செய்திகள்

கஜா புயல் பாதிப்பு குறித்து விவாதிக்க அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்- அன்புமணி வலியுறுத்தல்

Published On 2018-11-23 20:57 GMT   |   Update On 2018-11-23 20:57 GMT
‘கஜா புயல் பாதிப்பு குறித்து அனைத்து கட்சி கூட்டத்தை தமிழக அரசு கூட்டி விவாதித்து, மத்திய அரசிடம் போதிய நிவாரண தொகையை பெற வேண்டும்’ என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். #anbumani #gajacyclone
சென்னை:

பா.ம.க. இளைஞர் அணி தலைவரும், எம்.பி.யுமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கஜா புயல் பாதித்த பகுதிகளில் 2 நாட்கள் சென்று பார்வையிட்டேன். வரலாறு காணாத வகையில் பாதிக்கப்பட்டு உள்ளது. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் கடலூர், அரியலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. புயலின் வேகம் அதிகமாக இருந்ததால் கொடைக்கானலிலும் சேதமடைந்து உள்ளது. பலநூறு கிராமங்களில் மீட்பு பணிக்காக ஒரு அதிகாரிகள் கூட செல்லவில்லை. மழையால் வீடுகளை இழந்து பொதுமக்கள் முகாம் என்ற பெயரில் அமைக்கப்பட்டுள்ள பள்ளிகள் மற்றும் கோவில்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அங்கு போதிய அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை.

மத்திய அரசு அளிக்கும் நிதியை பெற்ற பின்னர் தான் மீட்பு பணியில் ஈடுபடுவோம் என்ற மனநிலையில் மாநில அரசு இருக்க கூடாது. உடனடியாக மீட்பு பணியில் இறங்க வேண்டும். பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமரும், மத்திய உள்துறை மந்திரி உள்ளிட்ட எவரும் பார்வையிட வரவில்லை. மாறாக கேரளாவில் புயல் பாதித்த பகுதிகளில் உடனடியாக பிரதமர் வந்து பார்வையிட்டு ரூ.500 கோடி நிவாரணமும் அறிவித்தார்.

எத்தனையோ புயல் வந்தும் மாநில அரசு பாடம் கற்பிக்கவில்லை என்றால் அதிகாரிகள் எதற்கு?, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் போன்றவை எதற்கு?. மீட்பு பணியும் நடக்கவில்லை, நிவாரணம் வழங்குவதற்கான கணக்கெடுக்கும் பணியும் நடக்கவில்லை. குடியிருப்புகளும் சேதமடைந்ததுடன், கால்நடைகள் இறந்ததுடன், 10 லட்சம் தென்னை மரங்கள் சேதமடைந்து உள்ளன. இதுதவிர நெல்பயிர், கரும்பு, வாழை மற்றும் முந்திரிதோப்பு போன்றவையும் பாதிக்கப்பட்டு உள்ளன.

எனவே இறந்தவர்களுக்கு ரூ.50 லட்சமும், தென்னை மரங்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களின் வங்கி கணக்கில் உடனடி தேவைக்கு ரூ.50 ஆயிரம் போட வேண்டும். வேதாரண்யம் பகுதியில் உள்ள காடுகள் மற்றும் பறவைகள் சரணாலயமும் சேதமடைந்து உள்ளன.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் ரூ.1 கோடி மதிப்பில் பொருட்களும், சேவையும் அளித்து வருகிறோம். இதுவரை ரூ.20 லட்சம் மதிப்பில் பொருட்களை வழங்கி உள்ளோம். மருத்துவ சேவையையும் அளித்து வருகிறோம். இதனை அதிகரிக்கவும் திட்டமிட்டு உள்ளோம். தொற்றுநோய்கள் பரவாமல் தடுக்க அரசும் அதிகளவில் மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும். வானிலை மாற்றங்களால் எதிர்காலத்தில் இதுபோன்று பல புயல்களை சந்திக்க இருக்கிறோம். மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டதற்கு உள்ளாட்சி அமைப்புகள் இல்லாததும் ஒரு குறையாகும். புயல் பாதிப்பு குறித்து நாடாளுமன்றத்திலும் குரல் கொடுப்பேன்.

தமிழக அரசும் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி, விவாதித்து, குழு ஒன்றை அமைத்து டெல்லிக்கு சென்று மத்திய அரசிடம் பாதிப்புகளை கூறி உரிய நிவாரணத்தை பெற வேண்டும். 

இவ்வாறு அவர் பேசினார்.  #anbumani #gajacyclone
Tags:    

Similar News