தமிழ்நாடு செய்திகள்

நீதிமன்ற தீர்ப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது சட்டமில்லை- அமைச்சர் பெரியசாமி

Published On 2025-12-06 13:50 IST   |   Update On 2025-12-06 13:50:00 IST
  • தமிழக வெற்றிக்கழகத்தில் செங்கோட்டையன், நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட பலர் இணைவதால் எங்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை.
  • வாக்காளர் பட்டியல் தீவிர சுருக்க திருத்த பணி என கூறி ஒரே இரவில் என்னுடைய தொகுதியில் 22,000 பேரை நீக்கி விட்டனர்.

திண்டுக்கல்:

திண்டுக்கல்லில் இன்று அம்பேத்கார் நினைவுதினத்தை முன்னிட்டு அவரது உருவப்படத்துக்கு அமைச்சர் இ.பெரியசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் மேயர் இளமதி, காங்கிரஸ் மாநகர மாவட்ட தலைவர் துரைமணிகண்டன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

அதன் பின்னர் அமைச்சர் இ.பெரியசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தமிழக வெற்றிக்கழகத்தில் செங்கோட்டையன், நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட பலர் இணைவதால் எங்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. த.வெ.க. இன்னும் மக்கள் மன்றத்தில் அங்கீகாரம் பெறவே இல்லை. இந்த சூழ்நிலையில் அந்தக் கட்சியுடன் யார் சேர்ந்தாலும், பிரிந்தாலும் எங்களுக்கு எந்த கவலையுமில்லை.

திருப்பரங்குன்றம் விஷயத்தில் தி.மு.க. அரசு சரியான பாதையில் செல்கிறது. தமிழகத்தில் மதத்தை வைத்து அரசியல் செய்ய யார் நினைத்தாலும் அது மக்கள் மத்தியில் எடுபடாது. நீதிமன்றம் கொடுத்துள்ள தீர்ப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது சட்டமில்லை. எங்கள் உரிமையை பெறுவதற்காக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளோம். விரைவில் நல்ல தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாக்காளர் பட்டியல் தீவிர சுருக்க திருத்த பணி என கூறி ஒரே இரவில் என்னுடைய தொகுதியில் 22,000 பேரை நீக்கி விட்டனர். இது சம்பந்தமாக தேர்தல் ஆணையத்துக்கு நான் புகார் அனுப்பியுள்ளேன். பி.எல்.ஓ. எனப்படும் வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் எந்த வீடுகளுக்கும் நேரடியாக சென்று படிவங்களை வழங்கி கையெழுத்து பெறவில்லை. ஒரே அறையில் உட்கார்ந்து கொண்டு கணக்கு காண்பிக்க வேண்டும் என்பதற்காக தேர்தல் ஆணையத்துக்கு வேலை பார்த்துக் கொண்டு வருகிறார்கள். இதனால் எஸ்.ஐ.ஆர். படிவத்தில் ஏராளமான குளறுபடிகள் உள்ளன. எனவே மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும். தேர்தலை நடத்துங்கள், வாக்காளர்கள் அவர்களாக வாக்களிக்கட்டும். திண்டுக்கல்லில் உயிருடன் உள்ள தி.மு.க. நிர்வாகியை இறந்ததாக கூறி பட்டியலில் இருந்து நீக்கி விட்டனர். ஆத்தூர் தொகுதிக்குட்பட்ட நரிக்கல்பட்டி, நீலமலைக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் வாக்காளர் குளறுபடி நடந்துள்ளது. பி.எல்.ஓ. அலுவலர்கள் இடமாற்றம் செய்து விட்டதாக பல படிவங்களை தள்ளுபடி செய்து விட்டனர். இது போன்று பல்வேறு தொகுதிகளிலும் குளறுபடி நடந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News