எந்த பக்கம் இருந்தால் நல்லது என்பதை ஓ.பி.எஸ். முடிவு செய்யவேண்டும் - நயினார் நாகேந்திரன்
- தி.மு.க. அமைச்சர்கள் பலர் மீது நிறைய வழக்கு உள்ளது.
- தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய அனைத்து நிதிகளையும் மத்திய அரசு வழங்குகிறது.
திருச்சி:
திருச்சியில் இன்று பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மார்ச் 11-ந்தேதி பிரதமர் நரேந்திர மோடி திருச்சிக்கு வருகை தர உள்ளார். அன்றைய தினம் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பிரசாரம் செய்கிறார். அதற்காக இடம் தேர்வு செய்ய உள்ளோம். இடம் தேர்வு செய்து கூட்டணி கட்சிகளிடம் ஆலோசித்து எந்த இடத்தில் பொதுக்கூட்டம் வைப்பது என்பது தொடர் பான இறுதி முடிவை அறிவிப்போம்.
200 இடங்களில் வெற்றி பெறுவோம் என தி.மு.க.வினர் கூறி வருவதாக சொல்கிறீர்கள். ஆனால் 200 இடங்களில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை மக்கள் தான் முடிவு செய்வார்கள். தி.மு.க. அரசு தேர்தல் வாக்குறுதிகளை எத்தனை சதவீதம் நிறைவேற்றி உள்ளோம் என்பதை அக்கட்சி தலைவர்கள் மாற்றி மாற்றி ஆளுக்கு ஒரு கருத்து கூறுகிறார்கள். ஆனால் அவர்கள் 90 சதவீத தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. ஏற்கனவே பொய்யான வாக்குறுதியை கொடுத்தது போல் மீண்டும் பொய்யான வாக்குறுதிகளை தி.மு.க. அரசு கொடுக்கத் தொடங்கியுள்ளது.
இப்போது எங்களுக்கு உள்ள கூட்டணி 2021-ம் ஆண்டே இருந்திருந்தால் நாங்கள் அப்போது 110 இடங்களில் வெற்றி பெற்று இருப்போம். வரும் தேர்தலில் நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம். தி.மு.க. ஆட்சியில் 5 ஆண்டுகளும் சட்டம்-ஒழுங்கு சரியில்லை, கஞ்சா மிகுந்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.
கொங்கு பகுதிகளில் வயதானவர்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள். யாருக்கும் எந்த பாதுகாப்பும் இல்லை. 33 லாக்கப் மரணங்கள் நடந்துள்ளது. தமிழ்நாட்டில் நல்ல ஆட்சி நடைபெறவில்லை. பணப்பெட்டியை வாங்கிக் கொண்டுதான் தி.மு.க. கூட்டணியில் சேர்ந்து வருகிறார்கள். எங்கள் கூட்டணி வலுவாக உள்ளது. தி.மு.க. கூட்டணி வலுவிழந்து உள்ளது.
அ.தி.மு.க., தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் தான் மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்ற முடியும் என மக்கள் நம்புகிறார்கள். நாங்கள் 200 இடங்களில் நிச்சயம் வெற்றி பெறுவோம். ஓ.பி.எஸ். மீது மதிப்பு வைத்துள்ளோம். எந்த பக்கம் இருந்தால் அவருக்கு நல்லது என்பதை அவர் தான் முடிவு செய்ய வேண்டும்.
தி.மு.க. அமைச்சர்கள் பலர் மீது நிறைய வழக்கு உள்ளது. அமைச்சர் கே.என்.நேரு விவகாரம் தொடர்பாக நீதிமன்றம் கூறிய கருத்துக்குள் நாங்கள் செல்லவில்லை. தொகுதி பங்கீடு தொடர்பாக இதுவரை நாங்கள் பேச்சுவார்த்தையை தொடங்கவில்லை. பேச்சுவார்த்தை தொடங்கி கூட்டணி கட்சிகளுடன் பேசி இறுதி முடிவை எடுப்போம். தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய அனைத்து நிதிகளையும் மத்திய அரசு வழங்குகிறது. அனைத்து நிதிகளையும் பெற்றுக் கொண்டு நிதி கொடுக்கவில்லை தமிழக அரசு கூறுகிறது.
ஆண்டுதோறும் ஆயிரம் கோடி பேரிடருக்கான நிதி ஒதுக்கப்படுகிறது. கல்விக்கான நிதியும் ஒதுக்கப்பட்டு கொண்டு தான் உள்ளது. ஆதிதிராவிடர் நலத்துறைக்கு கொடுக்கும் நிதியை வேறு துறைக்கு தமிழக அரசு பயன்படுத்துகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர், மார்ச் 11-ந் தேதி பிரதமர் மோடி கலந்து கொள்ளும் பிரமாண்ட பொதுக் கூட்டத்திற்கான இடங்களை பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் ராஜேந்திரன், கூட்டணி கட்சி தலைவர்களுடன் சென்று பார்வையிட்டார்.