தமிழ்நாடு செய்திகள்

'ஆட்சியில் பங்கும், கேட்கும் தொகுதிகளை தரும் பெரிய மனமும் தி.மு.க. தலைவருக்கு உள்ளது' - செல்வப்பெருந்தகை

Published On 2026-02-08 18:45 IST   |   Update On 2026-02-08 18:45:00 IST
  • ரூபாய் நோட்டில் உள்ள காந்தி படத்தை கூட நீக்குவார்கள்.
  • பா.ஜ.க-அ.தி.மு.க. கூட்டணியை தமிழ்நாடு மக்கள் புறக்கணிப்பார்கள்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி சட்டத்தின் பெயரை மாற்றிய மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் திருச்சியில் பாதயாத்திரை நடைபெற்றது. பின்னர் மரக்கடை பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கலந்துகொண்டு பேசியதாவது:-

 "மோடி தலைமையிலான மத்திய அரசு தொடர்ந்து தமிழகத்தை வஞ்சித்து வருகிறது. மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு ஒரு பைசா கூட ஒதுக்கவில்லை. ஆனால் நமது மாநிலம் மற்றும் பா.ஜ.க. ஆளாத மாநிலங்களில் இருந்து வசூலிக்கப்படும் ஜி.எஸ்.டி. வரியை அவர்கள் ஆளும் உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு பிரித்து வழங்குகிறார்கள்.

தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்திற்கு வைக்கப்பட்டிருந்த தேசத் தந்தை மகாத்மா காந்தி பெயரை நீக்கி இருக்கிறார்கள். ரூபாய் நோட்டில் உள்ள காந்தி படத்தை கூட அவர்கள் நீக்குவார்கள். அவர்கள் தமிழகத்தை ஒரு போதும் ஆள முடியாது. திருச்சி மலைக்கோட்டை நகரில் இருந்து சென்னை புனித ஜார்ஜ் கோட்டையை நாங்கள் பிடிக்க போகிறோம் என உறுதியாக தெரிவித்துக்கொள்கிறேன்.

மகாத்மா காந்தி பெயரை மீண்டும் வைக்கும் வரை எங்களது போராட்டம் ஓயாது. அதற்கான சபதத்தை இன்று ஏற்று இருக்கிறோம். 3 வேளாண்மை சட்டங்களை திரும்ப பெறுவதற்காக 13 மாதங்கள் போராட்டம் நடத்தி வெற்றி அடைந்ததை போல் இதற்கும் நாடு முழுவதும் போராட்டம் நடத்துவோம். இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், 

"தி.மு.க. கூட்டணியில் நாங்கள் சுமூகமாகத்தான் இருக்கிறோம். எந்தவிதமான இழுபறியும் இல்லை. காங்கிரஸ் எத்தனை இடங்களில் போட்டியிடும், ஆட்சியில் பங்கு போன்றவை குறித்து அகில இந்திய தலைமைதான் முடிவெடுக்கும். அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் என்பது தான் எங்கள் அனைவரின் விருப்பம். நாங்கள் கேட்கும் தொகுதிகளை கொடுக்கும் அளவிற்கு தி.மு.க. தலைவருக்கு பெரிய மனது உள்ளது. அதேபோல் ஆட்சியில் பங்கு தரும் மனசும் அவருக்கு இருக்கிறது.

எம்.பி.க்கள் தன்னை தாக்க முயற்சித்தார்கள் என உண்மைக்கு புறம்பான செய்தியை பிரதமர் கூறியுள்ளார். இதுபோல் எந்த பிரதமரும் பேசியதில்லை. பிரதமர் மோடி ஏன் இப்படி பேசுகிறார் என்பதை நாட்டு மக்கள் அனைவரும் பார்த்து கொண்டு தான் இருக்கிறார்கள். தமிழ்நாட்டின் உரிமைகள் அனைத்தையும் பா.ஜ.க. அரசு பறித்து விட்டது. பட்ஜெட்டில் ஒரு பைசா கூட தமிழ்நாட்டிற்கு ஒதுக்கவில்லை. பா.ஜ.க-அ.தி.மு.க. கூட்டணியை தமிழ்நாடு மக்கள் புறக்கணிப்பார்கள் என தெரிந்தே தமிழ்நாட்டை அவர்கள் புறக்கணித்து உள்ளார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து ஆட்சியில் பங்கு தருகிறோம் எனக் கூறும் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறீர்களா? என்ற கேள்விக்கு நாங்கள் என்ன பங்காளிகளா? பங்கு தருவதற்கு என பதில் அளித்தார். 

Tags:    

Similar News