தமிழ்நாடு செய்திகள்

#TVKVijay திருச்சியில் விஜய் மாநாடு நடத்த திட்டம்? - அரசியல் களத்தில் பரபரப்பு

Published On 2026-03-07 09:16 IST   |   Update On 2026-03-07 09:16:00 IST
  • திருச்சி சிறுகனூர் பகுதியில் தி.மு.க. மாநில மாநாட்டை நடத்துகிறது.
  • தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பஞ்சப்பூர் அருகே வருகிற 11-ந் தேதி பிரமாண்ட பொதுக்கூட்டம் நடக்கிறது.

திருச்சி என்றாலே திருப்புமுனை என சொல்வதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுவது உண்டு. தமிழ்நாட்டு வரலாற்றில் இந்தி திணிப்புக்கு எதிராக முக்கிய போராட்டங்கள் நடைபெற்ற இடம் திருச்சி. அது மட்டுமல்ல, முதன் முதலில் 1957-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. போட்டியிடலாமா? வேண்டாமா? என கருத்து கேட்கப்பட்ட இடம் இதுதான். 1972-ம் ஆண்டு தி.மு.க.வில் இருந்து வெளியேறிய எம்.ஜி.ஆர். முதன்முதலில் பொதுக்கூட்டம் நடத்தி மக்களிடம் நியாயம் கேட்டதும் இங்கு தான்.

இப்படி வரலாற்று பின்னணி ஒருபுறம் இருந்தாலும், தமிழகத்தின் மையப் பகுதியில் திருச்சி மாவட்டம் அமைந்து இருப்பதால் தொண்டர்களை ஒருங்கிணைக்க வசதியாக இருக்கும் என்பதாலும் அரசியல் கட்சியினர் திருச்சியை தேர்வு செய்கிறார்கள். தற்போது தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே பிரசாரம், பொதுக்கூட்டம், மாநாடு என்று நடத்தி வருவதால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கி விட்டது. நாம் தமிழர் கட்சி சார்பில் கடந்த மாதம் 21-ந் தேதி திருச்சியில் மாநாடு நடத்தினர். இந்த மாநாட்டில் 234 தொகுதிகளின் வேட்பாளர்களையும் ஒரே மேடையில் நிற்க வைத்து அந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகப்படுத்தினார்.

அடுத்தபடியாக வருகிற 9-ந் தேதி (திங்கட்கிழமை) திருச்சி சிறுகனூர் பகுதியில் தி.மு.க. மாநில மாநாட்டை நடத்துகிறது. சுமார் 10 லட்சம் பேர் திரளும் அளவுக்கு பிரமாண்டமாக இந்த மாநாடு நடைபெறும் என்று அந்த கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பஞ்சப்பூர் அருகே வருகிற 11-ந் தேதி (புதன்கிழமை) பிரமாண்ட பொதுக்கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, மத்திய மந்திரி அமித்ஷா ஆகியோர் கலந்து கொண்டு பேச உள்ளனர்.

இந்த நிலையில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் இந்த மாத இறுதியில் திருச்சியில் மாநாடு நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், திருச்சியில் த.வெ.க. தலைவர் விஜய் நடத்தவுள்ள மாநாடு அந்த கட்சிக்கு திருப்புமுனையை ஏற்படுத்தும் என கருதுகிறார்கள். மேலும் இந்த மாநாட்டில் த.வெ.க. வேட்பாளர்களை அறிமுகம் செய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

தி.மு.க., அ.தி.மு.க. என பிரதான அரசியல் கட்சிகள் திருச்சியில் நடத்திய மாநாடு, பொதுக்கூட்டங்கள் அந்த கட்சிகளுக்கு எப்படி திருப்புமுனையை ஏற்படுத்தியதோ, அதேபோல் தங்களுக்கும் திருச்சி திருப்புமுனையை தரும் என்ற எதிர்பார்ப்பில் அடுத்தடுத்து ஒவ்வொரு அரசியல் கட்சிகளாக திருச்சியில் சங்கமித்து வருகின்றன. மொத்தத்தில் போட்டிப் போட்டு பலத்தை நிரூபிக்கும் அரசியல் கட்சிகளால் கோடைகாலத்துக்கு முன்பே திருச்சியில் அனல் பறக்க தொடங்கிவிட்டது.

Tags:    

Similar News