சென்னை-புறநகர் பகுதிகளில் எடப்பாடி பழனிசாமி 4 நாட்கள் பிரசாரம்
- எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து பேசி உள்ளார்.
- அந்தந்த பகுதிகளை சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை சந்திப்பதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.
அந்த வகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் தேர்தலை சந்திப்பதற்கு ஆயத்தமாகி உள்ளார். தமிழகம் முழுவதும் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற சுற்றுப்பயணம் செய்து வரும் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து பேசி உள்ளார்.
இந்த நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று முதல் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்ய உள்ளார்.
திருவள்ளூர் தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட ஆவடி, அம்பத்தூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு சேர்த்து அம்பத்தூரில் இன்று மாலை 5 மணியளவில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொள்கிறார்.
திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட மாதவரத்தில் நாளை (22-ந்தேதி) மாலை 4 மணியளவில் பிரசாரம் மேற்கொள்ளும் எடப்பாடி பழனிசாமி மாலை 5 மணி அளவில் பொன்னேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் பேசுகிறார்.
அதன்பிறகு வருகிற 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் திருவள்ளூர் மத்திய மாவட்டம் மற்றும் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட பகுதிகளில் எடப்பாடி பழனிசாமி பொதுமக்களை சந்தித்து பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார்.
25-ந்தேதி (புதன்கிழமை) மதுரவாயல், பூந்தமல்லி ஆகிய தொகுதிகளுக்கும் சேர்த்து மதுரவாயல் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் மண்டப வளாகத்தில் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார்.
26-ந்தேதி (வியாழக்கிழமை) அன்று செங்கல்பட்டு மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட தாம்பரம், பல்லாவரம் ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கும் சேர்த்து பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் மாலை 4.30 மணியளவில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இப்படி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 8 சட்டமன்ற தொகுதிகளில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்வதையடுத்து மேற்கண்ட பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன. அந்தந்த பகுதிகளை சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.