செய்திகள்

உசிலம்பட்டியில் கார் மோதிய மின் வாரிய ஊழியர் பலி

Published On 2017-10-23 12:21 GMT   |   Update On 2017-10-23 12:21 GMT
உசிலம்பட்டியில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் மின் வாரிய ஊழியர் பலியானார்.

உசிலம்பட்டி:

உசிலம்பட்டி அருகே உள்ள தொட்டப்பநாயக்கனூரைச் சேர்ந்தவர் ஜெயக்கொடி (வயது 40). மின் வாரிய ஊழியர். இவரது மனைவி இறந்துவிட்ட நிலையில் 2 மகள்களுடன் வசித்து வந்தார்.

நேற்று இரவு ஜெயக்கொடி மோட்டார் சைக்கிளில் வீட்டில் இருந்து புறப்பட்டார். தொட்டப்ப நாயக்கனூர் விலக்கில் இருந்து உசிலம்பட்டி-தேனி மெயின் ரோட்டுக்கு அவர் வந்தார்.

அந்த இடத்தில் ரெயில்வே பாலம் அமைக்கும் பணி நடப்பதால், சாலை குண்டும் குழியுமாக உள்ளது. ஜெயக்கொடி அந்த வழியே மோட்டார் சைக்கிளில் வந்தபோது தேனியில் இருந்து மதுரை வந்த கார் மோதியது.

இந்த விபத்தில் ஜெயக்கொடி தூக்கி வீசப்பட்டார். பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.

விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் கிராம மக்களும், ஜெயக்கொடியின் உறவினர்களும் அங்கு குவிந்தனர். அவர்கள் விபத்தை கண்டித்தும் மோசமான சாலையை சீரமைக்க வலியுறுத்தியும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

உசிலம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடம் சென்று மறியலில் ஈடுபட்டவர்களை சமரசம் செய்தனர். விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் மறியல் கைவிட்டு மக்கள் கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News