செய்திகள்

நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம்: மாணவர் அமைப்பினர் 100 பேருக்கு போலீஸ் நோட்டீசு

Published On 2017-09-14 10:31 GMT   |   Update On 2017-09-14 10:31 GMT
நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்திய மாணவர் அமைப்பினரை சேர்ந்த 100 பேருக்கு காவல்துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
சென்னை:

நீட் தேர்வுக்கு எதிராகவும், மாணவி அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டும் தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை உள்ளிட்ட பல இடங்களில் நடந்த இந்த மாணவர் போராட்டத்தை மாணவர் அமைப்பினர் தூண்டிவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

நுங்கம்பாக்கம் மற்றும் பெரம்பூரில் சென்னை மாநகராட்சி பள்ளி மாணவிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களை மாணவர் அமைப்பினர் தூண்டி விட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மாணவர் அமைப்பை சேர்ந்த 13 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதேபோல எழும்பூரிலும் நேற்று முன்தினம் மாணவர்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபட்ட 19 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதுபோன்று சென்னையில் நடந்த போராட்டத்தின் போது பள்ளி-கல்லூரி மாணவர்களை போராட்டத்தில் தூண்டிய பலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதுபோன்று மாணவர்களின் போராட்டத்தை தூண்டிய வாலிபர்கள், இளம் பெண்கள் பலருக்கு போலீசார் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

இந்த நோட்டீசு சுமார் 100 பேருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அந்தந்த பகுதிகளை சேர்ந்த சட்டம்-ஒழுங்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கையெழுத்திட்டு இந்த நோட்டீசை அனுப்பி வைத்துள்ளனர். நோட்டீசில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:-

உச்சநீதிமன்ற ஆணைக்கு எதிராக நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் மாணவ-மாணவிகளை போராட்டத்தில் பங்கேற்க வற்புறுத்தியதாக உங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கலவரம் மற்றும் அமைதியற்ற சூழலை மாணவர்களிடம் உருவாக்கி பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே ரூ.5 ஆயிரம் அபராதத்துடன், 6 மாத காலத்துக்கான நன்னடத்தை பத்திரத்தை எழுதி தருவதற்கு உங்களை ஏன் உட்படுத்தக் கூடாது என்று போலீசார் கேள்வி எழுப்பி உள்ளனர். இந்த நோட்டீசு மாணவர் அமைப்பினரின் வீடுகளுக்கு நேரில் சென்று பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அதில் ஒரு தேதியை குறிப்பிட்டு மாணவர் அமைப்பினர் ஆஜராக வேண்டும் என்றும், உரிய விளக்கத்தை அளிக்காவிட்டால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Tags:    

Similar News