செய்திகள்

தட்டாஞ்சாவடியில் 2 வாலிபர்களுக்கு சரமாரி அரிவாள் வெட்டு

Published On 2018-09-05 16:16 GMT   |   Update On 2018-09-05 16:16 GMT
தட்டாஞ்சாவடியில் கொலை வழக்கில் ஜாமீனில் வந்தவர்கள் 2 வாலிபர்களை சரமாரியாக அரிவாளால் வெட்டிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி:

புதுவை திலாஸ்பேட்டையை சேர்ந்தவர் ஜாக்கி என்ற சரவணன். இவரை கடந்த 23.3.2018 அன்று தட்டாஞ்சாவடி மாந்தோப்பு பகுதியை சேர்ந்த ஹானஸ்ட்ராஜ் உள்ளிட்ட கும்பல் ஓட, ஓட வெட்டி கொலை செய்தது.

இந்த கொலை தொடர்பாக கோரிமேடு போலீசார் வழக்குபதிவு செய்து ஹானஸ்ட்ராஜ் மற்றும் அவரது கூட்டாளிகளான ஜீவானந்தபுரத்தை சேர்ந்த தர்மன், தட்டாஞ்சாவடி கெங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்த பிரசாந்த், குண்டுபாளையத்தை சேர்ந்த ராம்குமார் உள்ளிட்ட 13 பேரை கைது செய்தனர்.

இந்த நிலையில் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த தர்மன், பிரசாந்த், ராம்குமார் ஆகிய 3 பேரும் நிபந்தனை ஜாமீனில் காரைக்காலில் தங்கி தினமும் கையெழுத்திட்டு வந்தனர். பின்னர் நிபந்தனை தளர்த்தப்பட்டு புதுவையில் இருந்து வந்தனர்.

இதற்கிடையே கொலை செய்யப்பட்ட ஜாக்கி என்ற சரவணனின் நண்பர்களான தட்டாஞ்சாவடியை சேர்ந்த விக்கி மற்றும் இம்தியா சுக்கும், ஜாமீனில் வெளியே வந்த தர்மனுக்கும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டது. அப்போது தர்மனை இம்தியாஸ் தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று இரவு விக்கியும், இம்தியாசும் தட்டாஞ்சாவடி மெயின் ரோட்டில் நின்று பேசிக் கொண்டு இருந்தனர். அப்போது தர்மன், பிரசாந்த், ராம்குமார், மற்றொரு ராம்குமார் ஆகிய 4 பேர் மோட்டார் சைக்கிளில் வந்தனர்.

அவர்கள் அங்கு நின்று கொண்டிருந்த விக்கி மற்றும் இம்தியாசிடம் கொலை செய்து விட்டு ஜெயிலில் இருந்து வெளியே வந்துள்ள எங்களிடமே தகராறு செய் கிறீர்களா? என கூறி மறைத்து வைத்திருந்த வீச்சரிவாள்களை எடுத்து அவர்களை சரமாரியாக வெட்டினர். பின்னர் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது.

இதில் பலத்த காயம் அடைந்த விக்கி மற்றும் இந்தியாசை அந்த பகுதி மக்கள் மீட்டு கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதில் விக்கி மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்த புகாரின் பேரில் கோரிமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ் பெக்டர் வடிவழகன், உதவி சப்- இன்ஸ்பெக்டர் கணபதி ஆகியோர் வழக்கு பதிவு செய்து அரிவாளால் வெட்டிய தர்மன், பிரசாந்த், ராம்குமார், மற்றொரு ராம்குமார் ஆகிய 4 பேரையும் தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News