செய்திகள்

எடப்பாடி - ஓ.பி.எஸ். அணிகள் விரைவில் பிரியும்: தங்கதமிழ்ச்செல்வன் பேட்டி

Published On 2017-11-26 04:43 GMT   |   Update On 2017-11-26 04:43 GMT
மனங்கள் இணையாததால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இரு அணிகள் விரைவில் பிரியும் என்று தங்கதமிழ்ச்செல்வன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
சென்னை:

டி.டி.வி.தினகரன் ஆதரவாளரும், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.வுமான தங்கதமிழ்ச்செல்வன் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

எங்கள் அணியின் ஆட்சிமன்ற குழுக் கூட்டம் வருகிற 29-ந்தேதி திருச்சியில் நடைபெறும். அன்றே ஆர்.கே.நகர் தொகுதி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பெயரும் அறிவிக்கப்படும். அநேகமாக நூற்றுக்கு நூறு சதவீதம் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனே போட்டியிடுவார்.

அனைத்து மாவட்டச் செயலாளர் கூட்டம் வருகிற 27-ந்தேதி திருச்சியில் நடைபெறுகிறது. அன்றைய தினம் ஆர்.கே.நகர் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் மற்றும் இரட்டை இலைச் சின்னத்தை மீட்டெடுப்பது, கழக வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசனை நடைபெறும். இக்கூட்டத்தில் தலைமை கழக நிர்வாகிகளும் கலந்து கொள்வார்கள்.

கழகத்தைப் பொறுத்த வரை நாங்கள் அ.தி.மு.க. (அம்மா) அணிதான். அதே பெயரையே பயன்படுத்துவோம். அதில் எந்த மாற்றமும் இல்லை.

கொடியும், அதே கொடி தான் பயன்படுத்துவோம். தேர்தல் ஆணையம் ஒருதலைப்பட்சமாக முடிவெடுத்துள்ளது. அதனால் இரட்டை இலைச் சின்னத்தை மீட்டெடுப்பதற்கு உரிய நடவடிக்கைகளை துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், பொதுச் செயலாளர் சின்னம்மாவின் ஆலோசனைப்படி நடவடிக்கை மேற்கொள்வார்.

தேர்தல் ஆணையம் இரண்டு முக்கிய அம்சங்களைத்தான் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுக் கூறியிருக்கிறது. ஒன்று, இரட்டை இலைச் சின்னம் யாருக்கு என்பது. மற்றொன்று கழகத்தின் பெயர். இந்த இரண்டு நிபந்தனைகளைத் தவிர வேறு எந்த நிபந்தனைகளையும் தேர்தல் ஆணையம் விதிக்கவில்லை.

தலைமைக் கழக அலுவலகம் பற்றிக் கூட தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுச் சொல்லவில்லை.

தலைமைக் கழகத்தைப் பொறுத்தவரை நாங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் அங்கு செல்வோம். ஆனால் நாங்கள் அங்கு செல்வதால் பிரச்சினைகள் எதுவும் எழக்கூடாது என்பதற்காகத்தான் முறைப்படி செல்ல முடிவெடுத்திருக்கிறோம்.



எடப்பாடி அணி, ஓ.பி.எஸ். அணி உடலால் இணைந்திருக்கிறதே தவிர உள்ளத்தால் இணையவில்லை. ஏற்கெனவே ஓ.பி.எஸ். அணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் மைத்ரேயன் சொன்ன கருத்து இப்போது உறுதியாகியிருக்கிறது.

அவர்கள் வெளியில்தான் இணைந்திருக்கிறார்களே தவிர மனதளவில் இணையவில்லை.

மதுரையில் முதல்- அமைச்சர் கலந்து கொண்ட நிகழ்ச்சியே அதற்குச் சான்றாக உள்ளது. அங்கு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் முதல்-அமைச்சர் கொடியேற்றி வைத்திருக்கிறார். அந்த நிகழ்ச்சிக்கு ஓ.பி.எஸ். அணியைச் சேர்ந்த யாருமே அழைக்கப்படவில்லை. இது அந்த அணியைச் சேர்ந்தவர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

திருமணம் என்பது மணமகன், மணமகள் இருவரின் மனங்கள் ஒன்றுபட்ட நிலையில்தான் நடைபெற வேண்டும். இல்லையென்றால் அது விவாகரத்தில்தான் முடியும். அதுபோல்தான் இப்பொழுது நடைபெற்ற இணைப்பு நிகழ்ச்சியும் இருக்கிறது.

எப்பொழுது வேண்டுமானாலும் இந்த அணிகளுக்கு இடையே விவாகரத்து விரைவில் நடைபெற வாய்ப்பு உண்டு.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News