தமிழ்நாடு

தமிழகத்தில் மே 3-ந்தேதி வரை வெப்ப அலை தாக்கம் அதிகரிக்கும்

Published On 2024-04-30 04:53 GMT   |   Update On 2024-04-30 04:53 GMT
  • 14 மாவட்டங்களில் வெப்ப அலையின் தாக்கம் கடுமையாக இருக்கும் என்று வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
  • காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் கோடை மழை பரவலாக பெய்யும்.

சென்னை:

தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரை வெயில் கொளுத்துவதால் மக்கள் கடுமையான சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

குறிப்பாக வடதமிழக உள் மாவட்டங்களில் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்தே வெப்ப அலை வீசி வருகிறது. தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் படிப்படியாக பெரும்பாலான மாவட்டங்களிலும் ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப்பகுதிகளிலும் வெப்பம் அதிகரித்தது.

ஈரோடு, கரூர், சேலம், வேலூர், திருப்பூர் உள்ளிட்ட வட உள் மாவட்டங்களில் இயல்பைவிட வெப்பம் அதிகமாக இருந்து வருகிறது.

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக ஈரோட்டில் 109 டிகிரி வெயில் நேற்று பதிவானது.

இந்த நிலையில் இன்று முதல் வெப்பத்தின் தாக்கம் மேலும் அதிகரிக்கும். வெப்ப அலையின் தாக்கம் வட உள் மாவட்டங்களில் இயல்பைவிட 5 டிகிரி செல்சியசை விட அதிகரிக்கும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.

இன்று முதல் 4 நாட்களுக்கு வெப்ப அலை கடுமையாக வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இன்று முதல் 3-ந்தேதி வரை தமிழக உள் மாவட்டங்களில் இயல்பைவிட வெப்ப நிலை அதிகமாக இருக்கும். 109 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தக் கூடும் என்பதால் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடலோரம் இல்லாத இந்த மாவட்டங்களில் உஷ்ணம் அதிகமாக இருக்கும். இதனால் அசவுகரியமான சூழல் ஏற்படக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 14 மாவட்டங்களில் வெப்ப அலையின் தாக்கம் கடுமையாக இருக்கும் என்று வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கூறியதாவது:-

கோடை வெயிலின் தாக்கம் வருகிற 3 நாட்கள் கடுமையாக இருக்கும். இன்று வெப்ப அலை கடுமையாக இருக்க வாய்ப்புள்ளது. மே 1 முதல் 3-ந்தேதி வரை வட உள் மாவட்டங்களில் 43 டிகிரி செல்சியஸ் வரை வெப்பத்தின் தாக்கம் இருக்கும். அதாவது இயல்பைவிட 5 செல்சியஸ் அதிகமாகக் கூடும். 110 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பம் பதிவாக வாய்ப்பு உள்ளது.

மே 4-ந்தேதி முதல் கோடை மழை பெய்யக்கூடும். கடலோரப் பகுதிகள் தவிர வட மாவட்டங்கள் உள் மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் இடி-மின்னலுடன் கோடை மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது.

கோடை மழை மே 2-வது வாரம் வரை தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் பெய்யக்கூடும் என்பதால் வெப்பத்தின் தாக்கம் குறையும். சென்னையில் 50 சதவீதம் தான் மழைக்கு வாய்ப்பு உள்ளது. காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் கோடை மழை பரவலாக பெய்யும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News