செய்திகள்
கோப்பு படம்

திருவள்ளூர் பகுதியில் வேளாண்துறை வழங்கிய விதை நெல்லில் கலப்படம்

Published On 2019-11-12 09:39 GMT   |   Update On 2019-11-12 09:39 GMT
திருவள்ளூர் பகுதியில் வேளாண்துறை வழங்கிய விதை நெல்லில் கலப்படம் உள்ளதாக விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர்:

திருவள்ளூர் மாவட்டத்தில் வேளாண் தொழிலில் அதிகமானோர் ஈடுபட்டு வருகின்றனர். கரும்பு, வாழை, காய்கறிகள், தானியங்கள் பயிர் செய்யப்பட்டு வருகின்றன.

இப்பகுதியில் நவரை, சொர்ணவாரி மற்றும் சம்பா அதிக அளவில் பயிரிடப்பட்டு வருகிறது.

மாவட்டத்தில் 52 ஆயிரம் ஹெக்டேரில் நெல் பயிரிடப்பட்டுள்ளது.இதற்காக வேளாண்துறை சார்பில் சம்பா பருவத்துக்கான நெல் பயிரிடும் வகையில், நெல் விதைகள் விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கப்பட்டன.

விவசாயிகள், வட்டார வேளாண்மை வளர்ச்சி அலுவலகத்தில் நெல் விதைகளை மானியத்தில் வாங்கிப் பயிரிட்டனர்.

இதேபோல் கடம்பத்தூர் காரணி, பிரியாங்குப்பம், திருப்பாச்சூர், விடையூர் மற்றும் ஊத்துக்கோட்டை பகுதிகளில் கடம்பத்தூர், எல்லாபுரம் வட்டார வேளாண்மை வளர்ச்சி அலுவலகங்களில் நெல் விதைகளை வாங்கி சுமார் 300 ஏக்கரில் பயிரிட்டுள்ளனர்.

இந்த நிலையில், பாதியளவு பயிர் நன்றாக வளர்ந்த நிலையில், கதிர் வராமல் இருப்பதை அறிந்து விவசாயிகள் அதிர்ச்சியும், கண்ணீரும் விட்டு வருகிறார்கள். பயிரை ஆய்வு செய்ததில் டி.கே.எம் 13, கோ-51 என்ற நெல் ரகங்கள் கலப்படமாக இருந்தது தெரியவந்தது.

இதனால் பயிர் தற்போது பாதி விளைந்த நிலையிலும், பாதி விளையாத நிலையிலும் உள்ளது தெரிந்தது.

இதற்கிடையே 25 நாள்களில் பாதி விளையாமல் இருப்பதால் விவசாயிகள் நஷ்டமடையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து காரணியைச் சேர்ந்த விவசாயி சங்கர் கூறியதாவது:-

இப்பகுதியில் 5 ஏக்கரில் சம்பா நெல் சாகுபடி செய்துள்ளேன். இதேபோல், 300க்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் சாகுபடி செய்துள்ளனர். இதற்கான விதை கடம் பத்தூர், எல்லாபுரம் வட்டார வேளாண்மை வளர்ச்சி அலுவலகங்களில் டி.கே.எம்13 நெல் விதைகளை மானியத்தில் வாங்கி பயிர் செய்தோம். இப்பயிர் நாற்றங்கால் பயிருடன் 90 நாள்களில் விளையக்கூடியது.

ஆனால் தற்போது 70 நாட்கள் ஆன நிலையில் பயிர் கதிர் தள்ளியுள்ளது. இன்னும் 20 அல்லது 25 நாள்களில் அறுவடைக்கு வரும். இதற்கிடையே பாதி விளைந்த நிலையில், பாதி கதிர் தள்ளாத நிலையில் கலப்பட நெல்லாகவும் உள்ளது. அதை ஆய்வு செய்ததில், 120 நாள் விளையக்கூடிய டி.கே.எம்-13 நெல் விதை கலப்படம் இருந்தது தெரியவந்தது. ஒரு ஏக்கருக்கு உழவு, நாற்றங்கால், உரம் ஆகியவை குறைந்தது ரூ. 18 என முதல் ரூ. 20 ஆயிரம் செலவாகிறது.

இதில், ஒரு ஏக்கரில் விளைந்தால் 30 முதல் 35 மூட்டைகள் கிடைக்கும். ஆனால், தற்போது பாதி விளைந்தும், விளையாத நிலையில் உள்ளதால் நஷ்டம் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே வேளாண்மைத் துறை மகசூல் பாதிப்புக்கு ஏற்ப இழப்பீடு பெற்றுத் தர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து வேளாண்மைத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘வட்டார வேளாண்மை வளர்ச்சி அலுவலகங்களில் மானியத்தில் வழங்கியதில், கலப்படம் உள்ளதாக விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட வயல்களில் கலப்பட நெல்விதை எவ்வளவு கலந்துள்ளது என்பதை நேரடியாக ஆய்வு செய்தால்தான் தெரியவரும்’ என்றனர்.
Tags:    

Similar News