செய்திகள்

மணல் குவாரிகளை மூடுவதற்கு எதிரான வழக்கு 13-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

Published On 2017-12-11 10:25 GMT   |   Update On 2017-12-11 10:25 GMT
மணல் குவாரிகளை மூடுவதற்கு எதிராக அரசு தொடர்ந்த வழக்கின் விசாரணையை 13-ம் தேதிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை ஒத்திவைத்தது.
மதுரை:

மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணல் தூத்துக்குடி துறைமுகத்தில் முடக்கி வைக்கப்பட்டிருப்பதாகவும், அதனை வெளியே எடுத்துச் சென்று விற்பனை செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என்றும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ராமையா எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராமையா, ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை நீதிபதி ஆர்.மகாதேவன் விசாரித்தார்.

விசாரணையின் முடிவில் மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்த மணலை வெளியே எடுத்துச் சென்று விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும்; தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகள் அனைத்தையும் 6 மாதத்திற்குள் மூட வேண்டும் என்று அவர் கடந்த 29-ந் தேதி அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.

மேலும், ‘சுற்றுச்சூழல் சமநிலையை பாதுகாக்கும் பொருட்டு ஜல்லியைத் தவிர மணல் குவாரிகள், கிரானைட் குவாரிகள் உள்ளிட்ட பிற கனிம குவாரிகளையும் மூட வேண்டும்’ என்றும் நீதிபதி தனது உத்தரவில் கூறியிருந்தார்.


தனி நீதிபதியின் இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி தமிழக அரசின் சார்பில் நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்ட கலெக்டர்கள் மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர்.

இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கட்டுமான பணிக்காக மணலை இறக்குமதி செய்ய மத்திய அரசு சார்பில் அனுமதி தரப்பட்டது என தெரிவித்தார்.

தமிழக அரசு குறிப்பிடும் வரிகள் இறக்குமதி மணலுக்கு பொருந்தாது என்றும், ஜி.எஸ்.டி. உள்ளிட்ட அனைத்து வரிகளையும் செலுத்தியபிறகே மணல் இறக்குமதி செய்யப்பட்டதாகவும் ராமையா எண்டர்பிரைசஸ் தெரிவித்தது. மேலும், தூத்துக்குடி துறைமுகம் நாள் தோறும் 5 லட்சம் ரூபாய் செலுத்தவேண்டும் என கட்டாயப்படுத்துவதாகவும் கூறியது.

இவ்வழக்கு தொடர்பாக, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் வாதாட கூடுதல் அவகாசம் கேட்டார். இதனையடுத்து வழக்கின் அடுத்தகட்ட விசாரைண 13-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Tags:    

Similar News