தமிழ்நாடு செய்திகள்

விஜய் கட்சியில் பதவி கிடைக்காத விரக்தி: அஜிதா ஆக்னல் தற்கொலை முயற்சி

Published On 2025-12-25 16:04 IST   |   Update On 2025-12-25 16:04:00 IST
  • தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்திருந்தார்.
  • ஆனால் சாமுவேல்ராஜ் என்பவருக்கு வழங்கப்பட்டதால் விஜய் காரை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

தமிழக வெற்றிக் கழகம் கட்சி ரீதியாக 120 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு புதிய பொறுப்பாளர்களை த.வெ.க. தலைவர் விஜய் நியமனம் செய்தார். தூத்துக்குடி மாவட்டத்திற்கு புதிய மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் அறிவிப்பு இதுவரை வெளியிடபடாமல் இருந்தது.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்திற்கான புதிய நிர்வாகிகள் பட்டியலை நேற்றுமுன்தினம் கட்சி தலைவர் விஜய் வெளியிட்டார். தூத்துக்குடி மத்திய மாவட்டத்திற்கு எஸ்.டி.ஆர். சாமுவேல்ராஜ், வடகிழக்கு மாவட்டத்திற்கு ஏ.கே. மகேஷ்வரன், புறநகர் மாவட்டத்திற்கு மதன்ராஜா, தெற்கு மாவட்டத்திற்கு விர்ஜின் ஆரோக்கிய பிரைட்டர், வடக்கு மாவட்டத்திற்கு பாலசுப்பிரமணியன் ஆகியோரும் நியமனம் செய்யப்பட்டனர்.

மேலும் மாவட்ட இணைச் செயலாளர், பொருளாளர், 2 துணைச் செயலாளர் பதவிகளையும் கட்சி தலைவர் விஜய் நேற்று அறிவித்து புதிய நிர்வாகிகளுக்கு பனையூர் கட்சி அலுவலகத்தில் சான்றிதழை வழங்கினார்.

தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர் பதவி தனக்கு கிடைக்கும் என தூத்துக்குடியை சேர்ந்த அஜிதா ஆக்னல் எதிர்பார்த்து இருந்தார்.

ஆனால் அந்த பதவிக்கு சாமுவேல்ராஜ் நியமனம் செய்யப்படுவதை அறிந்து பனையூர் த.வெ.க. தலைமை அலுவலகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதுடன் கட்சி அலுவலகம் வந்த விஜய் காரை தனது ஆதரவாளர்களுடன் மறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பாதுகாவலர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் போராட்டக்காரர்களை விலக்கி விஜய் காரை தலைமை அலுவலகத்திற்குள் அனுப்பி வைத்தனர். இதை தொடர்ந்து அஜிதா ஆக்னல் கட்சி அலுவலகத்தின் நுழைவு வாயிலில் தர்ணா போராட்டம் நடத்தினார். தொடர்ந்து த.வெ.க. நிர்வாகிகள் அவருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட நிலையில் அஜிதா ஆக்னல் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த நிலையில் அளவுக்கு அதிகமாக தூக்கமாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடல்நிலை மோசமானால் தற்போது தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதற்கிடையே அஜிதா ஆக்னல் "இறுதி மூச்சு உள்ளவரை என் தாய் கழகமான தமிழக வெற்றிக் கழகத்தோடும் எம் தலைவர் தளபதி விஜய் யோடு மட்டும்தான் எனது அரசியல் பயணம் தொடரும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

Tags:    

Similar News