அந்த கட்சி அழிந்து விடும்: பிரேமலதா விஜயகாந்த் சாபம்
- NDA-வில் தேமுதிக-விற்கு வெறும் 6 இடங்கள் என தகவல் வெளியிட்ட கட்சிக்கு அழிவு காலம் ஆரம்பமாகிவிட்டது.
- தேமுதிக குறித்து செய்தி வெளியிடுவதாக இருந்தால், எங்கள் அனுமதி இல்லாமல் போடக்கூடாது.
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஒவ்வொரு கட்சியும் தேர்தல் பணியை தீவிரப்படுத்த தொடங்கியுள்ளது. அந்த வகையில் திமுக- அதிமுக, தவெக ஆகிய கட்சிகள் தங்களது கூட்டணியை பலப்படுத்த காய் நகர்த்தி வருகின்றன.
இந்த நிலையில் அதிமுக- பாஜக இடையே கூட்டணி அமைந்துள்ள நிலையில், தமிழக பாஜக-வின் தேர்தல் பொறுப்பாளராக பியூஸ் கோயல் கடந்த வாரம் சென்னை வந்தார். அப்போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியோடு ஆலோசனை நடத்தினார்.
இந்த சந்திப்பின் போது கூட்டணிக்கு வரவுள்ள புதிய கட்சிகள், கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படவுள்ள தொகுதிகளின் எண்ணிக்கை தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து அதிமுக 170 தொகுதிகளிலும், பாஜக 25 தொகுதிகளிலும், பாமகவிற்கு 23 தொகுதிகளும், தேமுதிக-விற்கு 6 தொகுதிகள் என தகவல் வெளியானது.
ஆனால் இந்த தகவலை அதிமுக மற்றும் பாஜக மறுத்தது. தவறான தகவல் என விளக்கம் அளித்து இருந்தது.
இந்த நிலையில் சென்னையில் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தேமுதிக சார்பாக நடைபெற்ற விழாவில் அக்கட்சி பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், பியூஸ் கோயல் இபிஎஸ் சந்திப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பிரேமலதா விஜயகாந்த் பதில் அளித்ததாவது:-
அந்த கூட்டணியில் உள்ள கட்சிகள் சேர்ந்து கலந்து ஆலோசித்து இருக்கிறார்கள். அதை நாங்கள் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. அதிமுக- பாஜக இரண்டும்தான் தற்போது கூட்டணியாக உள்ளனர். அன்றைய கூட்டத்திற்கு பிறகு இந்தந்த கட்சிக்கு இத்தனை சீட்டு என்று அதிகாரப்பூர்வமாக யார் வந்து பத்திரிகையாளர்களுக்கு கொடுத்தார்கள்.
அதிகாரப்பூர்வமாக அந்த லிஸ்டை யார் கொடுத்தார்கள் என்று சொல்ல வேண்டும். அதன் பின்னர் பதில் சொல்கிறேன். சமூக வலைதள மூலமாக அன்று வெளியான அந்த ஒரு செய்தியை வைத்துக்கொண்டு அன்று முழுவதும் தொலைக்காட்சிகளில் விவாதம் செய்தவர்களுக்கு நான் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறேன்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் தேமுதிக-விற்கு வெறும் 6 இடங்கள் என தகவல் வெளியிட்ட கட்சிக்கு அழிவு காலம் ஆரம்பமாகிவிட்டது. தேமுதிக குறித்து செய்தி வெளியிடுவதாக இருந்தால், எங்கள் அனுமதி இல்லாமல் போடக்கூடாது.
ஜனவரி 9 மாநாடு அன்று யாருடன் கூட்டணி குறித்து அதிகாரபூர்வமாக அறிவிப்பேன் என்று சொல்லி இருக்கிறேன். நிர்வாகிகள் மாவட்டச் செயலாளர்கள் அனைவரிடமும் கலந்து ஆலோசனை செய்த பிறகுதான் கூட்டணி குறித்து ஒரு தெளிவான முடிவு எடுப்போம்.
இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.