தமிழ்நாடு

ஜூன் 4-ந் தேதிக்கு பிறகு தி.மு.க.-அ.தி.மு.க.வில் அதிரடி மாற்றங்கள்

Published On 2024-04-29 07:09 GMT   |   Update On 2024-04-29 07:09 GMT
  • எந்த தொகுதியில் ஓட்டு குறைந்தாலும் சம்பந்தப்பட்டவர்கள் பதில் சொல்ல வேண்டிய நிர்பந்தம் தி.மு.க.வில் ஏற்பட்டு உள்ளது.
  • தொகுதி வாரியாக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டிருந்ததால் அவர்களும் அறிக்கை தயாரித்து மேலிடத்துக்கு வழங்கி இருக்கிறார்கள்.

சென்னை:

தமிழகத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகளுக்கு இடையே 4 முனை போட்டி ஏற்பட்டது.

இப்போது ஒவ்வொரு கட்சியிலும் எந்தெந்த தொகுதியில் வெற்றி வாய்ப்பு எந்த அளவுக்கு இருக்கும் என்று சர்வே எடுத்து வைத்துள்ளனர். தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி அதிகாரத்தில் இருப்பதால் உளவுத்துறை ரிப்போர்ட் அவரிடம் ஏற்கனவே வழங்கப்பட்டு இருக்கிறது. அதே போல் தி.மு.க.வுக்கு சொந்தமான தேர்தல் வியூக நிறுவனமும் ஒரு சர்வே எடுத்து வழங்கி உள்ளது. அதில் தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று கூறப்பட்டுள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்து வருகின்றனர். அதன் காரணமாகவே தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கூட்டணி கட்சித் தலைவர்கள் மரியாதை நிமித்தமாக சென்று பார்த்து வாழ்த்து தெரிவித்துள்ளனர். இவர்கள் மட்டுமின்றி வேட்பாளர்களும் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். ஆனாலும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இதில் இன்னும் முழு திருப்தி அடையாமல் உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. காரணம் கடந்த 2019 பாராளுமன்றத் தேர்தலில் ஒவ்வொரு தொகுதியிலும் எவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்களோ அதைவிட இந்த தேர்தலில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தான் தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் என்று நினைக்கிறார்.

இதற்கு காரணம் தி.மு.க.வில் நிறுத்தப்பட்ட வசதியான சீனியர் வேட்பாளர்கள் பலர் முழுமையாக பணம் செலவழிக்காமல் கட்சிக்காரர்களை செலவழிக்க வைத்துவிட்டனர். இதில் பல கட்சிக்காரர்களுக்கு கடன் சுமை ஏற்பட்டுவிட்டது. இதனால் தி.மு.க. நிர்வாகிகளே சில வேட்பாளர்கள் மீது அதிருப்தியில் உள்ளனர். தேர்தலுக்கே இவர் பணம் செலவழிக்கவில்லை. ஜெயித்த பிறகு நமக்கு என்ன செய்துவிட போகிறார் என்ற விரக்தியில் பேச ஆரம்பித்துள்ளனர். இதுபற்றிய புகார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரை சென்றுள்ளது. அவரும் தேர்தல் முடிவு வரட்டும். அதன் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று பொறுமையாக உள்ளார். ஏற்கனவே தொகுதி வாரியாக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டிருந்ததால் அவர்களும் அறிக்கை தயாரித்து மேலிடத்துக்கு வழங்கி இருக்கிறார்கள். அதில் யார்-யார் சரிவர பணியாற்றவில்லை. முழுமையான அர்ப்பணிப்புடன் யார்-யார் பணியாற்றினார்கள் என்ற விவரங்களையும் அதில் குறிப்பிட்டு உள்ளனர்.

கடந்த தேர்தலை போல் லீடிங் அதிகமாக இருக்காது என்றும் தெரிவித்துள்ளனர். எனவே எந்த தொகுதியில் ஓட்டு குறைந்தாலும் சம்பந்தப்பட்டவர்கள் பதில் சொல்ல வேண்டிய நிர்பந்தம் தி.மு.க.வில் ஏற்பட்டு உள்ளது. எனவே ஜூன் 4-ந் தேதிக்கு பிறகு தி.மு.க. வில் அதிரடி மாற்றங்கள் இருக்கும் என்று கட்சி நிர்வாகிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அ.தி.மு.க.வில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு முழுவதும் சுற்றி பிரசாரம் செய்திருந்தாலும் சில மாவட்டங்களின் பொறுப்பாளர்கள் வேட்பாளர்களுக்கு சரிவர ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் அவரது கவனத்துக்கு வந்துள்ளது. அ.தி.மு.க. வேட்பாளர்களை அழைத்துச் சென்று ஓட்டுக் கேட்க வேண்டியது அந்தந்த மாவட்டச் செயலாளரின் கடமையாகும். இதற்காக எந்தெந்த பகுதிக்கு எப்போது செல்ல வேண்டும் என்று அட்டவணை தயாரித்து அதன்படி கட்சி நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இந்த பணியை கூட சில மாவட்டச் செயலாளர்கள் சரிவர செய்யவில்லை என்று ஒன்றிய செயலாளர்கள் தலைமைக் கழகத்துக்கு புகாராக அனுப்பி இருக்கிறார்கள். ஒவ்வொரு தொகுதியில் உள்ள பிரச்சினைகளையும் புகார்களையும் பட்டியலிட்டு அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.பொன்னையன் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் அறிக்கை சமர்ப்பித்து உள்ளதாக தெரிகிறது.

அ.தி.மு.க.வில் காஞ்சிபுரம், வடசென்னை, தென் சென்னை, கள்ளக்குறிச்சி உள்பட 15 தொகுதிகளின் வெற்றி வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் மீதமுள்ள 25 தொகுதிகளில் உள்ள கள நிலவரம் பற்றி கலக்கத்துடனே உள்ளனர். அ.தி.மு.க.வுக்கு 2-வது இடம் கிடைக்குமா? அல்லது 3-வது இடத்துக்கு தள்ளப்படுமா? என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது. இதனால் ஜூன் 4-ந்தேதி தேர்தல் முடிவு வந்த பிறகு அ.தி.மு.க.விலும் அதிரடி மாற்றங்கள் நிகழக் கூடும் என்று கட்சி நிர்வாகிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

Similar News