செய்திகள்

புதுவை அரசுக்கு நெருக்கடி தருவோம் என்று கூறுவதா?: எச்.ராஜாவுக்கு, நாராயணசாமி கண்டனம்

Published On 2017-12-12 04:23 GMT   |   Update On 2017-12-12 04:23 GMT
புதுவை காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி தருவோம் என தமிழக பா.ஜனதா தலைவர் எச்.ராஜா கூறியுள்ளதற்கு முதலமைச்சர் நாராயணசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:

புதுவை மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் அகில இந்திய காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்டதை வரவேற்று பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

கொண்டாடத்தை தொடர்ந்து முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அகில இந்திய காங்கிரஸ் தலைவராக தேர்வாகி உள்ள ராகுல்காந்திக்கு பல மாநிலங்களில் தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் என பெரிய சவால்களும் காத்திருக்கிறது. குஜராத் மாநிலத்தில் ராகுல் காந்தியின் தேர்தல் வியூகம் வெற்றி பெறும்.

மத்தியில் பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்த பிறகு புதுவை புறக்கணிக்கப்படுகிறது. இந்த நிலை மாற காங்கிரஸ் ஆட்சி மத்தியில் வரவேண்டும். இதற்கு ராகுல்காந்திக்கு பக்க பலமாக புதுவை காங்கிரஸ் கட்சியும், ஆட்சியும் இருக்கும்.

தமிழக-புதுவை பாரதிய ஜனதா தலைவர்கள் புதுவைக்கு உரிய நிதியை தடுக்கிறார்கள். பா.ஜனதாவின் வேடம் புதுவையில் கலைந்துள்ளது.


புதுவை காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி தருவோம் என தமிழக பா.ஜனதா தலைவர் எச்.ராஜா கூறுகிறார். இது அரசியல் தலைவர்களுக்கு அழகல்ல.

மாநிலத்தை வீழ்த்தி மத்திய அரசு வளர்ச்சி பெறாது. மாநிலங்கள் வளர்ந்தால் தான் நாடே முன்னேறும். கவர்னருக்கு எதிராக நாங்கள் மக்களை தூண்டி விடுவதாக பா.ஜனதாவினர் கூறுகின்றனர்.

எந்த சூழ்நிலையிலும் யாரையும் நாங்கள் நேரடியாக எதிர்கொள்பவர்கள், யாரையும் தூண்டிவிடுவது எங்கள் வேலை அல்ல, அவசியமும் இல்லை.

புதுவை அரசியலில் தலைவர்களுக்கு சுயகவுரவம் உள்ளது.  புதுவை காங்கிரஸ்-தி.மு.க. அரசை பாரதிய ஜனதாவால் அசைத்து கூட பார்க்க முடியாது.

இவ்வாறு நாராயணசாமி கூறினார்.
Tags:    

Similar News