செய்திகள்

ரஜினி-கமல் அரசியலுக்கு வருவதில் தவறில்லை: தொல்.திருமாவளவன் பேட்டி

Published On 2017-10-02 04:15 GMT   |   Update On 2017-10-02 04:15 GMT
நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட திரைப்பட துறையினர் அரசியலுக்கு வருவதில் எந்த தவறும் இல்லை என்று தொல். திருமாவளவன் கூறினார்.

கம்பைநல்லூர்:

தர்மபுரி மாவட்டம் அரூரில் நேற்று நடந்த ஒரு கருத்தரங்கு நிகழ்ச்சியில் பங்கேற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:-

நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட திரைப்பட துறையினர் அரசியலுக்கு வருவதில் எந்த தவறும் இல்லை. யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். மக்களுக்கு சேவை செய்ய வரும் அனைவரையும் வரவேற்போம். ஆனால், திரைப்படத்தின் கவர்ச்சி மட்டுமே தமிழகத்தில் ஆட்சி, அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான மூல தானமாக இருக்கக் கூடாது.


எஸ்.சி, எஸ்.டி. மாணவர்களின் உயர் கல்விக்கான உதவித் தொகைகள் குறைக்கப்பட்டுள்ளன. இதனால் ஏழை, எளிய மாணவர்களின் உயர் கல்வி தடைபடும். எனவே, மாணவர்களின் கல்வி உதவித் தொகையை தமிழக அரசு உயர்த்தி வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதனை தொடர்ந்து செம்மணஹள்ளி கிராமத்தில் நடைபெற்ற கல்வெட்டு மற்றும் கட்சி கொடியேற்று நிகழ்ச்சியில் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டார். பின்னர் அங்கு அவர், கல்வெட்டை திறந்து வைத்து, கட்சி கொடியை ஏற்றி வைத்து பேசினார்.

இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேறு சமூகத்தை சேர்ந்த மாணவர்கள் சிலர் பிளேடால் தாக்கியதில் காயம் அடைந்த செம்மணஹள்ளி கிராமத்தை சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவர் மா.திருமாவளவன் வீட்டுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

அப்போது தொல்.திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:-

சோலைக்கொட்டாய் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வரும் 11-ம் வகுப்பு மாணவர் மா.திருமாவளவன் என்று பெயர் வைத்திருந்ததால் அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சிலர் தாக்குதல் நடத்தி உள்ளனர். எனவே, பாதிக்கப்பட்ட மாணவருக்கு தமிழக அரசு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். தாக்குதல் நடத்திய மாணவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தர்மபுரி மாவட்டத்தில் காவல் துறையில் கியூ பிரிவு, சி.பி.சி.ஐ.டி, காவல் கண்காணிப்பாளர் தனிப்பிரிவு உள்ளிட்டவைகளில் உயர் சாதிகளை சேர்ந்த காவலர்கள் பணிபுரிகின்றனர். இதில் சிலர் காவலர்கள் தலித் மக்களுக்கு எதிரான செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். தமிழக அரசுக்கு தெரிவிக்கப்படும் தகவல்கள் அனைத்தும் தலித் மக்களுக்கு எதிரான தகவல்களையே தெரிவித்து வருகிறார்கள். இதனால் தர்மபுரி மாவட்டத்தில் தலித் மக்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றனர்.

எனவே உளவு பிரிவு, லஞ்ச ஒழிப்புப்பிரிவு, எஸ்.பி.தனிப்பிரிவு, சி.பி.சி.ஐ.டி., கியூ பிரிவு உள்ளிட்ட பிரிவுகளில் 15 வருடங்களுக்கு மேலாக பணியாற்றி வருவதால் இது போன்ற தாக்குதல்களை கொண்டு செல்லாமல் மூடி மறைத்து இது போன்ற தாக்குதல்களுக்கு உடந்தையாக இருப்பது தெரியவருகிறது. அவர்களை தமிழக முதல்-அமைச்சர் உடனே இடமாற்றம் செய்ய வேண்டும். தர்மபுரி மாவட்டத்தில் தலித் மக்களுக்கு உரிய பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News