செய்திகள்
அமைச்சர் ஜெயக்குமார்

தமிழகத்தில் முன்கூட்டியே தேர்தல் நடக்காது- அமைச்சர் ஜெயக்குமார்

Published On 2020-02-24 05:39 GMT   |   Update On 2020-02-24 05:39 GMT
தமிழக சட்டமன்ற தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் என்ற தகவல் உண்மை அல்ல என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
ராயபுரம்:

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி ராயபுரம் அரசு ஆர்.எஸ்.ஆர்.எம். மகப்பேறு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு அமைச்சர் ஜெயக்குமார் ஒவ்வொரு ஆண்டும் தங்க மோதிரம் பரிசாக வழங்கி வருகிறார். இந்த வருடம் ஜெயலலிதா பிறந்தநாளான இன்று 7 குழந்தைகள் பிறந்துள்ளன.

ஜெயலலிதா பிறந்தநாளில் பிறந்த 7 குழந்தைகளுக்கு அமைச்சர் ஜெயக்குமார் தங்கமோதிரம் அணிவித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக அரசு கடன் வாங்கி கொள்ளை அடிக்கவில்லை. கடன் வாங்கி மூலதனமாக செயல்படுகிறது. திமுக ஆட்சி போல ஊதாரித்தனமாக செலவிடவில்லை. தி.மு.க. ஆட்சியில் வாங்கிய ரூ.1 லட்சம் கோடி கடனுக்கு அ.தி.மு.க. அரசு வட்டி கட்டி வருகிறது.



தி.மு.க. ஆட்சியில் டி.வி வழங்கியது ஊதாரித்தனமான செயல். விரக்தியின் உச்சியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இருக்கிறார். எப்படி ஆட்சியைக் கவிழ்க்கலாம் என்று எண்ணிக்கொண்டு இருக்கிறார்.

2021 தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைப்போம். தி.மு.க. ஆட்சியில் தமிழக உரிமைகளை விட்டு கொடுத்து அவர்கள் குடும்பம் மட்டும் பலனை அனுபவித்தனர். நிர்பயா நிதியை பயன்படுத்தி தான் அரசு பேருந்துகளில் பெண்களின் பாதுகாப்பிற்காக சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது, நிர்பயா நிதியை மாநில அரசு முழுமையாக பயன்படுத்தி வருகிறது.

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக வேளாண் மண்டல அறிவிப்பை பாராட்ட மறுக்கிறார்கள் தி.மு.க.வினர். தி.மு.க.வும், தி.மு.க. தலைவரும் தமிழக மக்களால் தனித்து விடப்படுவார்கள். தமிழக சட்டமன்றத்துக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெறும் என்ற தகவல் உண்மை அல்ல.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News