உள்ளூர் செய்திகள்

முதல் திருமணத்தை மறைத்து 2-வது திருமணம் செய்த கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி இளம்பெண் தர்ணா

Published On 2022-06-13 10:09 GMT   |   Update On 2022-06-13 10:09 GMT
  • பொதுமக்கள் தங்களது கோரிக்கை சம்பந்தமான மனுக்களை கலெக்டரிடம் கொடுத்தனர்.
  • 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அவர் திடீரென நுழைவு வாயில் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.

கோவை:

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று மாவட்ட கலெக்டர் சமீரன் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. பொதுமக்கள் தங்களது கோரிக்கை சம்பந்தமான மனுக்களை கலெக்டரிடம் கொடுத்தனர்.

இந்த நிலையில் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அவர் திடீரென நுழைவு வாயில் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பெண்ணிடம் விசாரணை நடத்தினார். அப்போது, அவர் கூறியதாவது:-

எனது பெயர் கவுரி(வயது30). நரசிம்ம நாயக்கன் பாளையத்தில் வசித்து வருகிறேன். கடந்த ஆண்டு பாலாஜி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டோம். இந்நிலையில் பாலாஜிக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தை இருப்பது சிறிது காலத்திற்கு முன்பு தான் எனக்கு தெரிய வந்தது. என்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்ட அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி துடியலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

கோவை மாவட்ட சூப்பிரண்டு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்து உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார். பின்னர் அவரை போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலெக்டரிடம் மனு அளிக்க அனுப்பி வைத்தனர். இதையடுத்து அவர் கலெக்டரிடம் மனு அளித்தார்.

Tags:    

Similar News