search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வைகோ பிரசார வாகனம் மீது கல்வீச்சால் மோதல்: மதிமுக-பாஜனதா கட்சியினர் 40 பேர் மீது வழக்கு
    X

    வைகோ பிரசார வாகனம் மீது கல்வீச்சால் மோதல்: மதிமுக-பாஜனதா கட்சியினர் 40 பேர் மீது வழக்கு

    உடன்குடியில் வைகோ பிரசார வாகனம் மீது கல்வீசியதால் ஏற்பட்ட மோதலில் ம.தி.மு.க., பா.ஜனதா கட்சியினர் 40 பேர் மீது வழக்கு செய்யப்பட்டுள்ளது.
    உடன்குடி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கடந்த 17-ந்தேதி கோவில்பட்டியில் வாகன பிரசாரத்தை தொடங்கினார். தொடர்ந்து எட்டயபுரம், புதூர், சூரங்குடி, வைப்பார், குளத்தூர் ஆகிய இடங்களில் பிரசாரம் மேற்கொண்டார். மறுநாள் 18-ந்தேதி கரிசல்குளத்தில் தொடங்கி காமநாயக்கன் பட்டி, பசுவந்தனை, ஓட்டப்பிடாரம், புதியம்புத்தூர் ஆகிய இடங்களில் பிரசாரம் செய்தார்.

    முதல் நாள் குள‌த்தூரில் அவர் வாகன பிரசாரம் மேற்கொண்டபோது அவரது வாகனம் மீது பாட்டில் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் வைகோ நேற்று மாலை செய்துங்கநல்லூரில் இருந்து 3-ம் கட்ட வாகன பிரசார பயணத்தை தொடங்கினார். தொடர்ந்து ஆழ்வார்திருநகரி, நாசரேத், பேய்குளம், சாத்தான்குளம், மெஞ்ஞானபுரம், பரமன்குறிச்சி பகுதி வழியாக இரவு உடன்குடி வந்தார்.

    உடன்குடி சந்தையடி தெருவழியாக அவர் வேன் மீது நின்றபடி வந்துகொண்டிருந்தார். அப்போது பா.ஜ.க. மாவட்ட செயலாளர் சிவமுருகன் ஆதித்தன், ஒன்றிய செயலாளர் திருநாகரன் தலைமையில் வைகோவுக்கு எதிராக கருப்புக்கொடி காட்டுவதற்காக திரண்டு நின்றனர். உடனே போலீசார் வைகோவை மாற்றுப்பாதையில் செல்லுமாறு அறிவுறுத்தினர். அதற்கு வைகோ மறுத்துவிட்டு திட்டமிட்ட பாதையிலேயே வந்தார்.

    உடனே அங்கு கருப்புக்கொடியுடன் நின்ற பா.ஜ.கவினர் வைகோவுக்கு எதிராக கோ‌ஷமிட்டனர். அப்போது வைகோவின் பிரசார வேனின் மீது சரமாரியாக கல் வீசப்பட்டது. உடனே வைகோ பிரசார வேனுக்குள் அமர்ந்தார். கல்வீச்சில் ம.தி.மு.க. மாநில தொண்டர் அணி அமைப்பாளர் பாஸ்கர சேதுபதி, சந்திரன், மரியசெல்வம், மத்தேயு ஜெபசிங் ஆகிய 3 பேர் படுகாயம் அடைந்த‌னர்.

    இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு தீபு தலைமையிலான போலீசார் தடியடி நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அங்கிருந்த பா.ஜ.க.வினர் உள்ளிட்ட அனைவரும் நாலாபுறமும் சிதறி ஓடினர். இதனால் அந்த பகுதியே போர்க்களம்போல காட்சியளித்தது. இந்த சம்பவத்தில் பா.ஜ.க செயற்குழு உறுப்பினர் துரைராஜ், ஒன்றிய செயலாளர் பசுபதி ஜெயசிங், பரமன்குறிச்சி கிளை தலைவர் மெய்யழகன், கலை இலக்கிய பிரிவு விஜயசங்கர் ராமலிங்கம் ஆகியோருக்கும் காயம் ஏற்பட்டது.

    போலீசார் வைகோவின் வாகனத்தை சுற்றி பாதுகாப்பாக அந்த இடத்தை கடந்துப்போக செய்தனர். பின்னர் வைகோ வேனில் நின்றவாறு பேசினார். அப்போது அவர் பேசுகையில், “ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று வலியுறுத்தி பிரசார பயணம் மேற்கொண்டு உள்ளேன். பா.ஜ.க.வினர் ஸ்டெர்லைட் ஆலை வேண்டும் என்கிறீர்களா? இதற்கு நான் பயந்து போக மாட்டேன்.

    ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று பள்ளிவாசல், தேவாலயங்கள், கோவில்களில் மக்கள் ஒற்றுமையுடன் வழிபட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். நான் ம.தி.மு.க.வை தொடங்கி 25 ஆண்டுகளுக்கு மேலாகியும் என் மீது எந்த கட்சியினரும் கல்வீசியது கிடையாது. எங்களுடைய கட்சி தொண்டர்களும் எந்த வன்முறையிலும் ஈடுபட்டது கிடையாது” என்றார்.

    மோதலில் காயமடைந்த 9 பேரும் திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே வைகோ பிரசார வாகனத்தின் மீது கல்வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக உடன்குடி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் பா.ஜ.க. மாவட்ட செயலாளர் சிவமுருகன் ஆதித்தன், ஒன்றிய செயலாளர் திருநாகரன்,நகர செயலாளர் ஜெயக்குமார் உள்ளிட்ட 25 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர்.

    இதேபோல் ம.தி.மு.க.வினர் தங்களை தாக்கியதாக பா.ஜ.கவினர் தரப்பில் போலீசில் புகார் செய்யப்பட்டது. அந்த புகாரில் ம.தி.மு.க நிர்வாகிகள் 15 பேர் மீதும் வழக்குபதிவு செய்யப்பட்டது. இந்த சம்பவம் உடன்குடியில் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. இதை தொடர்ந்து அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். 
    Next Story
    ×