செய்திகள்

காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு மோடி அரசு நியாயம் வழங்கும்- எச். ராஜா பேட்டி

Published On 2018-04-08 10:51 GMT   |   Update On 2018-04-08 10:51 GMT
காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு மோடி அரசு தான் நியாயம் செய்ய முடியும். தி.மு.க. விவசாயிகளை ஏமாற்ற நினைக்கிறது என்று குன்னூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் எச்.ராஜா பேசினார். #hraja #pmmodi #cauveryissue

குன்னூர்:

நீலகிரி மாவட்டம் குன்னூரில் மத்திய பாரதீய ஜனதா அரசின் 4-ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பாரதீய ஜனதா தேசிய செயலாளர் எச். ராஜா பேசியதாவது-

கோவில் சொத்துக்களை பலர் அபகரித்து உள்ளனர். இதற்கு இந்து சமய அறநிலையத்துறை உடந்தையாக உள்ளது. சந்சை மதிப்பில் கோவில் சொத்துக்கள் மூலமாக ரூ. 6 ஆயிரம் கோடி முதல் 8 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும். இதன் மூலமாக இந்துக்களுக்கு இலவச கல்வி, மருத்துவம் வழங்கலாம்.

70 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் தான் பல ஊழல்கள் நடந்தன. இதை கடந்த 4 ஆண்டுகளாக மோடி சரி செய்து வருகிறார். 2019-ம் ஆண்டு பாரதீய ஜனதா ஆட்சிக்கு வந்தால் அனைத்தையும் சரி செய்து விடலாம்.

திரிபுராவைப் போல் தமிழகத்திலும் பா.ஜ.க. ஆட்சி அமைக்கும். பெட்ரோல், டீசல் விலை ஜி.எஸ்.டிக்குள் கொண்டு வரப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக எச். ராஜா நிருபர்களிடம் கூறியதாவது-

காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு துரோகம் செய்தது தி.மு.க. தான். மக்களை ஏமாற்றுவதற்காக தி.மு.க. நாடகமாடி வருகிறது.

தமிழக மக்கள் ஒத்துழைக்க மத்திய அரசு தீவிரமாக செயல்படுகிறது. தி.மு.க.வுடன் இணைந்து சீமான், மே 17 இயக்கம், திருமாவளவன், வேல்முருகன் உள்ளிட்டோர் மக்களிடையே பதட்டத்தை ஏற்படுத்த நினைக்கின்றனர்.

காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு மோடி அரசு தான் நியாயம் செய்ய முடியும். தி.மு.க. விவசாயிகளை ஏமாற்ற நினைக்கிறது.


நியூட்ரினோ திட்டத்துக்கு வைகோ நடை பயணம் செய்கிறார். அதில் எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் இந்த நடை பயணத்தை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பது சரி இல்லை. இத் திட்டத்தை அனுமதித்ததே தி.மு.க. தான்.

அண்ணா பல்கலைக் கழகத்திற்கு சூரப்பாவை துணை வேந்தராக நியமித்ததை குறை கூறுகிறார்கள். இந்த நியமனம் தவறு இல்லை. இதற்கு முன்பு அம்பேத்கார் சட்ட பல்கலைக் கழக துணை வேந்தராக கர்நாடகாவை சேர்ந்த விஜயகுமார் இருந்தார்.

இந்த பிரச்சினைகள் எல்லாம் மக்களிடம் எடுபடாது. கமல்ஹாசனின் பேச்சை மக்கள் கேட்கமாட்டார்கள்.

இவ்வாறு அவர் கூறினார். #tamilnews #hraja #pmmodi #cauveryissue

Tags:    

Similar News