செய்திகள்

அரசு கோரிக்கைகள் தொடர்பாக பிரதமரை நாராயணசாமி சந்தித்து பேசுகிறார்

Published On 2018-02-23 04:04 GMT   |   Update On 2018-02-23 04:04 GMT
புதுவை வரும் பிரதமர் நரேந்திர மோடியை லாஸ்பேட்டை விமான நிலையத்தில் அரசு கோரிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் நாராயணசாமி சந்தித்து பேசுகிறார்.
புதுச்சேரி:

பிரதமர் நரேந்திர மோடி ஆரோவில் பொன் விழாவில் பங்கேற்பதற்காக நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) புதுவை வருகிறார்.

காலை 10.45 மணிக்கு விமானத்தில் லாஸ்பேட்டை விமான நிலையத்துக்கு வரும் பிரதமர் மோடியை முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி மற்றும் பாரதிய ஜனதா நிர்வாகிகள் வரவேற்கிறார்கள்.

பின்னர் அங்கிருந்து கார் மூலம் பிரதமர் மோடி அரவிந்தர் ஆசிரமத்துக்கு வருகிறார். அங்கு அரவிந்தர் மற்றும் அன்னை சமாதியில் மலரஞ்சலி செலுத்தி தியானம் செய்கிறார்.

இதனைத்தொடர்ந்து மதியம் 12 மணிக்கு கார் மூலம் ஆரோவில் செல்கிறார். அங்கு நடைபெறும் பொன்விழாவில் பங்கேற்று பேசுகிறார்.

இதன் பின்னர் மதியம் 2 மணிக்கு லாஸ்பேட்டை விமான நிலையத்துக்கு திரும்பும் மோடி அங்கு அமைக்கப்பட்டுள்ள பாரதிய ஜனதா பொதுக்கூட்ட மேடையில் பேசுகிறார். பிறகு 4 மணிக்கு விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

பிரதமர் மோடி புதுவை வருகையையொட்டி புதுவை மற்றும் ஆரோவில்லில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. மேலும் பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகளும் புதுவையில் முகாமிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

இதற்கிடையே பிரதமர் மோடியை சந்தித்து பேச எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமிக்கு நேரம் ஒதுக்கப்பட்டு இருந்தது. ஆனால், முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் பிரதமர் மோடியை சந்திக்க நேரம் ஒதுக்கப்படாமல் இருந்தது.

தற்போது மோடியை சந்தித்து பேச முதல்- அமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து முதல்- அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

புதுவை வரும் பிரதமர் நரேந்திர மோடியை லாஸ்பேட்டை விமான நிலையத்தில் பிற்பகல் 3 மணிக்கு சந்தித்து பேச தனக்கும், அமைச்சர்களுக்கும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அப்போது அவரிடம் புதுவை மாநில வளர்ச்சி பணிகள் பற்றியும், மத்திய அரசு தரவேண்டிய நிதி பற்றியும் பேசுவோம்.

பிரதமருக்கு மாநில அரசு சார்பில் வரவேற்பு கொடுக்க பல இடங்களில் வரவேற்பு வளைவுகள் அமைக்க உள்ளோம். அவரது பயணம் சிறப்பாக இருக்கும்.


இவ்வாறு முதல்- அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

முன்னதாக பிரதமரின் வருகை தொடர்பான ஆலோசனை கூட்டம் புதுவை சட்டமன்ற கமிட்டி அறையில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு முதல்- அமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜகான், துணை சபாநாயகர் சிவக்கொழுந்து தலைமை செயலாளர் அஸ்வனி குமார், போலீஸ் டி.ஜி.பி. சுனில்குமார் கவுதம், அரசு செயலாளர்கள் அன்பரசு, கந்தவேலு, கலெக்டர் சத்யேந்திரசிங் துர்சாவத், போலீஸ் டி.ஐ.ஜி.க்கள் ராஜீவ்ரஞ்சன், சந்திரன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். #Tamilnews
Tags:    

Similar News