செய்திகள்

பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண் 600 ஆக குறைப்பு - அமைச்சர் செங்கோட்டையன்

Published On 2018-09-15 07:02 GMT   |   Update On 2018-09-15 08:32 GMT
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பிளஸ்-2 மதிப்பெண் ஆயிரத்து 200-ல் இருந்து 600-ஆக குறைக்கப்படுவதாக அறிவித்துள்ளார். #TNMinister #Sengottaiyan #Plus2 #NEET
சென்னை:

உயர்கல்வி படிப்பதற்கு பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 ஒருங்கிணைந்த மதிப்பெண்கள் கணக்கில் எடுத்து கொள்ளப்படும் என்று கடந்த ஆண்டு தமிழக அரசு அறிவித்தது.

அதன் அடிப்படையில் பிளஸ்-1 தேர்வு பொதுத் தேர்வாக மாற்றப்பட்டது. பிளஸ்-1 தேர்வு 600 மதிப்பெண்ணிற்கும், பிளஸ்-2 தேர்வு 600 மதிப்பெண்ணிற்கும் நடத்தப்பட்டு 1200 மதிப்பெண் கணக்கில் எடுத்து கொள்ளப்பட்டது.

ஆனால் கடந்த ஆண்டு பிளஸ்-1 பொதுத் தேர்வு கடினமாக இருந்ததாக மாணவர்கள் குற்றம் சாட்டினர். அதனை தொடர்ந்து மாணவர்கள் மன அழுத்தத்தை குறைக்கவும் அவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும் பள்ளி கல்வித்துறை பிளஸ்-2 தேர்வு முறைகளில் சில மாற்றங்களை செய்துள்ளது.

இதுபற்றி அமைச்சர் செங்கோட்டையன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

10-ம், 11-ம் வகுப்பு 12-ம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் தொடர்ந்து மன அழுத்தத்தில் இருப்பதாக கூறப்பட்டது.

மாணவர்களின் மன அழுத்தத்தை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் வைக்கப்பட்டு இருக்கிறது. அவர்களின் கோரிக்கையை ஏற்று மாணவர்களின் மன அழுத்தத்தை போக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழக அரசு ஒரு ஆணையை பிறப்பித்து இருக்கிறது.

11, 12-ம் வகுப்பு மாணவர்கள் 1200 மதிப்பெண் பெற வேண்டும் என இருந்தது. அதனை ஒரே தேர்வாக மாற்றி (பிளஸ்-1ல் 600, பிளஸ்-2ல் 600) அமைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் பிளஸ்-1 தேர்வில் வெற்றி பெற வேண்டும்.

பிளஸ்-2 தேர்வில் 1200 மதிப்பெண் என முன்பு இருந்தது 600 ஆக குறைக்கப்பட்டுள்ளது. பிளஸ்-1 தேர்வில் வெற்றி பெற வேண்டும். பிளஸ்-2 தேர்வில் எடுக்கப்படும் 600 மதிப்பெண் உயர்கல்விக்கு செல்லத் தகுதியாக கருதப்படும்.

6 பாடத்திற்கு மட்டும் 600 மார்க் வீதம் உயர் கல்விக்கு செல்ல ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேல்நிலை முதலாம் ஆண்டு அல்லது இரண்டாம் ஆண்டு பொது தேர்விலோ அல்லது இரண்டு பொதுத் தேர்வுகளிலுமோ முழுமையாக தேர்ச்சி அடையாத மாணவர்களுக்கு மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் சமயம், அவ்விரு பொதுத்தேர்வுகளிலும் முழுமையாக தேர்ச்சி பெறும் வரை மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை மட்டுமே பதிவு செய்து மதிப்பெண் பட்டியல் வழங்கப்படும்.

இந்த ஆண்டு முதல் இது நடைமுறைக்கு வருகிறது. ஒருங்கிணைந்த மதிப்பெண் பட்டியல் களையப்பட்டு 11-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புக்கு தனித்தனியாக மதிப்பெண் பட்டியல் வழங்கப்பட இருக்கிறது.


நீட் தேர்வு எழுத ஒவ்வொரு ஒன்றியம் வாரியாக 50 மாணவர்களை தேர்வு செய்திருக்கிறோம். 320 ஆசிரியர்களுக்கு நீட் பயிற்சி அளிக்கப்பட்டு இருக்கிறது.

413 மையங்களில் 4300 ஆசிரியர்கள் பயிற்சி அளிப்பார்கள். இந்த ஆண்டு நீட் தேர்வை பொறுத்த வரையில் தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் முன் கூட்டியே எடுத்து வருகிறது.

எதிர்காலத்தில் மருத்துவ கல்லூரி, பொறியியல் கல்லூரிகளில் போட்டி தேர்வுகளை சமாளித்து சேர தகுதிப்படுத்தப்படுவார்கள்.

அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பாலிதீன் பைகளை பயன்படுத்தக்கூடாது என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். #TNMinister #Sengottaiyan #Plus2 #NEET
Tags:    

Similar News