செய்திகள்
கோப்புப்படம்

பாராளுமன்ற தேர்தலில் பிரதமரை உருவாக்கும் சக்தியாக திமுக விளங்கும்- முக ஸ்டாலின்

Published On 2019-02-17 08:23 GMT   |   Update On 2019-02-17 08:23 GMT
வருகிற பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றிபெற்று பிரதமரை உருவாக்கும் சக்தியாக தி.மு.க. விளங்கும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். #DMK #MKStalin
கள்ளக்குறிச்சி:

விழுப்புரம் மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயனின் இல்ல திருமண வரவேற்பு விழா இன்று கள்ளக்குறிச்சியில் நடைபெற்றது.

இதில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி பேசியதாவது:-

விழுப்புரம் மாவட்டம் தி.மு.க.வின் சொந்த மாவட்டம் ஆகும். இந்த மாவட்டத்தில் நான் யாருடைய துணை இல்லாமலும், பாதுகாப்பு இல்லாமலும் தனியாக ஒவ்வொரு கிராமத்துக்கு சென்றாலும் மக்கள் நான் யார் என்பதை அறிவார்கள்.

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவரது சொந்த தொகுதியான எடப்பாடிக்கு போலீஸ் பாதுகாப்பு இல்லாமல் தனியாக மக்களை சந்திக்க சென்றால் அவர் யார் என்று மக்களுக்கு தெரியாது. அந்த அளவுக்குதான் எடப்பாடி பழனிசாமி ஆட்சி செய்து வருகிறார்.


ஓ.பன்னீர்செல்வம் முதல்-அமைச்சராக வருவதற்கு முன்னால் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பாதங்களை வணங்கி பதவிக்கு வந்தார். ஆனால் எடப்பாடி பழனிசாமி பூச்சிபோல் தவழ்ந்துகொண்டு சசிகலா மூலமாக முதல்-அமைச்சராக வந்தவர். இவருக்கு உறுதுணையாக இருந்தவர்களை ஏமாற்றிவிட்டு முதல்- அமைச்சரானவர்தான் எடப்பாடி பழனிசாமி.

நான் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும்போதே தி.மு.க.வின் உறுப்பினராக இருந்து இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு சிறைக்கு சென்றேன். அதுபோல் பல்வேறு போராட்டங்களை சந்தித்துதான் தற்போது தி.மு.க.வின் தலைவராக பதவி ஏற்றுள்ளேன்.

தி.மு.க. சார்பில் முதன்முதலாக விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள கல்வராயன்மலையில் தான் தி.மு.க. இளைஞரணி தொடங்கப்பட்டது.

வருகிற பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றிபெற்று பிரதமரை உருவாக்கும் சக்தியாக தி.மு.க. விளங்கும். விவசாயிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் என்ன செய்துள்ளது. விவசாயிகள் வங்கிகளில் கடன்வாங்கி அதனை அடைக்கமுடியாமல் தற்கொலை செய்துள்ளார்கள்.

ஆனால் மத்திய அரசு வருகிற பாராளுமன்ற தேர்தலையொட்டி கண்துடைப்புபோல ரூ.6 ஆயிரம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

அதுபோல் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் ஏழை குடும்பத்தினருக்கு ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். வருகிற பாராளுமன்ற தேர்தலுடன் தமிழக சட்டசபைக்கும் தேர்தல் வரும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

18 எம்.எல்.ஏ.க்கள் முதல்-அமைச்சரை மாற்றவேண்டும் என்று மனு கொடுத்து வழக்கும் தொடர்ந்துள்ளனர். அவர்களை தமிழக அரசு பதவி நீக்கம் செய்துள்ளது.

மார்ச் முதல் வாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்களின் தகுதிநீக்க வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வரஉள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி அரசு நீடிக்காது.

மத்திய அரசு அ.தி.மு.க.வை மிரட்டி கூட்டணிக்கு பணிய வைத்துள்ளது. கூட்டணிக்கு வரவில்லை என்றால் வருமானவரித்துறை மூலமாக சோதனை நடத்தி அ.தி.மு.க. அரசின் ஊழல்களை வெளிபடுத்துவோம் என்று மிரட்டி வருகிறது.

தமிழகத்தில் மெட்ரோ ரெயில் திட்டத்தை முதலில் கொண்டுவந்தவர் கலைஞர் கருணாநிதிதான். அப்போது மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு அ.தி.மு.க. அரசு எதிர்ப்பு தெரிவித்தது. தற்போது அந்த திட்டத்துக்கு சொந்தம் கொண்டாடுகிறார்கள்.

நான் உள்ளாட்சிதுறை அமைச்சராக இருந்தபோது கிராமம் கிராமமாக சென்று ஆய்வு செய்தேன். ஆனால் அ.தி.மு.க. அமைச்சர் தன்மீது தேவையற்ற புகார்களை கூறுகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார். #DMK #MKStalin
Tags:    

Similar News