தமிழ்நாடு

ஆபத்தில் சிக்கியவரை காப்பாற்ற அபாய சங்கிலியை இழுத்தவர் தெறித்து ஓட்டம்- உதவி செய்பவர்களுக்கு உதவாத ரெயில்வே சட்டம்

Published On 2024-05-03 10:17 GMT   |   Update On 2024-05-03 10:17 GMT
  • ரெயில்வே பிளாட்பாரத்தில் பாதிக்கப்பட்ட குழந்தையும் அந்த குழந்தையின் தாயும் அழுது கொண்டிருந்ததை போலீசாரே பார்த்தனர்.
  • உதவி செய்தால் உபத்திரவத்தை அவர் அல்லவா சுமக்க வேண்டும்?

கண் முன்னால் எத்தனையோ பேர் ஆபத்துகளில் சிக்குகிறார்கள். ஆனாலும் சுற்றி இருப்பவர்கள் கண்டு கொள்ளாமல் போய்விடுகிறார்களே என்ற ஆதங்கம் எல்லோருக்கும் உண்டு. ஆனால் உதவி செய்யப் போய் உபத்திரவத்தில் மாட்டிக்கொண்டவர்களை பார்ப்பதால் தான் மற்றவர்களும் உதவிக்கு வர தயங்குகிறார்கள்.

இதை மெய்ப்பிக்கும் வகையில் சென்னை மாம்பலத்தில் நேற்று மாலை ஒரு சம்பவம் அரங்கேறியது. சென்னை கடற்கரையில் இருந்து மாலை 4:45 மணி அளவில் செங்கல்பட்டு நோக்கி மின்சார ரெயில் சென்று கொண்டிருந்தது. அந்த ரெயில் மாம்பலத்தில் நிறுத்தி பயணிகள் ஏறியதும் ரெயில் புறப்பட தொடங்கியது. அப்போது ஒரு சிறு குழந்தை தனியாக ரெயிலில் ஏறி விட, ஏற முடியாமல் நின்ற தாய் கதறி போட்ட கூச்சலால் விபத்து நேர்ந்ததைப் போல் ரெயில் நிலையத்தில் பயணிகள் அலற தொடங்கினார்கள். ரெயிலுக்குள் இருந்த பயணிகளும் பதட்டத்தோடு குரல் எழுப்பினார்கள்.

ஏதோ ஆபத்து நடந்திருக்கிறது என்று ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டார்கள். ஆனால் அதற்கு உடனடியாக என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி யாரும் சிந்திக்கவில்லை. அப்போது கிராமத்து வாசி ஒருவர் தனது மனைவியுடன் இருந்தவர் மின்னல் வேகத்தில் செயல்பட்டு அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தினார் அவ்வளவுதான். ரெயில்வே போலீசார் விரைந்து வந்தார்கள். ரெயில்வே ஊழியர்களும் ஓடி வந்தார்கள். இதற்கிடையில் ரெயில் பெட்டிக்குள் இருந்த பயணிகள் அபாய சங்கிலியை பிடித்து இழுத்தவரை ஏதோ தப்பு செய்துவிட்டவர் போல் அனைவரும் பார்க்கத் தொடங்கினார்கள். அதை பார்த்ததும் நமக்கு ஏதும் பிரச்சினை வருமோ என்று பயந்த அந்த நபர் தனது மனைவியை அழைத்துக்கொண்டு மெதுவாக இறங்கி அங்கிருந்து தெறித்து ஓடி விட்டார். அடுத்த சில நிமிடங்களில் அந்தப் பெட்டிக்குள் வந்த போலீசாரும், ரெயில்வே ஊழியர்களும் சங்கிலியை இழுத்தது யார் என்று கேட்டார்கள். யாரும் ஒழுங்காக பதில் சொல்லாததால் உருட்டி, மிரட்ட தொடங்கினார்கள் .

அப்போது ஏதோ ஒரு அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற முதியவர் எழுந்து போலீசாரிடம் இப்போ இதற்கு என்ன சார் பிரச்சினை? குழந்தை விழுந்ததால் சங்கிலியை இழுத்திருக்கிறார்கள்.

இதில் என்ன தவறு இருக்கிறது? என்று சாதாரணமாக கேட்டார். உடனே ஆத்திரம் அடைந்த போலீசார் ஏங்க ரெயிலில் பயணம் பண்ண ஆசையா? இல்லை போலீஸ் நிலையத்திற்கு வர ஆசையா? என்று குரலை உயர்த்தினார்கள். அதை கேட்டதும் நான் தான் சங்கிலியை இழுத்தேன். இப்போது அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று அவர் ஆத்திரப்பட்டார். உடனே அப்போ நீங்க வாங்க சார் போலீஸ் நிலையத்திற்கு என்று அவரை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றார்கள்.

அதை பார்த்து பரிதாபப்பட்ட இளைஞர் ஒருவர் போலீசாடம் என்ன சார் இது நியாயம்? ஆபத்து காலத்தில் யாரோ உதவி இருக்கிறார்கள். இதற்கு ஏன் இவ்வளவு பிரச்சனை என்றார். அவ்வளவுதான் போலீசுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது. உனக்கு என்னய்யா தெரியும்? சங்கிலியை ஒருவர் இழுத்தால் கீழே இறங்கி வந்து அந்தப் பிரச்சனைக்கு காரணத்தை சொல்லி அவர்களும் பாதிக்கப்பட்டவர்களும் சேர்ந்து எழுதிக் கொடுக்க வேண்டும். தெரியுமா உனக்கு? ஒழுங்காக வாயை மூடிக்கொண்டு போ என்று சவுண்டு விட்டதும் அந்த இளைஞரும் அடங்கிப் போனார்.

அப்புறம் ரெயில் நகர்ந்தது. ரெயில்களில் அவசர காலங்களில் இழுத்து ரெயிலை நிறுத்துவதற்கு தான் அபாய சங்கிலி வைத்துள்ளார்கள். இதை கிராமத்து வாசியாக இருந்தாலும் அந்த நபர் அறிந்து வைத்திருந்ததால் ரெயில்வே பிளாட்பாரமும் ரெயிலும் அல்லோகலப்பட்டபோது யாரும் முன் வராத நிலையில் அவர் துணிச்சலாக சென்று சங்கிலியை இழுத்து ரெயிலை நிறுத்தினார். அதற்காக சம்பந்தப்பட்டவர் போலீஸ் நிலையத்திற்கு வர வேண்டும். பாதிக்கப்பட்டவர் யார் என்று சொல்ல வேண்டும். இருவரும் சேர்ந்து மனு எழுதிக் கொடுக்க வேண்டும். என்றெல்லாம் விதிமுறைகளை சொன்னால் அவசர வேலைக்காக குடும்பத்துடன் சென்று கொண்டிருப்பவர் இதற்கெல்லாம் வர முடியுமா? போலீஸ் நிலையத்திற்கு சென்றால் எவ்வளவு நேரம் ஆகும் என்பது எல்லோருக்கும் தெரியும். அங்கு சென்ற பிறகும் உனக்கு ஏன் இந்த வேண்டாத வேலை? என்றெல்லாம் கேள்வி வரும். இதற்காகத்தான் யார் விழுந்தால் என்ன? யார் செத்தால் என்ன? என்று யாரும் உதவிக்கு வர மறுக்கிறார்கள். இந்த சம்பவத்தை பொறுத்தவரை ரெயில்வே பிளாட்பாரத்தில் பாதிக்கப்பட்ட குழந்தையும் அந்த குழந்தையின் தாயும் அழுது கொண்டிருந்ததை போலீசாரே பார்த்தனர்.

அப்படி இருக்கும்போது இதுதான் நடந்தது என்பதை உணர்ந்து ரெயிலை தொடர்ந்து செல்ல அனுமதிப்பதில் என்ன வந்து விடப் போகிறது? இந்த சிறு பிரச்சனைக்கு இவ்வளவு பெரிய பிரச்சனையை சந்திக்க வேண்டும் என்றால் ரெயில்களில் பயணிக்கும் போது யாரோ ஒருவன் கத்தியை காட்டி நகையை பறிக்கலாம், அல்லது ஒருவரை கொலை கூட செய்யலாம். அதை பார்த்து எந்தப் பயணி உதவி செய்ய முன்வருவார்? உதவி செய்தால் உபத்திரவத்தை அவர் அல்லவா சுமக்க வேண்டும்? காலம் மாறி இருக்கிறது என்கிறோம்.

எல்லாவற்றிலும் மாற்றங்கள் தேவை என்கிறோம். இந்த மாதிரி உதவாத சட்டங்களையும், விதிமுறைகளையும் வைத்துக்கொண்டு செயல்பட்டால் என்ன நடக்கும்? எத்தனையோ வழக்குகளில் என்னவெல்லாம் தகிடு தித்த வேலைகளை செய்கிறார்கள் இது ஒரு மனிதாபிமான உதவி. இதற்கும் நியாயமாக போலீசார் உதவினால் என்ன? யோசியுங்கள். உங்கள் வாழ்க்கை பயணம் மட்டுமல்ல எல்லோரது வாழ்க்கை பயணமும் சுகமாக அமைய வேண்டும்.

Tags:    

Similar News