உள்ளூர் செய்திகள்
தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் இன்னும் 1.35 கோடி பேர் 2வது டோஸ் செலுத்திக் கொள்ளவில்லை- மா. சுப்பிரமணியன்

Published On 2022-03-19 13:48 GMT   |   Update On 2022-03-19 13:48 GMT
மாநிலத்தில் சுகாதாரத்துறை மூலம் சனிக்கிழமைகளில் நடத்தப்படும் மெகா தடுப்பூசி முகாமை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இன்று 25வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதற்காக தமிழகம் முழுவதும் முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதனை தமிழகத்தின் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பார்வையிட்டார்.

பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:-
    
தமிழகத்தில் தினசரி அடிப்படையில் இரண்டு லட்சம் தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டு வருகின்றன. ஆனால் 1,34,35,505 பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை. 51,82,974 பேர் இன்னும் முதல் டோஸ் பெறவில்லை. மாநிலத்தில் தடுப்பூசி போடுவது குறித்து சுகாதாரத்துறை மூலம் சனிக்கிழமைகளில் நடத்தப்படும் மெகா தடுப்பூசி முகாமை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

சுகாதாரத் துறையிடம் தற்போது 76,80,645 தடுப்பூசிகள் உள்ளன. தமிழகத்தில் மொத்தமுள்ள 12585 ஊராட்சிகளில் 3100 ஊராட்சிகள் தங்கள் பகுதியில் 100 சதவீத தடுப்பூசி நிலையை எட்டியுள்ளது. அவைகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கையொப்பமிடும் சான்றிதழ் விரைவில் வழங்கப்படும். 60 வயதுக்கு மேற்பட்ட 4,09,588 பேர் மூன்றாவது டோஸ் பெற்றுள்ளனர்.

18 வயதுக்கு மேற்பட்ட சுமார் 5,78,91,000 பேர்களில் 5,32,28,642 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும் 4,32,24,269 பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசிகளைப் போட்டுக் கொண்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படியுங்கள்.. கொரோனாவால் பள்ளிக்கு செல்லாததால் 80 சதவீதம் குழந்தைகள் வாசிக்கும், எழுதும் திறனை இழந்து விட்டனர்
Tags:    

Similar News