தமிழ்நாடு செய்திகள்

இண்டிகோ விமான சேவை ரத்து - சென்னையில் விமான கட்டணம் பல மடங்கு உயர்வு

Published On 2025-12-06 12:00 IST   |   Update On 2025-12-06 12:00:00 IST
  • உள்நாட்டில் அதிகளவில் விமானங்களை இயக்கும் இண்டிகோ நிறுவனம் சிக்கல்களை சந்தித்து வருகிறது.
  • சென்னையில் இருந்து கோவை இடையேயான விமான கட்டணம் ரூ.49,400-ஆக உயர்ந்துள்ளது.

உள்ளாட்டு விமான பயணங்களில் விமானிகள் மற்றும் பணியாளர்களுக்கான புதிய பணி நேரக்கட்டுப்பாடு கடந்த 1-ந்தேதி முதல் அமலுக்கு வந்தது. இதன்படி விமானிகள் தொடர்ச்சியாக 18 மணி நேரம் வேலை பார்க்கலாம் என்ற விதியை திருத்தி 8 மணி நேரமாக குறைத்தது. விமானிகளின் விடுப்பு நேரம் முன்பு வாரத்திற்கு 36 மணி நேரமாக இருந்தது. அது தற்போது 48 மணி நேரமாக அதிகரித்தது.

மேற்கண்டவை உள்ளிட்ட பல்வேறு புதிய நடைமுறைகளை அமல்படுத்த மற்ற விமான நிறுவனங்கள் படிப்படியாக தேவையான ஏற்பாடுகளை செய்தது. ஆனால் இண்டிகோ விமான நிறுவனம் இதில் மெத்தனம் காட்டியதாக விமானிகள் கூட்டமைப்பு குற்றம்சாட்டியது.

இதன் காரணமாக உள்நாட்டில் அதிகளவில் விமானங்களை இயக்கும் இண்டிகோ நிறுவனம் சிக்கல்களை சந்தித்து வருகிறது. கடந்த 3 நாட்களாக அந்த விமானங்கள் தாமதம் மற்றும் ஏராளமான விமானங்கள் ரத்து காரணமாக பயணிகள் பரிதவித்தனர்.

நேற்று 4-வது நாளாக இதே சூழ்நிலை நீடித்ததால் ஒரேநாளில் 1,000-க்கும் மேற்பட்ட இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. டெல்லியில் சுமார் 220 விமானங்கள், பெங்களூருவில் 100-க்கும் மேற்பட்ட விமானங்களும், ஐதராபாத்தில் 90-க்கும் மேற்பட்ட விமானங்களும் ரத்து செய்யப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

நாட்டின் நிதி தலைநகரான மும்பையில் மட்டும் 104 இண்டிகோ விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. மேலும் இயக்கப்பட்ட விமானங்களும் கடும் கால தாமதத்தை சந்தித்தன. இதனால் நாட்டில் உள்ள முக்கிய விமான நிலையங்களில் நூற்றுக்கணக்கான பயணிகள் சிரமங்களை எதிர்கொண்டனர்.

இந்நிலையில் இண்டிகோ விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதால் சென்னையில் விமான கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது.

* சென்னையில் இருந்து கோவை இடையேயான விமான கட்டணம் ரூ.49,400-ஆக உயர்ந்துள்ளது.

* சென்னையில் இருந்து கொச்சிக்கு விமான கட்டணம் ரூ.41,000-ஆக உயர்ந்துள்ளது.

* சென்னையில் இருந்து டெல்லிக்கு விமான கட்டணம் ரூ.35,000-ஆக உயர்ந்துள்ளது.

* சென்னையில் இருந்து திருச்சிக்கு விமான கட்டணம் ரூ.26,000-ஆக உயர்ந்துள்ளது.

* சென்னையில் இருந்து பெங்களூரு செல்ல விமான கட்டணம் ரூ.25,000-ஆக உயர்ந்துள்ளது.

* சென்னையில் இருந்து கோவைக்கு நாளை செல்ல விமான கட்டணம் ரூ.71,000-ஆக உயர்ந்துள்ளது.

Tags:    

Similar News