'தே.ஜ.கூட்டணி 210 இடங்களில் வென்று அதிமுக ஆட்சி அமைக்கும்' - எடப்பாடி பழனிசாமி
- காற்றில் கூட ஊழல்செய்யும் கட்சி திமுக.
- கூட்டணி கட்சியினரின் துணையோடு எதிரிகளை வீழ்த்தி வலிமையான இந்தியாவை, வளமான தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும்
மதுரை மண்டேலா நகரில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி மற்றும் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி,
"தமிழ்நாட்டை யார் ஆள வேண்டும், யார் ஆளக் கூடாது என்பதற்கு நடைபெறும் தேர்தல் விரைவில் வர இருக்கிறது. மக்கள் விரோத ஆட்சி அகற்றப்பட வேண்டும். அதற்காக அமைக்கப்பட்ட கூட்டணி தான் தேசிய ஜனநாயக கூட்டணி . தேர்தல் நேரத்தில் ஒன்றாக இணைந்து 234 தொகுதிகளிலும் சுறுசுறுப்பாக செயல்பட்டு, வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்ய அனைவரும் உழைக்க வேண்டும்.
நமது கூட்டணி 210 இடங்களில் வென்று அதிமுக ஆட்சி அமைக்கும். தென்மாவட்டத்தை பொறுத்தவரைக்கும், இரு தலைவர்களுக்கும் பக்கபலமாக இருந்த மக்கள் தென்மாவட்ட மக்கள். எம்ஜிஆர் முதல் தேர்தலை சந்தித்து தென்மாவட்டத்தில்தான். அதுபோல இந்தத் தேர்தலிலும் தென்மாவட்ட மக்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு துணைநிற்பார்கள்.
அதிமுகவை பொறுத்தவரைக்கும் சாதிக்கும் மதத்திற்கும் அப்பாற்பட்ட கட்சி. பல்வேறு சோதனைகளை கண்ட இயக்கம் அதிமுக. பிரதமர் பொறுப்பேற்றவுடன் இந்திய நாடே வளர்ச்சி அடைந்திருக்கிறது. இந்திய நாட்டைக் கண்டு பொறாமைப்படும் அளவுக்கு மோடி வளர்ச்சியை கொடுத்துள்ளார். மத்திய அரசால் தமிழ்நாட்டுக்கு எந்த வளர்ச்சியும் இல்லை என்று ஸ்டாலின் தவறான அவதூறுகளை பரப்புகிறார். ஆனால் இன்று பிரதமர் மோடி ரூ.4,400 கோடி திட்டத்தை தொடங்கி வைத்து விட்டு தான் வந்திருக்கிறார்.
காற்றில் கூட ஊழல்செய்யும் கட்சி திமுக. இந்தியாவில் எத்தனையோ மாநிலங்கள் இருக்கின்றன. ஆனால் ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே அரசு திமுகதான். ஊழல் நிறைந்த கட்சி, ஊழல் நிறைந்த அரசாங்கம் அகற்றப்பட வேண்டும் என செயல்பட்டு வருகிறோம். ஒரே இடத்தில் ஒரே ஆண்டில் 13 அரசு மருத்துவக் கல்லூரி பெற்றோம். எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகளும் நடந்து கொண்டு வருகிறது. அதையும் திமுக முடக்க நினைக்கிறது. மதுரை விமான நிலையம் விரிவாக்கத்துக்கு அதிமுக முயற்சி எடுத்தது. அந்த திட்டத்தையும் முடக்கியது திமுக. காவேரி-குண்டாறு திட்டத்தை திமுக முடக்கியது.
அதிமுக ஆட்சியில் எண்ணற்ற திட்டங்களை கொடுத்துள்ளோம். மோடி வந்தவுடன் பல்லாயிரக்கணக்கான கோடி திட்டங்களை தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு வழிவகை செய்துள்ளார். நம் ஆட்சி மலரவேண்டும். குடும்ப ஆட்சியை ஒழிக்க வேண்டும். மக்கள் விரோத ஆட்சியை அகற்ற வேண்டும். கூட்டணி கட்சியினரின் துணையோடு எதிரிகளை வீழ்த்தி வலிமையான இந்தியாவை, வளமான தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும்" என்றுப் பேசினார்.