செய்திகள்
அமைச்சர் செல்லூர் ராஜூ

பிரதமர் கையில் அதிமுக இல்லை- அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி

Published On 2020-02-23 10:58 GMT   |   Update On 2020-02-23 10:58 GMT
பிரதமர் மோடி கையில் அதிமுக இல்லை, மக்கள் கையில் தான் உள்ளது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.

மதுரை:

ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு மதுரை கீழவாசல் தூய மரியன்னை பேராலயத்தில் சிறப்பு வழிபாடு, அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது. இதில் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

குடியுரிமை சட்டம் குறித்த அ.தி.மு.க.வின் நிலைப்பாட்டை முதல்வர், துணை முதல்வர் தெளிவுபடுத்தி உள்ளனர். தி.மு.க. வாக்குக்காக மக்களை பிரித்து வருகிறது. மத ரீதியாக மக்களை பிரித்து சிறுபான்மையினர் வாக்குகளை பெறுவதற்காக உள்நோக்கத்தோடு செயல்படுகிறது.

அ.தி.மு.க. ஆட்சியை தி.மு.க. எந்தக் குறையும் சொல்ல முடியாது. சிறு பான்மை மக்களை வாக்கு ரீதியாக பிரித்து செயல்படும் தி.மு.க.வின் எண்ணத்தை கண்டிக்கும் வகையில் ஓ.பி.எஸ். இ.பி.எஸ். கூட்டு அறிக்கை வெளியிட்டனர்.

ஜெயலலிதா சிறு பான்மை மக்களுக்கு காப்பாளராக, அரணாக எப்படி இருந்தாரோ அதே போன்று தற்போது முதல்வர் எடப்பாடியும் இஸ்லாமியர்களுக்கு காப்பாளராக, பாதுகாப்பு அரணாக இருந்து வருகிறார்.

சிறுபான்மையினருக்கு முதலமைச்சர் செய்துவரும் நலத்திட்டங்களை கண்டு தி.மு.க.வினர் பிரம்மிக்கின்றனர். ஆச்சரியப்படுகின்றனர்.

தமிழக அரசு செய்து வரும் குடிமராமத்து பணிகளை தி.மு.க. தலைவர் நன்றாக கவனிக்கட்டும். அதை நாங்கள் வரவேற்கிறோம். தி.மு.க. ஆட்சியில் செய்யாத குடிமராமத்துப் பணியை அ.தி.மு.க. ஆட்சியில் செய்து வருகிறோம். நாடு முழுக்க மக்கள் செழிப்போடு இருந்து வருகிறார்கள்.

அ.தி.மு.க. ஆட்சியில் செய்கிற திட்டங்களை பார்த்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் திருந்த வேண்டும். அவர் திருந்துவாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம். தி.மு.க.வின் குணமும் மனமும் மாறாது.

செல்லாத நோட்டான ராஜகண்ணப்பன் தி.மு.க. வில் இருந்து விலகி அ.தி. மு.க.வில் சேர்ந்து அ.தி. மு.க.வில் செல்லாமல் ஆகிவிட்டார். அவர் மீண்டும் தி.மு.க.வில் இணைகிறார். இதைக்கூட பெரிய வி‌ஷயமாக தி.மு.க. கருதுகிறது.

அ.தி.மு.க. ஆட்சிக்கும், கட்சிக்கும் ஏதாவது இடையூறு கொடுக்க வேண்டும் என மு.க. ஸ்டாலின் எண்ணுகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

பிரதமர் கையில் முதல்வர் இருந்தால் என்ன தவறு? என்று பா.ஜனதா தலைவர் முரளிதரராவ் பேசியது குறித்து அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் கேட்டபோது, அ.தி.மு.க. யார் கையிலும் இல்லை. மக்கள் கையில் மட்டுமே உள்ளது.


மக்களுக்காகத்தான் மத்திய அரசுடன் இணக்கமாக இருக்கிறோம். மத்திய அரசுடன் இணக்கமாக இருந்ததால்தான் பல்வேறு திட்டங்களை தமிழகத்தில் முதல்வர் சிறப்பாக செயல் படுத்தி வருகிறார் என்று பதிலளித்தார்.

Tags:    

Similar News