செய்திகள்
முருகானந்தம்

பொள்ளாச்சியில் காயமடைந்த ஓட்டல் தொழிலாளிக்கு கையில் ஆபரே‌ஷன் செய்த போது திடீர் மரணம்

Published On 2018-01-22 14:24 GMT   |   Update On 2018-01-22 14:24 GMT
பொள்ளாச்சியில் நடந்த விபத்தில் காயமடைந்த தொழிலாளிக்கு கையில் ஆபரேஷன் செய்யும் போது திடீரென அவர் பலியானார். இது குறித்து அவரது உறவினர்கள் தனியார் ஆஸ்பத்தியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொள்ளாச்சி:

பொள்ளாச்சி அருகே உள்ள புளியம்பட்டியை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 41). ஓட்டல் தொழிலாளி.

இவர் கடந்த 17-ந் தேதி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக கீழே விழுந்ததில் இடது கையில் பலத்த காயம் ஏற்பட்டது. உறவினர்கள் அவரை மீட்டு அப்பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

பரிசோதனையில் அவருக்கு கையில் எலும்பு முறிவு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று அவருக்கு அறுவை சிகிச்சை செய்வதற்காக ஆபரே‌ஷன் அறைக்கு அழைத்து சென்றனர். பின்னர் 3 மணி நேரம் கழித்து முருகானந்தம் இறந்து விட்டதாக டாக்டர் கூறி உள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் இறப்புகான காரணம் கேட்ட போது ஆபரே‌ஷன் செய்த போது முருகானந்தத்துக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாக கூறி உள்ளனர். இதைக்கேட்டதும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

ஆபரே‌ஷன் செய்த போது தவறான சிகிச்சை அளித்ததால் தான் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என கூறிய உறவினர்கள் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். முருகானந்தம் உயிரிழப்புக்கான உண்மை தன்மை பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிய வரும், அதன்பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர்.

இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு மருத்துவமணைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு இன்று முருகானந்தம் உடல் பிரேதபரிசோதனை நடக்கிறது.
Tags:    

Similar News