செய்திகள்

கேரள அரசு மீது உச்ச நீதிமன்றத்தில் கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடர்ந்த முன்னாள் டி.ஜி.பி.

Published On 2017-04-29 12:23 GMT   |   Update On 2017-04-29 12:23 GMT
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி மீண்டும் பதவி வழங்காததால் கேரள அரசு மற்றும் தலைமைச் செயலாளர் மீது முன்னாள் டிஜிபி, உச்ச நீதிமன்றத்தில் கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார்.
புதுடெல்லி:

கேரள மாநிலத்தில் உம்மன்சாண்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்தபோது போலீஸ் டி.ஜி.பி.யாக இருந்தவர் சென்குமார். கேரளாவில் சட்டசபை தேர்தல் முடிந்து பினராய் விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கூட்டணி ஆட்சி பொறுப்பேற்றதும், சென்குமார் டி.ஜி.பி. பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார்.

இதற்கு கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய மாணவி ஜிஷா கொலை வழக்கை சரியாக விசாரிக்கவில்லை என்றும், புற்றிங்கல் கோவில் வெடி விபத்தை தடுக்க தவறி விட்டதாகவும் கூறி இவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

கேரள அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்குமார் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதனை விசாரித்த கோர்ட்டு சென்குமாரை பதவி நீக்கம் செய்த முடிவு தன்னிச்சையானது என்று கூறி அவருக்கு மீண்டும் பதவி வழங்க வேண்டுமென்று உத்தரவிட்டது. கடந்த திங்கட்கிழமை இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதையடுத்து சென்குமார், சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை அதனுடைய இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து அதனை கேரள தலைமை செயலாளருக்கு அனுப்பி வைத்தார். கோர்ட்டு உத்தரவுப்படி, தனக்கு மீண்டும் பதவி வழங்கவேண்டுமென்றும் கோரி இருந்தார்.

ஆனால் கேரள அரசு இதுவரை அவருக்கு பதவி வழங்கவில்லை. அதற்கான எந்த அறிவிப்பும் இதுவரை அரசு தரப்பில் வெளியிடப்படவில்லை.

எனவே, சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை செயல்படுத்தாத கேரள அரசு மற்றும் தலைமைச் செயலாளர் மீது உச்ச நீதிமன்றத்தில் சென்குமார் கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவர் தனது மனுவில், கோர்ட் உத்தரவை நிறைவேற்றாத தலைமைச் செயலாளர் நளினி நேட்டோவுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும், தன்னை பதவியில் மீண்டும் அமர்த்த உத்தரவிடுவதுடன், பதவி நீக்கம் செய்யப்பட்ட காலத்தை கணக்கிட்டு, தனது பதவிக் காலத்தை நீட்டிக்க உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கூறியுள்ளார்.
Tags:    

Similar News