செய்திகள்

திருச்சி அருகே வெவ்வேறு விபத்து: போலீஸ் ஏட்டு-வாலிபர் பலி

Published On 2017-08-14 11:57 GMT   |   Update On 2017-08-14 11:57 GMT
திருச்சியில் இரவில் நடந்த வெவ்வேறு சம்பவங்களில் போலீஸ் ஏட்டு, வாலிபர் பரிதாபமாக இறந்தனர். பொதுமக்கள் சாலை மறியலால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி:

திருச்சி கிராப்பட்டியில் உள்ள திருச்சி மாநகர 1-வது பட்டாலியனில் போலீஸ் ஏட்டாக பணியாற்றியவர் ராஜா (வயது 43). இவர் பட்டாலியன் அலுவலகத்தில் கம்ப்யூட்டர் பிரிவில் டேட்டா எண்டரி ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார்.

தினமும் வேலை முடிந்ததும் இரவில் காரில் சொந்த ஊரான புலிவலம் செல்வார். நேற்று இரவு வேலை முடிந்து ராஜா காரில் புலிவலம் சென்றார்.

புலிவலம் அருகே பெரமங்கலம் சத்திரப்பட்டி பிரிவு ரோட்டில் சென்ற போது எதிரே துறையூரில் இருந்து திருச்சி நோக்கி வந்த அரசு பஸ் எதிர்பாராதவிதமாக கார் மீது மோதியது. இதில் ராஜா உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து ராஜாவின் தாயார் புனிதவதி புலிவலம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அலாவுதீன் வழக்குப்பதிவு செய்து அரசு பஸ் டிரைவர் முசிறியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தியை கைது செய்தனர்.

திருச்சி மணிகண்டம் அருகே உள்ள அளுந்தூர் குருகுலம் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் (38). நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் அண்ணன் வீட்டிற்கு சென்று விட்டு சூரக்குடிப்பட்டி பிரிவு ரோட்டில் இருந்து மதுரை- திருச்சி 4 வழிச்சாலை ரோட்டில் திரும்பினார்.

அப்போது மதுரையில் இருந்து திருச்சியை நோக்கி மின்னல் வேகத்தில் சென்ற கார் கணேசனின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் அவர் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து அறிந்ததும் அப்பகுதி மக்கள் திருச்சி சாலையில் ஒன்று திரண்டனர். கணேசன் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற காரை கண்டுபிடிக்க கோரி மறியலில் ஈடுபட்டனர். இதனால் மதுரை-திருச்சி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சம்பவம் குறித்து அறிந்ததும் மணிகண்டம் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் ஜென்னீஸ், சப்-இன்ஸ்பெக்டர் ஆருண் மற்றும் போலீசார் விரைந்து சென்று நடவடிக்கை எடுப்பதாக கூறினர். அதனை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.

இந்த 2 சம்பவங்களால் நேற்று இரவு அங்கு பரபரப்பு நிலவியது.

Tags:    

Similar News