தமிழ்நாடு

700 கிலோ குட்கா கடத்தி வந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை படத்தில் காணலாம்.

அதிரடி சோதனை: தடை செய்யப்பட்ட 700 கிலோ குட்கா, பான்மசாலா போதை பொருட்கள் பறிமுதல்

Published On 2024-05-24 05:11 GMT   |   Update On 2024-05-24 05:11 GMT
  • ரூ.5 லட்சம் மதிப்புள்ள வலி நிவாரணி மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டது.
  • போலீசார் வாகனத்தில் இருந்து தப்பி ஓடிய நபரை தீவிரமாக தேடி வருகிறார்கள்.

ராமநாதபுரம்:

தமிழகம் முழுவதும் போதைப்பொருட்களுக்கு எதிரான நடவடிக்கையில் போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள். கடந்த வாரம் சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையான உத்தரவுகளை பிறப்பித்தார். அதன் பேரில் வெளி மாநிலங்களில் இருந்து குட்கா உள்ளிட் போதைப்பொருட்கள் கடத்தல் தடுக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே ராமநாதபுரம் மாவட்ட பகுதிகளில் போதைப் பொருள் கடத்துவதாக போலீஸ் சூப்பிரண்டு சந்தீஷூக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்ப டையில் கேணிக்கரை போலீசாருக்கு தகவல் தெரிவிக் கப்பட்டு இரவு ரோந்து பணிகள் மற்றும் வாகன சோதனைகளை தீவிரப்படுத்தினர்.

இந்நிலையில் கேணிக்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ் தலைமையிலான போலீசார் ராமநாதபுரம் நகர் பகுதிகளான கான்சாகிப் தெரு, நாகநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அதிரடியாக வாகன சோதனை மற்றும் தீவிர ரோந்து பணியினை மேற்கொண்டனர்.

அப்போது சந்தேகத்துக்கு இடமாக வந்த வாகனத்தை மறித்து சோதனை செய்தனர். அப்போது அதில் சுமார் 700 கிலோ எடையில் மூடை, மூடைகளாக தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு போலீசாரால் கைப்பற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து வாகனத்தையும் பறிமுதல் செய்த போலீசார் அதில் இருந்த 6 பேரையும் கைது செய்து தொடர்ந்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர். இந்த குட்கா மற்றும் பான்மசாலா பொருட்கள் எங்கிருந்து, யாருக்காக கடத்தி வரப்பட்டது என்று விசாரிக்கப்பட்டு வருகிறது.

மேலும், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் இரவு நேரங்களில் வாகன சோதனைகளில் தீவிரமாக ஈடுபட போலீஸ் சூப்பிரண்டு சந்தீஷ் அறிவுறுத்தியுள்ளார்.

இதேபோல் ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தை அடுத்த மண்டபம் அருகேயுள்ள வேதாளை பகுதியில் நள்ளிரவில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான முறையில் வந்த வாகனத்தை தடுத்து நிறுத்தினர்.

சற்று தூரம் தள்ளிச் சென்று நிறுத்தப்பட்ட வாகனத்தில் இருந்து டிரைவர் தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து அந்த வாகனத்தை சோதனை செய்த போது அதில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள வலி நிவாரணி மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டது.

இந்த மாத்திரைகள் இலங்கைக்கு கடத்துவதற்காக எடுத்து வரப்பட்டு இருக்கலாம் என்று கருதிய போலீசார் வாகனத்தில் இருந்து தப்பி ஓடிய நபரை தீவிரமாக தேடி வருகிறார்கள். 

Tags:    

Similar News