செய்திகள்

உயர் வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு- பாராளுமன்றத்தில் அன்புமணி எதிர்க்காதது ஏன்? திருமாவளவன் கேள்வி

Published On 2019-01-09 10:25 GMT   |   Update On 2019-01-09 10:25 GMT
முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்ட மசோதாவை மோடி அரசு கொண்டு வந்தபோது பாராளுமன்றத்தில் அன்புமணி எதிர்க்காதது ஏன்? என்று திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். #thirumavalavan #anbumani

சென்னை:

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்ட மசோதாவை மோடி அரசு கொண்டு வந்தபோது பாராளுமன்றத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் உறுப்பினர் அன்புமணி அதை எதிர்க்காதது ஏன்?. பாஜகவுடன் கூட்டணி அமைப்பதற்காக சமூக நீதியைப் பலியிடுகிறார்களா?

எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் உடனுக்குடன் அறிக்கை விடுவதில் கவனம் செலுத்தும் மருத்துவர் ராமதாஸ் இந்தப் பிரச்சனையில் பாஜக அரசைக் கண்டித்து அறிக்கை விடாதது ஏன்? அன்புமணி விடுத்த அறிக்கையே போதுமென்று மவுனம் காக்கிறாரா? எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைப்பதற்கு இதனால் எந்த சிக்கலும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதுதானே அவருடைய மவுனத்துக்குக் காரணம்?


மோடி அரசின் மோசடிக்கு மறைமுக ஆதரவு அளித்ததன்மூலம் அரசியல் ஆதாயத்துக்காகத்தான் சமூக நீதி பற்றி பாமக பேசுகிறது என்பது அம்பலமாகியுள்ளது. இந்த ‘நாடக அரசியலை’ பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார். #thirumavalavan #anbumani

Tags:    

Similar News