search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பா.ஜனதா, காங்கிரஸ் அல்லாத மத்திய அரசு - சந்திரசேகர் ராவ், மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்
    X

    பா.ஜனதா, காங்கிரஸ் அல்லாத மத்திய அரசு - சந்திரசேகர் ராவ், மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்

    பா.ஜனதா, காங்கிரஸ் அல்லாத மாநில கட்சிகள் அடங்கிய மத்திய அரசை அமைப்பது குறித்து தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர் ராவ் வருகிற 13-ந் தேதி மு.க.ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்துகிறார். #TCM #ChandrasekharRao #DMK #MKStalin
    ஐதராபாத்:

    பா.ஜனதா, காங்கிரஸ் அல்லாத மாநில கட்சிகள் அடங்கிய மத்திய அரசை அமைப்பது குறித்து தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர் ராவ் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனை சந்தித்து ஆலோசனை நடத்தினார். வருகிற 13-ந் தேதி மு.க.ஸ்டாலினுடன் அவர் ஆலோசனை நடத்துகிறார்.

    பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னர் மத்தியில் பா.ஜனதா, காங்கிரஸ் அல்லாத மாநில கட்சிகள் அடங்கிய மத்திய அரசை அமைப்பதற்கான முயற்சிகளை தெலுங்கானா முதல்-மந்திரியும், டி.ஆர்.எஸ். கட்சி தலைவருமான கே.சந்திரசேகர் ராவ் எடுத்துவருகிறார்.

    அவரது மகள் கவிதா எம்.பி.யும் சமீபத்தில், “காங்கிரஸ், பா.ஜனதாவுடன் கூட்டணியில் இல்லாத மாநில கட்சிகள் 120 தொகுதிகளில் வெற்றிபெறும். தேர்தல் முடிவுக்கு பின்னர் மேலும் சில மாநில கட்சிகள் இணைந்து மத்திய அரசை அமைப்பதில் முக்கிய முடிவு எடுக்கும். இதற்காக அத்தகைய கட்சிகளுடன் டி.ஆர்.எஸ். கட்சி தொடர்பில் உள்ளது” என்று கூறியிருந்தார்.

    இந்நிலையில் கேரள மாநிலம் திருவனந்தபுரம் சென்ற சந்திரசேகர் ராவ் நேற்று முதல்-மந்திரி பினராயி விஜயனை சந்தித்து பேசினார். அப்போது அவர்கள் இருவரும் பாராளுமன்ற தேர்தல் குறித்தும், தற்போதைய அரசியல் நிலவரம் குறித்தும் பேசியதாக தெலுங்கானா முதல்-மந்திரி அலுவலகம் தெரிவித்துள்ளது.

    அந்த அறிக்கையில், சந்திரசேகர் ராவ் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சென்னையில் வருகிற 13-ந் தேதி சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களும் பாராளுமன்ற தேர்தல் நிலவரம் மற்றும் தற்போதைய அரசியல் சூழ்நிலை உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசனை நடத்துகிறார்கள்.

    இதற்காக தமிழகம் வரும் சந்திரசேகர் ராவ் இந்த சந்திப்புக்கு பின்னர் ராமேசுவரம் மற்றும் ஸ்ரீரங்கம் கோவில்களுக்கு சென்று வழிபடுகிறார். அதன்பின்னர் ஐதராபாத் புறப்பட்டு செல்கிறார்.

    அதேசமயம் கர்நாடக முதல்- மந்திரி குமாரசாமியுடன் சந்திரசேகர் ராவ் தொலைபேசி மூலம் பேசியதாகவும் அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.  #TCM #ChandrasekharRao #DMK #MKStalin
    Next Story
    ×