸ்-2 முடித்து முதலாம் ஆண்டு கல்லூரி செல்ல உள்ளார். அட்சய திதி 11-ம் வகுப்பு முடித்து 12ம் வகுப்பு செல்ல உள்ளார். தனபாண்டியன், சுடர்கொடி தம்பதியினர் திருப்பூர் வீரபாண்டி அருகே உள்ள ஜே.ஜே.நகர் பகுதியில் தள்ளுவண்டி கடையில் உணவு வியாபாரம் செய்து வந்தனர்.

கடந்த 21-ந் தேதி இரவு சுடர்கொடி வியாபாரத்தை முடித்துக்கொண்டு இரு சக்கர வாகனத்தில் தனது மகள்களுடன் வீட்டிற்கு சென்றுள்ளார். வீரபாண்டி அருகே வந்தபோது, கண்ணில் பூச்சி அடித்துள்ளது. இதனால் நிலை தடுமாறிய சுடர்கொடி தனது மகள்களுடன் வாகனத்தில் இருந்து கீழே விழுந்துள்ளார். இதில் சுடர் கொடிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மகள்களுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் சுடர் கொடியை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தலையில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து சுடர் கொடியின் உறவினர்கள் அவரை திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அழைத்துச் சென்று அங்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். இருப்பினும் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.


இதையடுத்து சுடர் கொடியை திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக மீண்டும் உறவினர்கள் அழைத்து வந்தனர். இதையடுத்து அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சுடர்க்கொடி மூளை சாவு அடைந்ததாக தெரிவித்தனர். மேலும், உடல் உறுப்பு தானம் செய்வதால் சுடர்கொடி இறந்தாலும் மற்றவர்கள் உடலில் அவர் வாழலாம் என மருத்துவர்கள் எடுத்துரைத்தனர். இதைத்தொடர்ந்து கணவர் மற்றும் மகள்கள் உடல் உறுப்பு தானத்திற்கு சம்மதம் தெரிவித்ததையடுத்து, திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்கள் குழு 5 மணி நேர அறுவை சிகிச்சை மேற்கொண்டு சுடர்கொடி உடலில் இருந்து கல்லீரல், சிறுநீரகம், கண் ஆகிய உறுப்புகளை பாது காப்பாக அகற்றினர். பின்னர் ஐஸ் பாக்சில் வைத்து, மருத்துவர்களின் உதவியோடு ஆம்புலன்ஸ் மூலம் கோவையில் உள்ள தனியார் மருத்து வமனைகளுக்கு உடல் உறுப்புகள் கொண்டு செல்லப்பட்டது. அங்கு உடல் உறுப்புகள் தேவைப்படுபவர்களுக்கு ஆபரேசன் மூலம் பொருத்தப்பட்டது.

திருப்பூர் அரசு மருத்துவமனை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டதை தொடர்ந்து முதல் முறையாக உடல் உறுப்பு தானம் செய்வதற்கான அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் உடல் உறுப்புகள் தானம் செய்த சுடர்கொடியின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

Tags:    

Similar News