search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேரள அரசு"

    • ஜனாதிபதிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்வது மிகவும் அரிய நிகழ்வாகும்.
    • மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காததை கண்டித்து கேரள அரசு ஏற்கனவே கவர்னர் ஆரிப் முகமது கானுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டை நாடியிருந்தது.

    புதுடெல்லி:

    மாநில அரசுகள் தங்கள் அதிகாரத்துக்கு உட்பட்ட துறைகளின் வளர்ச்சிக்காகவும், மக்களின் நலனுக்காகவும் பல்வேறு சட்டங்களை இயற்றி வருகின்றன.

    இதற்காக மாநில சட்டசபைகளில் நிறைவேற்றப்படும் மசோதாக்களை கவர்னர் மூலமாக ஜனாதிபதிக்கு அனுப்பி ஒப்புதல் கிடைத்தால் மட்டுமே அவை சட்டமாக அமலுக்கு வரும்.

    ஆனால் சமீப காலமாக பா.ஜனதா அல்லாத எதிர்க்கட்சிகள் ஆளும் பல மாநிலங்களில் அந்தந்த மாநில அரசுகள் நிறைவேற்றும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் கவர்னர்கள் காலதாமதம் செய்து வருகின்றனர். இதனால் அந்த மாநில அரசுக்கும், கவர்னர்களுக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. எனவே சில மாநில அரசுகள் சுப்ரீம் கோர்ட்டை நாட வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.

    அந்தவகையில் கேரளா, தமிழ்நாடு, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்கள் சுப்ரீம் கோர்ட்டை அணுகிய பிறகே சில மசோதாக்களுக்கு அந்தந்த மாநில கவர்னர்கள் ஒப்புதல் அளித்து உள்ளனர். ஆனாலும் சில மசோதாக்களை தொடர்ந்து அவர்கள் கிடப்பில் வைத்து உள்ளனர். இதில் கேரளாவை பொறுத்தவரை மசோதாக்களுக்கு ஒப்புதல் பெறும் விவகாரத்தில் ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசுக்கும், கவர்னர் முகமது ஆரிப் கானுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நீடித்து வருகிறது.மாநில சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பிய பல மசோதாக்களுக்கு அவர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டு உள்ளார். இதில் சில மசோதாக்களை அவர் ஜனாதிபதிக்கும் அனுப்பி வைத்திருக்கிறார்.

    அவற்றின் மீது ஜனாதிபதி தரப்பில் இருந்தும் நடவடிக்கை எடுக்கப்படாமல் அவை தொடர்ந்து கிடப்பிலேயே இருக்கின்றன.

    அதாவது கேரள அரசின் பல்கலைக்கழக சட்டங்கள் திருத்த (எண்.2) மசோதா 2021, கேரள கூட்டுறவு சங்கங்கள் திருத்த மசோதா 2022, பல்கலைக்கழக சட்டங்கள் திருத்த மசோதா 2022 மற்றும் பல்கலைக்கழக சட்டங்கள் திருத்த (எண்.3) மசோதா 2022 ஆகிய 4 மசோதாக்கள் ஜனாதிபதியிடமே நிலுவையில் வைக்கப்பட்டு உள்ளன.

    எனவே ஜனாதிபதிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் கேரள அரசு வழக்கு தொடர்ந்து உள்ளது.

    இதில் மத்திய அரசு, ஜனாதிபதியின் செயலாளர், கேரள கவர்னர் ஆரிப் முகமது கான், அவரது கூடுதல் செயலாளர் ஆகியோரை எதிர் மனுதாரர்களாக இணைத்து உள்ளது.

    இந்த மனுவில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ள கேரள அரசு, அவற்றில் முக்கியமாக கூறியிருப்பதாவது:-

    ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள இந்த 4 மசோதாக்கள் உள்பட 7 மசோதாக்களை ஒப்புதல் அளிக்காமல் கவர்னர் நிறுத்தி வைத்து உள்ளார். இது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என அறிவிக்க வேண்டும். கவர்னர்கள் நீண்ட காலத்துக்கும், காலவரையறை இன்றியும் மசோதாக்களை நிறுத்தி வைப்பது, பின்னர் அரசியலமைப்புடன் தொடர்புடைய எந்த காரணமும் இல்லாமல் ஜனாதிபதியின் பரிசீலனைக்கு மசோதாக்களை ஒதுக்குவது தன்னிச்சையானது மட்டுமின்றி அரசியலமைப்பு சட்டத்தின் 14-வது பிரிவை மீறுவது ஆகும்.

    முற்றிலும் மாநில எல்லைக்குள் இருக்கும் இந்த 4 மசோதாக்களை நிறுத்தி வைக்குமாறு எந்தவித காரணமும் கூறாமல் தன்னிச்சையாக மத்திய அரசு ஜனாதிபதிக்கு வழங்கிய ஆலோசனையும் அரசியல் சட்டப்பிரிவு 14-ஐ மீறுகிறது. மேலும் மாநில சட்டமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டங்களின் பலன்களை மறுப்பது, அரசியல் சட்டத்தின் 21-வது பிரிவின் கீழ் கேரள மாநில மக்களின் உரிமைகளை மறுக்கும் செயல்களாகும்.

    இவ்வாறு கேரள அரசு தனது மனுவில் குற்றம் சாட்டியுள்ளது.

    ஜனாதிபதிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்வது மிகவும் அரிய நிகழ்வாகும். அதை கேரள அரசு செய்திருப்பது நாடு முழுவதும் அதிர்வலைகளை கிளப்பி இருக்கிறது.

    மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காததை கண்டித்து கேரள அரசு ஏற்கனவே கவர்னர் ஆரிப் முகமது கானுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டை நாடியிருந்தது.

    இதில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கவர்னருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • தற்போதைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்கள் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது
    • நாளுக்கு நாள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் பயனர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது

    கேரளாவில் சுகாதாரத்துறை பணியாளர்கள் சமூக வலைத்தளங்களில் Content Creator-களாக இருக்கக் கூடாது என வழங்கப்பட உத்தரவு திரும்பப் பெறப்பட்டுள்ளது.

    தற்போதைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்கள் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது. இதில் யூட்யூப், இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் போன்றவை முக்கிய பங்கு வகித்து வருகிறது. நாளுக்கு நாள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் பயனர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதில் ஏராளமானோர் நடனமாடுவது, தங்கள் வியாபாரத்தை மேம்படுத்துவது போன்றவற்றை செய்து வருகிறார்கள். இதில் அரசு ஊழியர்களும் அடங்குவர்.

    கேரளாவில் சுகாதாரத்துறை பணியாளர்கள் பலர் சீருடையில் வேலை பார்க்கும் இடத்தில் இருந்து நடனமாடி வீடியோ பதிவேற்று வந்தனர். இந்நிலையில் சுகாதாரத் துறை பணியாளர்கள் சமூக வலைத்தளங்களில் Content Creator-களாக இருக்க கூடாது என கேரள அரசு மார்ச் 13-ம் தேதி சுற்றறிக்கை வெளியிட்டது.

    இந்த சுற்றறிக்கைக்கு எதிராக இந்திய மருத்துவ சங்கம் மற்றும் கேரள அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் ஆகியவை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மேலும் இந்த சுற்றறிக்கையை கேரள அரசு திரும்பப் பெற வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இந்நிலையில், அந்த சுற்றறிக்கைக்கு கடும் எதிர்ப்பு நிலையில், அந்த உத்தரவை கேரள அரசு திரும்பப் பெறப்பட்டுள்ளது.

    • குடியுரிமை திருத்தச் சட்டம் மக்களை மத ரீதியாக பிளவுபடுத்தும் சட்டம்.
    • பாராளுமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் சிஏஏ சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியது.

    திருவனந்தபுரம்:

    பாராளுமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தி உள்ளது. 2019-ம் ஆண்டு பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. 4 ஆண்டுக்குப் பிறகு தற்போது குடியுரிமை திருத்தச் சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.

    2014, டிசம்பர் 31-க்கு முன்னதாக பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேச நாடுகளில் இருந்து இந்தியாவில் புலம்பெயர்ந்த முஸ்லிம்கள் அல்லாத சிறுபான்மையினரான இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பவுத்தர்கள், பார்சிகள், கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க குடியுரிமை திருத்தச் சட்டம் வகை செய்கிறது.

    இதற்கிடையே, குடியுரிமை திருத்தச் சட்டம் மக்களை மத ரீதியாக பிளவுபடுத்தும் சட்டம். சிறுபான்மையினரை இரண்டாம் தர குடிமக்களாகக் கருதும் குடியுரிமை திருத்தச் சட்டம் கேரளாவில் அமல்படுத்தப்படாது என முதல் மந்திரி பினராயி விஜயன் அறிவித்தார்.

    இந்நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டதற்கு தடை விதிக்க வேண்டும் என கேரள அரசு சுப்ரீம் கோர்ட்டை நாடியுள்ளது.

    • பதப்படுத்தி வைக்கப்பட்ட சடலம் ஒன்றுக்கு ரூ.40,000-ம் வசூல்.
    • பதப்படுத்தப்படாத சடலம் ஒன்றுக்கு ரூ.20,000-ம் வசூலிக்கப்பட்டுள்ளன.

    உரிமை கோரப்படாத அல்லது அடையாளம் காணப்படாத சடலங்கள் (பிணங்கள்) கேரள அரசுக்கு வருவாய் ஈட்டி தந்துள்ளது.

    2008ம் ஆண்டு அரசு மருத்துவமனைகளில் இருந்து உரிமை கோரப்படாத இறந்தவர்களின் உடல்களை தனியார் மருத்துவமனைகளுக்கு விற்பனை செய்யும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    அன்று முதல் உரிமை கோரப்படாத 1,122 உடல்களை தனியார் மருத்துவக் கல்லூரிகளிடம் ஒப்படைத்ததன் மூலம் மாநில அரசு ரூ.3.66 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.

    பதப்படுத்தி வைக்கப்பட்ட சடலம் ஒன்றுக்கு ரூ.40,000-ம் பதப்படுத்தப்படாத சடலம் ஒன்றுக்கு ரூ.20,000-ம் வசூலிக்கப்பட்டுள்ளன.

    இந்த நடைமுறை தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கும் சாதகமாக உள்ளது. கற்பித்தல் நோக்கங்களுக்காக உடல்களைப் பெறுவது கடினமாக இருக்கும் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு இது பயனளிக்கிறது.

    அதன்படி, எர்ணாகுளம் பொது மருத்துவமனை அதிக எண்ணிக்கையிலான இறந்த உடல்களை விற்பனை செய்துள்ளது.

    கடந்த 16 ஆண்டுகளில் 599 உடல்களை மருத்துவமனை ஒப்படைத்துள்ளது. பட்டியலில் முதலிடத்தில் உள்ள மற்ற மருத்துவமனைகள் பரியாரம் மருத்துவக் கல்லூரி (166), திருச்சூர் மருத்துவக் கல்லூரி (157) மற்றும் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை (99) ஆகும்..

    2000-களின் தொடக்கத்தில்தான் மாநிலத்தில் தனியார் மருத்துவக் கல்லூரிகள் செயல்படத் தொடங்கின. தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், ஆய்வு நோக்கத்திற்காக அதிகமான சடலங்கள் தேவைப்படுகின்றன.

    60 மாணவர்கள் படிக்கும் மருத்துவக் கல்லூரியில் படிப்புக்காக 5 சடலங்கள் தேவை என்று விதி புத்தகம் கூறுகிறது. அதாவது மருத்துவக் கல்லூரியில் சேரும் ஒவ்வொரு 12 மாணவர்களுக்கும் ஒரு சடலம் தேவைப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தரிசனத்துக்கான உடனடி முன்பதிவு வசதி நேற்று முதல் நிறுத்தப்பட்டுள்ளது.
    • வருகிற 16-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை அதிகளவு பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    ஜோதி தரிசனத்துக்கான பூஜை நேரம் மற்றும் வழிமுறைகளை சபரிமலை திருவாங்கூர் தேவசம் போர்டு அறிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    நாளை மறுநாள் (ஜனவரி 13) வரை இணையதளத்தில் முன்பதிவு செய்த 80 ஆயிரம் போ் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவா். முன்பதிவு இல்லாத பக்தா்கள் யாரும் சன்னிதானத்துக்குள் அனுமதிக்கப்படமாட்டாா்கள். நாளை மறுநாள் (சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு மகர விளக்கு பிரசாத சுத்திக் கிரியைகள் நடைபெற உள்ளன.

    ஜனவரி 14-ந்தேதி உஷ பூஜைக்கு பிறகு பிம்ப சுத்தி பூஜை நடைபெற உள்ளது. ஜனவரி 15-ந்தேதி முன்பதிவு செய்த 40 ஆயிரம் போ் மட்டுமே சன்னிதானத்தில் அனுமதிக்கப்பட உள்ளனா்.

    மகரவிளக்கு பூஜைக்காக திங்கட்கிழமை(வருகிற15) அதிகாலை 2 மணிக்கு நடை திறக்கப்பட்டு, அதிகாலை 2.46 மணிக்கு மகரசங்கரம பூஜையும், நெய் அபிஷேகமும் நடைபெற உள்ளது. மகர விளக்கு பூஜையின் போது ஐயப்பனுக்கு பந்தள மன்னா் வழங்கிய திருவாபரணம் அணிவிக்கப்படுவது வழக்கம். அதன்படி, பந்தள அரண்மனையில் இருந்து ஐயப்பனுக்கு அணிவிக்கும் திருவாபரணங்கள் ஊா்வலமாக கொண்டு வரப்பட்டு, வருகிற15-ந்தேதி மாலை 6.30 மணிக்கு திருவாபரணத்தை ஐயப்பனுக்கு சாா்த்தி மாலை 6.30 மணிக்கு தீபாராதனை நடைபெறுகிறது. இதன் பின்னா் மகரஜோதி தரிசனமும், மகரவிளக்கு தரிசனமும் நடைபெறும்.

    மேலும் வருகிற15-ந் தேதியிலிருந்து வருகிற18-ந்தேதி வரை மணிமண்டபத்தில் இருந்து ஐயப்ப சாமியின் ஊா்வலம் நடைபெற உள்ளது. வருகிற 18-ந்தேதி வரை ஐயப்ப பக்தா்கள் திருவாபரணம் அணிந்த ஐயப்பனை தரிசனம் செய்யலாம். ஜனவரி 19-ந்தேதி வரை ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் நடைபெறும்.


    வருகிற 20-ந்தேதி அன்று மாளிகைப் பரத்தம்மன் சன்னதியில் குருதி பூஜை நடைபெறுகிறது. வருகிற 21-ந் தேதி காலையில் திருவாபரணங்கள் அடங்கிய பெட்டி பந்தளம் அரண்மனைக்கு திருப்பி கொண்டு செல்லப்படும். பின்னா் பந்தளம் மன்னரின் பிரதிநிதி ஐயப்பனை தரிசனம் செய்து விட்டு ஹரிவராசனம் பாடி கோவில் நடை அடைக்கப்படும்.

    பொங்கல் விடுமுறையையொட்டி 2 நாட்களுக்கு பெண்கள், குழந்தைகள் சபரிமலைக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்று கேரள அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

    இது தொடர்பாக பத்தனம்திட்டா மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பொங்கல் பண்டிகைக்கு அதிக விடுமுறை தினங்கள் என்பதாலும், அடுத்த 10 நாட்களில் மகர விளக்கு சீசன் நிறைவடைய இருப்பதாலும் பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை கருத்தில் கொண்டு அடுத்த சில நாட்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

    தரிசனத்துக்கான உடனடி முன்பதிவு வசதி நேற்று முதல் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் வருகிற 14-ந்தேதி 50 ஆயிரம் பேரும், 15-ந்தேதி 40 ஆயிரம் பேர் மட்டுமே தரிசனத்துக்காக இணைய வழியில் முன்பதிவு செய்ய முடியும்.

    கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு இவ்விரு நாட்களிலும் குழந்தைகள், பெண்கள் வருவதை தவிர்க்க வேண்டும். விடுமுறை முடிந்த பிறகு வருகிற 16-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை அதிகளவு பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கேரள சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் காலம் கடத்தி வந்ததாக அரசு புகார் கூறியது.
    • கேரள கவர்னர் ஆரிப் முகமது கான், நிலுவையில் வைத்திருந்த 8 மசோதாக்களில், ஒன்றுக்கு மட்டும் ஒப்புதல் அளித்துள்ளார்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் ஆளும் இடது சாரி ஆட்சிக்கும், கவர்னர் ஆரிப் முகமது கானுக்கும் மோதல் போக்கு நிலவி வருகிறது. கேரள சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் காலம் கடத்தி வந்ததாக அரசு புகார் கூறியது. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் பஞ்சாப் கவர்னருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், எந்த நடவடிக்கையும் இல்லாமல் அரசு அனுப்பி உள்ள மசோதாக்களை காலவரையின்றி நிலுவையில் வைத்திருக்க ஆளுநர்களுக்கு சுதந்திரம் அளிக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது. கேரள அரசின் கூடுதல் தலைமை செயலாளரிடம் இதனை குறிப்பிடும்படியும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் தெரிவித்தனர்.

    இந்த சூழலில் கேரள கவர்னர் ஆரிப் முகமது கான், நிலுவையில் வைத்திருந்த 8 மசோதாக்களில், ஒன்றுக்கு மட்டும் ஒப்புதல் அளித்துள்ளார். சர்ச்சைக்குரிய பல்கலைக்கழக திருத்த மசோதா உள்ளிட்ட 7 மசோதாக்களை, ஜனாதிபதி ஒப்புதலுக்காக அனுப்பி உள்ளதாக கவர்னர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

    • சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 8 மசோதாக்களில் 3 மசோதாக்கள் 2 ஆண்டுகளுக்கு மேலாக கவர்னர் நிலுவையில் வைத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
    • பஞ்சாப் மாநில அரசும், அம்மாநில கவர்னருக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    திருவனந்தபுரம்:

    கேரள கவர்னர் ஆரிப் முகம்மதுகானுக்கும், கேரள மாநில அரசுக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாக மோதல் போக்கு இருந்து வருகிறது. இதனால் சட்டமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்ட சில மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் வழங்காமல் காலம் தாழ்த்தி வந்தார்.

    இந்நிலையில் கவர்னர் ஆரிப் முகம்மதுகானுக்கு எதிராக கேரள அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளது. அதில், சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 8 மசோதாக்களில் 3 மசோதாக்கள் 2 ஆண்டுகளுக்கு மேலாக கவர்னர் நிலுவையில் வைத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை நிலுவையில் வைத்துள்ளதாக தமிழக கவர்னர் ஆர்.என். ரவி மீது கடந்த சில நாட்களுக்கு முன்பு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதேபோல் பஞ்சாப் மாநில அரசும், அம்மாநில கவர்னருக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • பொது இடங்களில் குப்பை கழிவுகளை கொட்டுவோருக்கு ரூ.250 அபராதம் விதிக்கப்படும்.
    • நீர்நிலைகளில் குப்பை கழிவுகளை போடுவோருக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்.

    திருவனந்தபுரம் :

    கேரளாவில் பொது இடங்கள், ஆறு உள்பட நீர்நிலைகளில் குப்பையை கொட்ட அரசு தடை விதித்து உள்ளது. ஆனாலும் இரவு நேரங்களில் யாருக்கும் தெரியாமல் குப்பை, கழிவுகளை கண்ட இடங்களிலும் சிலர் கொட்டிச் செல்கின்றனர். இந்த நிலையில், கேரள அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப் பில் கூறியிருப்பதாவது:-

    குப்பை, கழிவுகளை பொது இடங்களிலோ அல்லது ஆறு உள்ளிட்ட நீர் நிலைகளிலோ போடுபவர்கள் பற்றி புகைப்படம் அல்லது வீடியோ ஆதாரங்களுடன் உள்ளாட்சித்துறை அலுவலகங்களின் செயலாளர்களுக்கு தகவல் தெரிவிக்கும் பட்சத்தில், தகவல் தரும் நபர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும். குப்பை கொட்டுபவருக்கு அபராதமாக விதிக்கப்படும் தொகையில் 25 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.2500 வரை தகவல் தருபவருக்கு பரிசாக வழங்கப்படும். இதற்கான வாட்ஸ்அப் எண்கள், மெயில் ஐ.டி. ஆகியவை அந்தந்த பஞ்சாயத்துகள் மூலமாக விளம்பரப்படுத்தப்படும்.

    பொது இடங்களில் குப்பை கழிவுகளை கொட்டுவோருக்கு குறைந்தது ரூ.250 அபராதம் விதிக்கப்படும். நீர்நிலைகளில் குப்பை, கழிவுகளை போடுவோருக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • மத்திய மந்திரியிடம், விஜய்வசந்த் எம்.பி. மனு
    • 2004-ம் ஆண்டு வரையில் கேரள அரசு தண்ணீர் வழங்கி வந்தது.

    நாகர்கோவில்:

    மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை விஜய்வசந்த் எம்.பி. நேரில் சந்தித்து மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    குமரி மாவட்டம் விளவங்கோடு தாலுகாவில் 9,200 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். ரப்பர் விவசாயம் இங்கு அதிகமாக காணப்படுகிறது. கடந்த 2004-ம் ஆண்டு வரையில் நெய்யாறு அணைக்கட்டில் இருந்து இடதுகரை கால்வாய் வழியாக பாசனத்துக்கு கேரள அரசு தண்ணீர் வழங்கி வந்தது.

    தற்போது அந்த கால்வாயில் தண்ணீர் திறந்து விடுவதை கேரள அரசு திடீரென நிறுத்தி உள்ளது. 1956-ம் ஆண்டு மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது அன்று கேரளாவுடன் இருந்த விளவங்கோடு தாலுகாவுக்கு பாசனத்துக்கு நெய்யாறு அணைக்கட்டில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும் என கேரள அரசு உறுதியளித்து இருந்தது. 22 கிலோ மீட்டர் கொண்ட இந்த கால்வாய் வழியாக பெறப்படும் தண்ணீர் விளவங்கோடு தாலுகாவுக்குட்பட்ட 9 பஞ்சாயத்து நிலங்களை வளப்படுத்தி வந்தன.

    நெய்யாறு ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதி தமிழ்நாட்டில் அமைந் துள்ளது. மத்திய நீர்வள ஆணையம் இதை இருமாநிலங்களுக்கு இடையேயான நதி என்று அங்கீகரித்துள்ளது. ஆனால், கேரள அரசு இதை தங்கள் மாநிலத்திற்கு மட்டுமே சொந்தமான நதி என்று கூறி தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட மறுக்கிறது. மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் பல குழுக்கள் அமைத்து பலமுறை கேரள அரசை தொடர்பு கொண்டு தண்ணீர் திறந்து விட வலியுறுத்தப்பட்டது.

    ஆனால், கேரள அரசின் பிடிவாத போக்கால் இதுதொடர்பான வழக்கு கோர்ட்டில் உள்ளது. எனவே, விளவங்கோடு விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு நெய்யாறு இடதுகரை கால்வாய் வழியாக பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிட கேரள அரசை அறிவுறுத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சுமார் 45 வயது மதிக்க த்தக்க ஓருவர் திடீரென பஸ் மீது கல் வீசினார்.
    • தொழிலாளியான அவர், வீட்டிற்கு செல்ல பஸ்சை நிறுத்தும்படி கைகாட்டி உள்ளார்

    கன்னியாகுமரி :

    நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தில் இருந்து நேற்று நள்ளிரவு கேரள அரசு பஸ் 20 பயணிகளுடன் திருவனந்தபுரத்திற்கு புறப்பட்டது.

    பாப்பனங்கோடு பகுதி யைச் சேர்ந்த ஷாஜி பஸ்சை ஓட்டினார். தக்கலை பகுதியில் உள்ள நாகர்கோவில்-திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் பஸ் வரும் போது சாலையோரம் சுமார் 45 வயது மதிக்க த்தக்க ஓருவர் நின்று கொண்டிருந்தார். அவர் திடீரென பஸ் மீது கல் வீசினார்.

    இதில்பஸ்சின் முன்பக்க கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்தது. பஸ் டிரைவர் மற்றும் பயணி களுக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை. தொடர்ந்து பஸ்சை சாலையில் நிறுத்திய டிரைவர் ஷாஜி மற்றும் பயணிகள் சேர்ந்து கல்வீசிய நபரை பிடித்து தக்கலை போலீஸ் நிலையத்தில் ஒப்ப டைத்தனர்.

    கல்வீச்சு சம்பவம் குறித்து கேரள அரசு பஸ்சின் கண்டக்டர் சந்திர சேகர் புகார் அளித்தார். போலீசார் நடத்திய விசாரணையில் பஸ் மீது கல் வீசியவர் போதையில் இருந்தது உறுதியானது.

    போலீசார் அவரை கைது செய்து விசாரித்த போது, அவர் வில்லுக்குறியை சேர்ந்த ஆரோக்கிய அருள் ராஜேஷ் (வயது 45) என்பது தெரியவந்தது. மேலும் தொழிலாளியான அவர், வீட்டிற்கு செல்ல பஸ்சை நிறுத்தும்படி கைகாட்டி உள்ளார். ஆனால் பஸ்கள் நிற்காமல் சென்றுள்ளது.

    இதனால் ஆத்திரத்தில் கேரள அரசு பஸ் மீது கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டதாக தெரிவித்தார்.

    போதை ஆசாமி கேரளா அரசு பஸ்சில் மீது கல்வீசி தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ஊழியர்களுக்கு அரசு சம்பளம் வழங்க கூடாது.
    • கடந்த ஆண்டு நடந்த வேலை நிறுத்த போராட்டத்தின் போது அதில் பங்கேற்ற அரசு ஊழியர்களுக்கு அரசு சம்பளம் வழங்கி உள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 28 மற்றும் 29-ந்தேதிகளில் நடந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி கேரள ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

    கேரள ஐகோர்ட்டு தலைமை நீதிபதி தலைமையிலான டிவிசன் பென்ச் இந்த மனுவை விசாரித்தது.

    அப்போது நீதிபதிகள், கேரளாவில் சேவை மற்றும் நடத்தை விதிகளை மீறி நடக்கும் ஊழியர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

    அரசு ஊழியர்கள் அவர்களின் நடத்தை விதிகள், அரசாங்க சுற்றிக்கைகள் மற்றும் பொதுமக்களை பாதிக்கும் அறிவிப்புகளை மீறி வேலை நிறுத்தம் செய்ய சட்டப்பூர்வ உரிமை இல்லை.

    இதனை மீறி வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ஊழியர்களுக்கு அரசு சம்பளம் வழங்க கூடாது. கடந்த ஆண்டு நடந்த வேலை நிறுத்த போராட்டத்தின் போது அதில் பங்கேற்ற அரசு ஊழியர்களுக்கு அரசு சம்பளம் வழங்கி உள்ளது. இது அவர்களை ஊக்குவிப்பது போல அமையும். எனவே இனி இதுபோன்ற விவகாரங்களில் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

    • கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களின் வழியே தான் இந்த கழிவுகள் தமிழகத்தை சென்றடைகிறது.
    • கடமை தவறும் அனைத்து தமிழக அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டியது தமிழக அரசு மற்றும் முதலமைச்சரின் கடமை மற்றும் பொறுப்பு.

    சென்னை:

    பா.ஜனதா கட்சியின் மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தூய்மையில் கேரளா முதலிடம் வகிப்பதாகவும், தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அபராதம் விதிக்காத ஒரே மாநிலம் கேரளா என்றும், கழிவு மேலாண்மைத் துறையில் கேரளா குறிப்பிடத்தக்க தலையீடுகளை செய்துள்ளது என்றும் பசுமைத் தீர்ப்பாயம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது என்று பெருமையாக மார்தட்டி கொண்டு சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளது தமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.

    ஆனால், மருத்துவ கழிவுகள், மின்னனு கழிவுகள் உள்ளிட்ட அனைத்து கழிவுகளையும் லாரிகளில் எடுத்து சென்று அண்டை மாநிலமான நம் தமிழகத்தின் எல்லையோர கிராமங்களில் குறிப்பாக நீர்நிலைகளில் கொட்டி 'கேரளாவின் குப்பைத் தொட்டியாக' தமிழகத்தை மாற்றி கொண்டிருக்கிறது என்பதே உண்மை. இதனால், சுற்றுப்புற சூழலுக்கு கேட்டை விளைவிப்பதோடு தமிழர்களின் உயிரோடு விளையாடி கொண்டிருக்கிறது கேரள அரசு இந்த ஆபத்தான விளையாட்டை அமைதியாக வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது தமிழக அரசு.

    கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களின் வழியே தான் இந்த கழிவுகள் தமிழகத்தை சென்றடைகிறது. ஆனால், இந்த மாவட்ட எல்லைகளில் அமைந்துள்ள உள்ள போக்குவரத்து மற்றும் காவல்துறை சோதனை சாவடிகளில் உள்ள அதிகாரிகள் கண்டும் காணாமல் இருப்பது தான் பிரச்சினையின் துவக்கம். மேலும், இந்த கழிவுகளை கொட்டி விட்டு சென்ற பிறகு இதை எரித்து அழிப்பது யார்? அந்தந்த ஊராட்சி, நகராட்சி, பேரூராட்சி அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் இந்த கழிவுகள் குறித்து ஏன் குரல் எழுப்புவதில்லை என்பது புரியாத மர்மமாகவே உள்ளது.

    இனியும் அமைதி காக்காமல், தமிழகத்தின் சுற்றுப்புற சூழலை அழிக்கும் கேரள அரசை கண்டிப்பதோடு, கடமை தவறும் அனைத்து தமிழக அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டியது தமிழக அரசு மற்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் கடமை மற்றும் பொறுப்பு ஆகும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×