என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

13 மாவட்டங்களில் புதிய மணல் குவாரிகள் திறப்பதை அரசு கைவிட வேண்டும்- அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
- புதிய மணல் குவாரிகளைத் திறக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.
- தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு கட்டுமானப் பணிகள் முக்கியம் என்பதில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு மாற்றுக் கருத்து இல்லை.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டின் 13 மாவட்டங்களில் 20-க்கும் மேற்பட்ட மணல் குவாரிகளை புதிதாக திறக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. தமிழ்நாட்டில் ஆறுகள், மலைகள், சமவெளிகள் என அனைத்து நிலைகளிலும் இயற்கை வளங்கள் கொள்ளை அடிக்கப்படுவதாகவும், அதற்கு முடிவு கட்டப்பட வேண்டும் என்றும் சுற்றுச்சூழல் வல்லுனர்கள் வலியுறுத்தி வரும் நிலையில், புதிய மணல் குவாரிகளைத் திறக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.
ஆற்று மணல் கொள்ளையை நியாயப்படுத்தவும், மூடி மறைக்கவும் கட்டுமானப் பணிகள் என்ற போர்வையை தமிழக அரசு பயன்படுத்துகிறது. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு கட்டுமானப் பணிகள் முக்கியம் என்பதில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு மாற்றுக் கருத்து இல்லை. அரசு நினைத்தால் வெளிநாடுகளில் இருந்து மணல் இறக்குமதியை அதிகரிப்பது, செயற்கை மணல் உற்பத்தி ஆகியவற்றின் மூலம் தமிழகத்தின் மணல் தேவையை எளிதாக பூர்த்தி செய்யலாம்.
எனவே, தமிழ்நாட்டின் 13 மாவட்டங்களில் 20-க்கும் மேற்பட்ட புதிய மணல் குவாரிகளை திறக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும். மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து ஆற்று மணலை இறக்குமதி செய்வது, செயற்கை மணல் உற்பத்தியை அதிகரித்து, விலையை குறைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளின் மூலம் கட்டுமானப் பணிகளுக்கான மணல் தேவையை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






