செய்திகள்
ராஜன் செல்லப்பா

சப்பாணியாகவும், பரட்டையாகவும் நடித்தவர்கள் மக்கள் மனதில் இடம் பெற முடியாது- ராஜன் செல்லப்பா

Published On 2020-03-05 11:11 GMT   |   Update On 2020-03-05 11:11 GMT
சப்பாணியாகவும், பரட்டையாகவும் நடித்தவர்கள் மக்கள் மனதில் இடம் பெற முடியாது. இன்னும் அரசியலுக்கு வராமல் இருக்கும் ரஜினிக்கு என்ன தெரியப்போகிறது என்று ராஜன் செல்லப்பா பேசியுள்ளார்.

மேலூர்:

மதுரை மாவட்டம் மேலூரில் அ.தி.மு.க. நகர் சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டம் மேலூர் பேருந்து நிலையம் முன்பாக நடைபெற்றது. இதில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்த கூட்டத்தில் மதுரை புறநகர் கிழக்கு அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேசியதாவது:-

புரட்சிதலைவர் எம்.ஜி.ஆர். கட்சி ஆரம்பித்து 5 ஆண்டுகளில் அ.தி.மு.க. ஆட்சியை பிடித்தது. பல்வேறு திட்டங்களை மக்களுக்கு வழங்கினார். இதில் சத்துணவு திட்டம் முக்கியமானது. இதனை இந்திய துணை கண்டமே பாராட்டியது.

எம்.ஜி.ஆரின் மறைவுக்கு பின் இயக்கத்தை அம்மா தனது ஆற்றலால் வழி நடத்தினார். இதனால் அ.தி.மு.க.வில் ஒன்றரை கோடி தொண்டர்கள் உள்ளனர். அம்மா மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை வழங்கினார். அதே போல் தற்போது அம்மாவின் ஆட்சியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிறப்பான முறையில் ஆட்சி செய்கிறார்.

சட்டசபையில் தி.மு.க. வினர் வெளிநடப்பு செய்கின்றனர். முதல்வர் பழனிசாமி துணை முதல்வர் ஓ.பி.எஸ். அமைச்சர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் வெளிநடப்பு செய்கின்றனர்.

தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் 2பேர் மறைவையடுத்து அவர்கள் 100-ல் இருந்து 98ஆக குறைந்து விட்டனர். விக்கிரவாண்டி, நாங்குநேரியில் நாங்கள் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம். இதன் மூலம் சட்டமன்றத்தில் அ.தி.மு.க. வின் பலம்124-ல் இருந்து 126 ஆக உயரும்.

எந்த காலத்திலும் எத்தனை ஆண்டுகளானாலும் ஸ்டாலின் முதல்வராக முடியாது. இந்த அரசு வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. அ.தி.மு.க. அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஒரே வருடத்தில் 11 மருத்துவ கல்லூரிகளை கொண்டு வந்துள்ளது.

பல்வேறு சாதனையை இந்த அரசு செய்து வருகிறது. இனிமேல் தி.மு.க. ஆட்சிக்கு வர முடியாது. வரும் 2021 சட்ட மன்ற தேர்தலில் அ.தி.மு.க. மகத்தான வெற்றி பெற்று மீண்டும் எடப்பாடி பழனாசாமி முதல்வராவது உறுதி.


சப்பாணியாகவும், பரட்டையாகவும் வந்தவர்கள் மக்கள் மனதில் இடம் பெற முடியாது. இன்னும் அரசியலுக்கு வராமல் இருக்கும் ரஜினிக்கு என்ன தெரியப்போகிறது.

புதிதாக வந்து தமிழக மக்களிடையே இடம்பிடிப்பது சாதாரண வி‌ஷயமில்லை. எம்.ஜி.ஆர் , ஜெயலலிதா நல்லவர்களாக நடித்து நல்லவர்களாக வாழ்ந்தனர். இன்றைக்கு இருக்கும் நடிகர்கள் பல்வேறு சிக்கல்களில் மாட்டியிருப்பவர்கள் திரைப்படத்தில் இருந்து அரசியலுக்கு வர துடிக்கின்றனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News