search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மணல் குவாரிகள்"

    • கொள்ளிடம் ஆற்றில் மட்டும் 20 மணல் குவாரிகள் செயல்படும்.
    • கொள்ளிடம் ஆற்றில் 10 கி.மீக்கு ஒரு தடுப்பணை கட்டி தண்ணீரை சேமிக்க வேண்டும் என்று பா.ம.க வலியுறுத்தி வருகிறது.

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் கொள்ளிடம் ஆற்றில் 11 மணல் குவாரிகள் உள்பட மொத்தம் 25 மணல் குவாரிகள் ஏற்கனவே செயல்பட்டு வரும் நிலையில், மேலும் 10 மணல் குவாரிகளை திறக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. இந்த மணல் குவாரிகள் திறக்கப்பட்டால், கொள்ளிடம் ஆற்றில் மட்டும் 20 மணல் குவாரிகள் செயல்படும். 87 கி.மீ தொலைவுக்குள் 20 மணல் குவாரிகள் திறக்கப்பட்டால், அதைவிடக் கொடூரமாக கொள்ளிடம் ஆற்றை சீரழிக்க முடியாது.

    கொள்ளிடம் ஆற்றில் 10 கி.மீக்கு ஒரு தடுப்பணை கட்டி தண்ணீரை சேமிக்க வேண்டும் என்று பா.ம.க வலியுறுத்தி வருகிறது. ஆனால், தமிழக அரசு 10 கிமீக்கு 2 மணல் குவாரிகளை அமைத்து நிலத்தடி நீர்மட்டத்தை சீரழித்து வருகிறது. காலநிலை மாற்றம் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்து வருகிறது. காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடகம் மறுத்து வருகிறது. இத்தகைய சூழலில் தடுப்பணைகள் கட்டி தண்ணீரை சேமிப்பது தான் அரசு செய்ய வேண்டிய செயலாகும். அதை விடுத்து குவாரிகளை அமைப்பதை அனுமதிக்க முடியாது. கொள்ளிடம் ஆற்றில் 10 புதிய மணல் குவாரிகளை அமைக்கும் முடிவை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும். இல்லாவிட்டால், மண்ணையும், மக்களையும், நீர்வளத்தையும் காக்க மக்களைத் திரட்டி மிகப்பெரிய போராட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சி முன்னெடுக்கும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • புதிய மணல் குவாரிகளை திறக்கும் தமிழக அரசின் முடிவுக்கு 'பூவுலகின் நண்பர்கள்' அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
    • தமிழ்நாட்டில் கட்டுமானத்துறைக்கான மணல் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    சென்னை:

    புதிய மணல் குவாரிகளை திறக்கும் தமிழக அரசின் முடிவுக்கு 'பூவுலகின் நண்பர்கள்' அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக இந்த அமைப்பு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் புதிதாக 25 இடங்களில் ஆற்று மணல் குவாரிகள் திறக்கப்பட்டு உள்ளதாக தெரிய வருகிறது. மேலும் ஆற்றில் மணல் எடுக்கும் முறையை எந்திர முறைக்கு மாற்றவும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இந்த நடவடிக்கைகள் ஆறுகளை அழித்து விடும்.

    தமிழ்நாட்டில் கட்டு மானத்துறைக்கான மணல் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    மணல் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில் 2022 ஜனவரியில் புதிதாக ஆற்றுப் படுகைகள் மற்றும் ஆற்றின் வடிகால் பகுதிகளில் மணல் குவாரிகளைத் திறக்கும் முடிவை தி.மு.க. அரசு எடுத்தது.

    அதன்படி 2022 ஜனவரி முதல் தற்போது வரை கடலூர், திருச்சி, வேலூர், அரியலூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் காவிரி, கொள்ளிடம், பாலாறு, வெள்ளாறு ஆகிய ஆறுகளில் புதிதாக மணல் குவாரிகள் அமைப்பதற்கான சுற்றுச் சூழல் அனுமதி கோரி தமிழ்நாடு நீர்வளத் துறை, தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளது.

    மேலும் சுற்றுசூழல் அனுமதி பெறப்பட்ட 30 குவாரிகளில் மாட்டு வண்டிகளை பயன்படுத்தி மணல் அள்ளும் முறைக்குப் பதிலாக எந்திரங்களை பயன்படுத்தி லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் மூலம் மணல் அள்ளுவதற்கான அனுமதிகளை தமிழ்நாடு அரசு வழங்கத் தொடங்கி இருப்பது ஆறுகளின் அழிவுக்கு வித்திடும்.

    எனவே தமிழ்நாட்டில் புதிதாக ஆற்று மணல் குவாரிகள் திறப்பதைக் கைவிட வேண்டும். ஏற்கனவே செயல்பட்டு வரும் குவாரிகளையும் மூடி, தமிழ்நாட்டின் இயற்கை வளங்களைப் பாதுகாக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×