தமிழ்நாடு

மீண்டும் சர்ச்சையை கிளப்பும் சம்பவம்: பின்பக்க கண்ணாடி இன்றி திறந்த நிலையில் இயங்கும் அரசு பஸ்

Published On 2024-04-29 07:19 GMT   |   Update On 2024-04-29 07:19 GMT
  • பஸ்சின் அடிப்பாகத்தின் தரம் குறித்தும், என்ஜின் உள்ளிட்டவைகள் முறையாக செயல்படுகிறதா? என்பது குறித்தும் போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
  • இதையும் பொருட்படுத்தாமல் தொழில் நிமித்தமாகவும், அத்தியாவசிய தேவைக்காகவும் பயணிகள் பயணம் செய்து வருகின்றனர்.

நாகப்பட்டினம்:

சமீபத்தில் திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து கிளம்பிய அரசு பஸ் புறப்பட்ட சில நேரத்தில் வளைவில் திரும்பும் போது பஸ்சின் இருக்கை கழன்று அதில் அமர்ந்திருந்த கண்டக்டர் வெளியே தூக்கி வீசப்பட்டார். இச்சம்பவம் சர்ச்சையை கிளப்பி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைத் தொடர்ந்து, கடந்த சில நாட்களாக அரசு பஸ்களின் உள்புறத்தில் மழை நீர் வடிகிறதா? பிரேக், ஆக்சிலேட்டர், ஸ்டீயரிங் மற்றும் பஸ்சின் அடிப்பாகத்தின் தரம் குறித்தும், என்ஜின் உள்ளிட்டவைகள் முறையாக செயல்படுகிறதா? என்பது குறித்தும் போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

இது ஒருபுறம் இருக்க, மற்றொருபுறம் பின்பக்க கண்ணாடி இல்லாமலேயே அரசு பஸ் ஒன்று இயங்கி வருகிறது. ஆம், வேளாங்கண்ணியில் இருந்து நாகை நோக்கி செல்லும் அரசு பஸ்சில் பின்புற கண்ணாடி இன்றி முழுவதுமாக திறந்த நிலையில் பஸ் புறப்பட்டது. வேளாங்கண்ணி கடற்கரையோர பகுதி என்பதால் வெளியில் வீசும் குளிர்காற்று பஸ்சின் உள்ளே தான் முழுவதுமாக வீசுகிறது. இதையும் பொருட்படுத்தாமல் தொழில் நிமித்தமாகவும், அத்தியாவசிய தேவைக்காகவும் பயணிகள் பயணம் செய்து வருகின்றனர்.

அவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகவே உள்ளது. இந்த பஸ்சின் பின்னால் சென்ற வாகன ஓட்டிகள் இதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது. திருச்சி பஸ் சம்பவம் பரவலாக பேசப்பட்டு வந்த சில நாட்களுக்குள் நாகையில் பின்பக்க கண்ணாடி இன்றி அரசு பஸ் இயங்கிய சம்பவம் மீண்டும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. 

Tags:    

Similar News