செய்திகள்

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டை முடித்துக்கொண்டு இந்தியா திரும்பினார் பிரதமர் மோடி

Published On 2017-06-10 02:03 GMT   |   Update On 2017-06-10 02:03 GMT
கஜகஸ்தான் தலைநகர் அஸ்தானாவில் இரண்டு நாட்கள் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்துகொண்டு சிறப்பித்த பிரதமர் மோடி நாடு திரும்பினார்.
புதுடெல்லி:

கஜகஸ்தான் தலைநகர் அஸ்தானாவில் இரண்டு நாட்கள் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்துகொண்டு சிறப்பித்த பிரதமர் மோடி நாடு திரும்பினார்.

ரஷியா, சீனா, கிர்கிஸ்தான், கஜகஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் இணைந்து ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு என்ற கூட்டமைப்பை ஏற்படுத்தி உள்ளன. இந்த அமைப்பில் இந்தியா, பாகிஸ்தான், ஈரான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளுக்கு பார்வையாளர்கள் என்ற அந்தஸ்து வழங்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு கஜகஸ்தான் நாட்டின் தலைநகரான அஸ்தானாவில் கடந்த இரு தினங்களாக நடைபெற்றது. இந்த மாநாட்டின்போது, இந்தியாவும், பாகிஸ்தானும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் புதிய உறுப்பினர்களாக சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த மாநாட்டின் போது, பிரதமர் மோடி, கஜகஸ்தான், உஸ்பெஸ்கிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் சீன அதிபர் ஆகியோரைச் சந்தித்து அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும், மாநாட்டின் தொடக்க நாள் வரவேற்பு நிகழ்ச்சியில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர், நேற்று, மாநாட்டில் தனது உரையை மோடி ஆற்றினார்.

இதனையடுத்து, மாநாட்டை முடித்துக் கொண்டு மோடி இன்று அதிகாலை டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் வந்தடைந்தார். 
Tags:    

Similar News