search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சந்திரசேகர் ராவ்"

    • மாநிலத்தில் முதல் முறையாக காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது.
    • சந்திர சேகர் ராவுக்கு இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டு உள்ளதாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

    தெலுங்கானா மாநிலத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் 65 தொகுதியில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. அந்த மாநிலத்தில் முதல் முறையாக காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது.

    இதைதொடர்ந்து, தெலுங்கானா மாநில முதல்வராக ரேவந்த் ரெட்டி பதவி ஏற்றுக் கொண்டார். இதற்கிடையே, தெலுங்கானா மாநிலம் உருவாக காரணமாக இருந்த சந்திரசேகர் ராவ் இரண்டு முறை ஆட்சியில் இருந்த நிலையில் சரிவைக் கண்டார்.

    தொடர்ந்து, சந்திரசேகர ராவ் தனது வீட்டின் குளியலறைக்கு சென்ற போது திடீரென வழுக்கி விழுந்தார். கீழே விழுந்ததில், இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டு உள்ளதாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதன் காரணமாக அவருக்கு இடதுபுற இடுப்பு எலும்பு மாற்றப்பட வேண்டும் என்றும், இது முழுமையாக குணமடைய ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை ஆகும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, சந்திரசேகர் ராவுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

    இந்நிலையில், மருத்துவமனைக்கு நேரில் சென்ற தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி சந்திரசேகர் ராவை சந்தித்து நலம் விசாரித்தார். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.   

    • மொத்தமுள்ள 119 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் 60 இடங்களுக்கு மேல் முன்னிலை பெற்று ஆட்சி அமைக்க உள்ளது.
    • தெலுங்கானா உருவாக உண்ணாவிரதம் இருந்த சந்திரசேகர் ராவுக்கு மக்கள் ஓட்டளித்து ஆட்சியில் அமர வைத்தனர்.

    தெலுங்கானா மாநிலத்தில் கடந்த 30ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்றது. அன்று பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று நடந்து வருகிறது.

    அதில், மொத்தமுள்ள 119 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் 60 இடங்களுக்கு மேல் முன்னிலை பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. அங்கு ஆளும் கட்சியான பி.ஆர்.எஸ் 40 இடங்களில் முன்னிலை பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது.

    தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் பாரத ராஷ்டிரிய சமிதி ஆட்சியில் இருந்து வரும் நிலையில் தற்போது காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றும் நிலையில் உள்ளது.

    தெலுங்கானா உருவாக உண்ணாவிரதம் இருந்த சந்திரசேகர் ராவுக்கு மக்கள் ஓட்டளித்து ஆட்சியில் அமர வைத்தனர். அதன் பிறகு காங்கிரஸ் ஆட்சிக்கு வரவே முடியவில்லை.

    தனிமாநிலமாக உருவாக காரணமாக இருந்தவரை மக்கள் அகற்ற சில காரணங்கள் கூறப்படுகின்றன.

    அந்த வகையில், "மாநில அரசியலை விட்டு தேசிய அரசியலை அதிகம் கவனம் செலுத்தியது. அதிக அளவில் எழுந்த ஊழல் குற்றச்சாட்டுகள். வாரிசுகளின் அதீத ஆதிக்கம். காங்கிரஸ் கட்சி மற்றும் ரேவந்த் ரெட்டியை குறைத்து மதிப்பிட்டது. முந்தைய வாக்குறுதிகளை நிறைவேற்றாதது. அதீத அதிகாரம். இரண்டு முறை தொடர் ஆட்சியில் இருப்பதால் இயல்பான மக்களின் மனநிலை" உள்ளிட்டவைகளை காரணங்களாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

    • காங்கிரஸ் கட்சி நன்றியற்ற கட்சியாக மாறி உள்ளது.
    • எம்.எல்.சி.கவிதா காங்கிரஸ் கட்சியை விமர்சித்து பேசிய சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், நிஜாமாபாத்தில் உள்ள போர்கான் எக்ஸ்' சாலையில், பிராமண சங்கம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில், முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்மராவின் சிலையை தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவின் மகளும் எம்.எல்.சி யுமான கவிதா திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சியில் முன்னாள் பிரதமர் நரசிம்மராவின் மகளும் எம்.எல்.சி.யுமான சுரபி வாணி, பி.வி.பிரபாகர் ராவ், மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் கவிதா பேசியதாவது:-

    முன்னாள் பி.வி. நரசிம்மராவின் தலைமைப் பண்புகளையும், தேசத்திற்கு அவர் ஆற்றிய சேவைகளையும் மறக்கமுடியாது.

    நாட்டில் பொருளாதார சீர்திருத்தங்களை உருவாக்கியவர் பி.வி.நரசிம்மராவ். அவரை கவுரவிக்க காங்கிரஸ் கட்சி தவறிவிட்டது.

    காங்கிரஸ் கட்சி நன்றியற்ற கட்சியாக மாறி உள்ளது. காங்கிரஸ் கட்சி பி.வி. நரசிம்மராவை முற்றிலுமாக மறந்து அவர் கட்சிக்கு ஆற்றிய பங்களிப்பைப் புறக்கணித்துள்ளது.

    தெலுங்கான முதலமைச்சர் கே.சி. சந்திரசேகர ராவ் அவரது பங்களிப்பை அங்கீகரிப்பது மட்டுமல்லாமல், நரசிம்மாராவ் பிறந்த நாள் நூற்றாண்டை உலகம் முழுவதும் பெரிய அளவில் கொண்டாடினார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    எம்.எல்.சி.கவிதா காங்கிரஸ் கட்சியை விமர்சித்து பேசிய சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • சந்திரசேகர் ராவின் ரிமோட் கண்ட்ரோல், பிரதமர் மோடியிடம் இருக்கிறது.
    • பாரதிய ராஷ்டிர சமிதி இருக்கும் கூட்டணியில் காங்கிரஸ் சேராது.

    கம்மம் :

    தெலுங்கானாவில் இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக காங்கிரஸ் கட்சி தீவிர களப்பணி ஆற்றி வருகிறது. கட்சியின் மூத்த தலைவரான ராகுல் காந்தி மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

    கம்மம் பகுதியில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்றினார். அப்போது மாநிலத்தை ஆளும் பாரதிய ராஷ்டிர சமிதி அரசையும், முதல்-மந்திரி சந்திரசேகர் ராவையும் கடுமையாக சாடினார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    'பாரதிய ராஷ்டிர சமிதி' என்பது, 'பா.ஜனதா உறவினர் சமிதி' போலத்தான். சந்திரசேகர் ராவ், தன்னை ஒரு பேரரசராகவும், தெலுங்கானாவை தனது பேரரசாகவும் நினைத்துக்கொள்கிறார்.

    பாராளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சி எப்போதும் பா.ஜனதாவுக்கு எதிராகத்தான் நின்று இருக்கிறது. ஆனால் சந்திரசேகர் ராவின் கட்சி, பா.ஜனதாவின் பி டீமாகத்தான் உள்ளது.

    சந்திரசேகர் ராவ் மற்றும் அவரது கட்சித் தலைவர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் அவர்களை பா.ஜனதாவுக்கு அடிபணியச் செய்துள்ளது. தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர் ராவின் ரிமோட் கண்ட்ரோல், பிரதமர் மோடியிடம் இருக்கிறது.

    சந்திரசேகர் ராவ் தலைமையிலான பாரதிய ராஷ்டிர சமிதி இருக்கும் கூட்டணியில் காங்கிரஸ் சேராது. இதை பிற எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கூறிவிட்டேன்.

    காங்கிரஸ் கட்சி சமீபத்தில் கர்நாடகத்தில் ஒரு ஊழல் மற்றும் ஏழை விரோத அரசுக்கு எதிராக வெற்றி பெற்றது. ஏழைகள், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர், சிறுபான்மையினர் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களின் ஆதரவுடன் நாங்கள் அவர்களை தோற்கடித்தோம்.

    இது தெலுங்கானாவிலும் நடைபெறும். மாநிலத்தின் பெரும் பணக்காரர்கள், அதிகாரம் மிக்கவர்கள் ஒருபுறம் இருக்கின்றனர். மறுபுறம் ஏழைகள், பழங்குடியினர், சிறுபான்மையினர், விவசாயிகள் மற்றும் சிறு வணிகர்கள் எங்களுடன் இருக்கின்றனர். கர்நாடகாவில் நடந்தது இங்கேயும் நடக்கும்.

    இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

    • தெலுங்கானாவில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.
    • சந்திரசேகர் ராவிடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரஸ் முனைப்பு காட்டி வருகிறது.

    புதுடெல்லி :

    தெலுங்கானா முதல்-மந்திரி கே.சந்திரசேகர் ராவ் தெலுங்கானா ராஷ்டிர சமிதி என்ற பெயரில் தொடங்கிய கட்சி, பின்னர் பாரத ராஷ்டிர சமிதி என பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில் பாரத ராஷ்டிர சமிதி நிர்வாகிகள் 35 பேர் நேற்று டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை சந்தித்தனர். அப்போது காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், தெலுங்கானா மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி ஆகியோர் உடனிருந்தனர்.

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாரத ராஷ்டிர சமிதி நிர்வாகிகள் 35 பேரும், தாங்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும், தெலுங்கானா கம்மத்தில் அடுத்த மாதம் முதல் வாரத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பேசுவோம். அதில் அனேகமாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கலந்துகொள்வார் என்று தெரிவித்தனர்.

    காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த பாரத ராஷ்டிர சமிதி நிர்வாகிகளில் கம்மம் மக்களவை தொகுதி முன்னாள் எம்.பி. பொங்குலெட்டி ஸ்ரீனிவாஸ் ரெட்டியும், ஆந்திரா, தெலுங்கானா முன்னாள் மந்திரி ஜூபள்ளி கிருஷ்ணா ராவ், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோரும் அடங்குவர்.

    தெலுங்கானாவில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அந்த மாநிலத்தை சுமார் 10 ஆண்டுகளாக ஆண்டுவரும் சந்திரசேகர் ராவிடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரஸ் முனைப்பு காட்டி வருகிறது. இந்நிலையில் ஆளுங்கட்சியில் இருந்து 35 நிர்வாகிகள் காங்கிரசுக்கு இடம்பெயர்ந்திருப்பது அக்கட்சிக்கு ஒரு புத்துணர்வை அளித்திருக்கிறது.

    • டெல்லி அரசின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் மத்திய அரசு சமீபத்தில் அவசர சட்டம் கொண்டு வந்தது.
    • மத்திய அரசின் இந்த உத்தரவு சுப்ரீம் கோர்ட்டை அவமதிப்பதாகும் என்று ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியது.

    ஐதராபாத்:

    டெல்லி அரசின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் மத்திய அரசு சமீபத்தில் அவசர சட்டம் கொண்டு வந்தது. மத்திய அரசின் இந்த உத்தரவு சுப்ரீம் கோர்ட்டை அவமதிப்பதாகும் என்று ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியது.

    இந்த அவசர சட்டத்துக்கு எதிராக டெல்லி முதல் மந்திரியும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் பல்வேறு மாநில முதல் மந்திரிகளையும், அரசியல் கட்சி தலைவர்களையும் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.

    இந்நிலையில், தெலுங்கானா மாநிலத்துக்கு சென்ற அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் முதல் மந்திரி பகவந்த் மான் ஆகியோர் முதல் மந்திரி சந்திரசேகர் ராவை இன்று சந்தித்தனர். அவசர சட்ட எதிர்ப்புக்கு ஆதரவு அளிக்கும்படி கேட்டுக் கொண்டனர்.

    இதையடுத்து, இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது சந்திரசேகர் கூறியதாவது:

    இந்த அவசரச் சட்டத்தை நீங்களே திரும்பப் பெற வேண்டும். இல்லையெனில் நாங்கள் அனைவரும் கெஜ்ரிவாலை ஆதரிப்போம் என பிரதமரிடம் கோருகிறோம். அவருக்கு துணை நிற்போம்.

    மக்களவை மற்றும் மாநிலங்களவையில் எங்களின் முழு பலத்தையும் பயன்படுத்தி அவசரச் சட்டத்தை முறியடிப்போம். தேவையின்றி பிரச்சனை செய்யாதீர்கள் என தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி மக்களுக்கு நீதி வழங்க, கேசிஆர் கட்சி மற்றும் அவரது அரசு எங்களுடன் உள்ளது. இது டெல்லி மட்டுமல்ல, தேசத்தின் ஜனநாயகத்தைக் காப்பாற்றுவது. கே.சி.ஆர் ஆதரவு எங்களுக்கு பலத்தை அளித்துள்ளது என கூறினார்.

    • விளக்கேற்ற ஒரு தீப்பொறி போதும்.
    • எதிரிகள் சிலரால் ஜீரணிக்க முடியாமல் போகலாம்.

    ஐதராபாத் :

    தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் அமைக்கப்பட்டு உள்ள பிரமாண்ட அம்பேத்கர் சிலையை முதல்-மந்திரியும், பாரதிய ராஷ்டிர சமிதி தலைவருமான சந்திரசேகர் ராவ் நேற்று திறந்து வைத்தார். பின்னர் உரையாற்றிய அவர், 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு, மத்தியில் பாரதிய ராஷ்டிர சமிதி ஆட்சி அமைக்கும் என கூறினார்.

    இது தொடர்பாக அவர் கூறுகையில், 'பாரதிய ராஷ்டிர சமிதி மராட்டியத்தில் மிகப்பெரிய ஆதரவைப் பெற்றது. மேற்கு வங்காளம், பீகார் மற்றும் உத்தரபிரதேசத்திலும் இதைப்போன்ற ஆதரவை எதிர்பார்க்கிறது. நான் சில விஷயங்களைச் சொல்கிறேன். 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் அடுத்த அரசு நம்முடையது.

    இதை நம் எதிரிகள் சிலரால் ஜீரணிக்க முடியாமல் போகலாம். ஆனால் விளக்கேற்ற ஒரு தீப்பொறி போதும்' என்று கூறினார். மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு, தலித் பந்து திட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என்றும் சந்திரசேகர் ராவ் கூறினார்.

    இந்த திட்டத்தின் கீழ், தலித் குடும்பத்தினருக்கு தொழில் தொடங்குவதற்காக ரூ.10 லட்சம் மானியமாக வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

    • ரூ.148.50 கோடியில் சுமார் 11.80 ஏக்கர் நிலத்தில் என்டிஆர் கார்டன் பகுதியில் இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது.
    • இப்பகுதி விரைவில் சுற்றுலா தலமாக மாற்றப்பட உள்ளது.

    ஐதராபாத் ஹூசைன் சாகர் பகுதியில் நாடாளுமன்ற கட்டிட வடிவில் அம்பேத்கருக்கு 125 அடி உயரத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதி விரைவில் சுற்றுலா தலமாக மாற்றப்பட உள்ளது.

    ரூ.148.50 கோடியில் சுமார் 11.80 ஏக்கர் நிலத்தில் என்டிஆர் கார்டன் பகுதியில் இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது. கட்டுமானப் பணிகளுக்கு எஸ்சி நலத்துறை நிதி வழங்கிய நிலையில், கட்டுமானப் பொறுப்பு சாலைகள் மற்றும் கட்டிடங்கள் துறையிடம் ஒப்படைக்கப்பட்டு ஒரு வருடத்திற்குள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

    ஹைதராபாத்தில் உள்ள இந்த 125 அடி உயர அம்பேத்கர் சிலையை முதல்வர் கே சந்திரசேகர் ராவ் திறந்து வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர், தெலுங்கானா அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

    • இந்த பெயர் மாற்றத்துக்கு தேர்தல் கமிஷன் ஒப்புதல் அளித்து இருக்கிறது.
    • கட்சித்தலைமை அலுவலகத்தில் சந்திரசேகர் ராவ் கொடியேற்றினார்.

    ஐதராபாத் :

    தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர் ராவ், தெலுங்கானா ராஷ்டிர சமிதி (டி.ஆர்.எஸ்.) என்ற பெயரில் கடந்த 2001-ம் ஆண்டு கட்சி தொடங்கினார். தெலுங்கானா பிரிவினைக்காக பாடுபட்ட அவர், மாநில பிரிவினைக்குப்பின் தெலுங்கானாவில் ஆட்சியையும் பிடித்து உள்ளார்.

    இந்த நிலையில் தனது கட்சியை கடந்த அக்டோபர் மாதம் தேசிய கட்சியாக மாற்றி, பாரதிய ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்.) என பெயரையும் மாற்றி சந்திரசேகர் ராவ் அறிவித்தார்.

    பின்னர் இதற்கு அங்கீகாரம் கேட்டு தேர்தல் கமிஷனுக்கு டி.ஆர்.எஸ். கட்சி கடிதம் அனுப்பியது. இந்த பெயர் மாற்றத்துக்கு தேர்தல் கமிஷன் ஒப்புதல் அளித்து இருக்கிறது.

    இதைத்தொடர்ந்து தெலுங்கானா ராஷ்டிர சமிதி, பாரதிய ராஷ்டிர சமிதியாக நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதையொட்டி கட்சித்தலைமை அலுவலகத்தில் சந்திரசேகர் ராவ் கொடியேற்றினார்.

    இந்த நிகழ்ச்சியில் கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி, நடிகர் பிரகாஷ் ராஜ் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    • சுமார் 10 ஆயிரம் தொழிற்சாலைகள் மூடப்பட்டு இருக்கின்றன.
    • 50 லட்சம் பேர் வேலை இழந்து இருக்கிறார்கள்.

    ஐதராபாத் :

    தெலுங்கானாவின் ஜாக்டியால் மாவட்டத்தில் கலெக்டர் அலுவலக வளாகத்தை முதல்-மந்திரி சந்திரசேகர் ராவ் நேற்று திறந்து வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் பேசும்போது அவர் பிரதமர் மோடியை கடுமையாக குற்றம் சாட்டினார்.

    அவர் கூறுகையில், 'பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் கடந்த 8 ஆண்டுகால ஆட்சியில் சுமார் 10 ஆயிரம் தொழிற்சாலைகள் மூடப்பட்டு இருக்கின்றன. இதன்மூலம் 50 லட்சம் பேர் வேலை இழந்து இருக்கிறார்கள். கடந்த 8 ஆண்டுகளில் நாட்டுக்கு பிரதமர் மோடி எதையும் செய்யவில்லை' என விமர்சித்தார்.

    விவசாயம், மின்சாரம், வளர்ச்சி என எந்த துறையாவது நாட்டில் வளர்ச்சி கண்டிருக்கிறதா? என கேள்வி எழுப்பிய அவர், இது தொடர்பாக எந்த இடத்திலும் விவாதத்துக்கு தயார் எனவும், மத்திய அரசின் திறமையின்மையால் சுமார் ரூ.3 லட்சம் கோடி அளவுக்கு மாநிலம் இழந்திருக்கிறது என்றும் தெரிவித்தார்.

    லாபம் ஈட்டும் பொதுத்துறை நிறுவனங்களை மத்திய அரசு விற்பதை சுட்டிக்காட்டிய சந்திரசேகர் ராவ், அறிவுஜீவிகள், இளைஞர்கள் இது குறித்து சிந்திக்குமாறும், இந்த தீய பாரம்பரியம் ஒழிய வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

    • பா.ஜனதாவில் இணைந்து போட்டியிட்டால் ரூ.100 கோடி தருவதாக புகார்.
    • நான் ஒரு கண்ணியமான அரசியல்வாதி.

    ஐதராபாத் :

    தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவ் தலைமையில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி ஆட்சியில் உள்ளது. இந்த கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் சிலருக்கு, கட்சியில் இருந்து விலக சமீபத்தில் பா.ஜனதா தரப்பில் பேரம் பேசியதாக புகார் எழுந்தது.

    குறிப்பாக ஆளுங்கட்சியில் இருந்து விலகி அடுத்த தேர்தலில் பா.ஜனதாவில் இணைந்து போட்டியிட்டால் ரூ.100 கோடி தருவதாக கூறி மர்ம நபர்கள் சிலர் அணுகியதாக சில எம்.எல்.ஏ.க்கள் புகார் கூறினர்.

    இந்த விவகாரத்தில் 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மாநிலம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த 7 பேர் கொண்ட சிறப்புக்குழு ஒன்றையும் மாநில அரசு அமைத்து உள்ளது.

    இந்த நிலையில் சந்திரசேகர் ராவின் மகளும், சட்ட மேலவை உறுப்பினருமான கவிதாவிடமே பா.ஜனதாவில் இணையுமாறு அந்த கட்சியினர் அணுகியதாக நேற்று அவர் பரபரப்பு தகவலை வெளியிட்டார்.

    முன்னதாக இவர் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேயிடம் போனில் பேசியதாக பா.ஜனதா எம்.பி. தர்மபுரி அரவிந்த் கூறியிருந்தார்.

    இதை மறுக்கும் வகையில் கவிதா நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், 'நான் ஒரு கண்ணியமான அரசியல்வாதி. நீண்ட காலம் அரசியலில் இருக்க விரும்புகிறேன். நான் யார் பெயரையும் கூற விரும்பவில்லை. பா.ஜனதாவில் இணையுமாறு அந்த கட்சியின் நண்பர்கள் சிலர் மற்றும் நட்பு அமைப்புகள் என்னை அணுகின. 'ஷிண்டே மாடல்' என்ற பெயரில் இந்த வாய்ப்பை வழங்க முன்வந்தனர். ஆனால் பணிவாக மறுத்து விட்டேன். ஏனெனில் எனது தலைவர் சந்திரசேகர் ராவ் காருவின் கட்சியில் என் இதயம் உள்ளது' என்று தெரிவித்தார்.

    எனவே தன்னை பற்றி தவறான தகவல்களை பரப்புவதை நிறுத்துமாறு பா.ஜனதா எம்.பி.க்கு அறிவுறுத்திய கவிதா, தவறினால் செருப்பால் அடிப்பேன் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

    மராட்டியத்தில் சிவசேனா சார்பில் மந்திரியாக இருந்த ஏக்நாத் ஷிண்டே, சிவசேனா-காங்கிரஸ் கூட்டணிக்கு வழங்கியிருந்த ஆதரவை திடீரென விலக்கிக்கொண்டு தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் பா.ஜனதாவுடன் கைகோர்த்து தற்போது முதல்-மந்திரியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    முதல்-மந்திரி சந்திரசேகர் ராவ் மகளின் இந்த குற்றச்சாட்டு தெலுங்கானா அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதற்கிடையே சந்திரசேகர் ராவின் மகள் கவிதா மீது அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக, பா.ஜனதா எம்.பி. தர்மபுரி அரவிந்தின் வீட்டை தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சித்தொண்டர்கள் நேற்று சூறையாடினர்.

    இது ஐதராபாத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • குறுகிய நேரத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மிக மிக அதிக கனமழை பெய்வது மேக வெடிப்பு என்று சொல்லப்படுகிறது.
    • மேக வெடிப்பு என்று அழைக்கப்படும் புதிய நிகழ்வு ஆங்காங்கே தற்போது நிகழ்கிறது.

    ஐதராபாத் :

    மேகவெடிப்பு பிற வெளிநாடுகளால் ஏற்படுத்தப்படும் சதியாக இருக்கலாம் என சந்தேகிப்பதாக தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார். தெலுங்கானா மாநிலத்தில் கடந்த ஒருவாரமாக இடைவிடாது தொடர் மழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக தெலுங்கானாவில் பல இடங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. குறிப்பாக அம்மாநிலத்தின் கோவில் நகரம் என்று அழைக்கப்படும் பத்ராசலம் பகுதியில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    பத்ராசலத்தின் அணையின் நீரின் அளவு 70 அடியை இரு தினங்களுக்கு முன் கடந்தது. 53 அடியை நீர் மட்டம் கடந்த போது இறுதி எச்சரிக்கை விடப்பட்டது. தற்போது அணையின் நீர் மட்டம் 60 அடியாக உள்ளது. இந்த நிலையில், வெள்ளம் பாதித்த பகுதிகளை தெலுங்கானா முதல் மந்திரி சந்திர சேகர் ராவ் இன்று பார்வையிட்டார்.

    பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சந்திரசேகர் கூறுகையில், "மேக வெடிப்பு என்று அழைக்கப்படும் புதிய நிகழ்வு ஆங்காங்கே தற்போது நிகழ்கிறது. மேக வெடிப்பு சதி செயலாக இருக்கலாம் என்று மக்கள் பேசுகின்றனர். வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் வேண்டும் என்றே மேக வெடிப்பை குறிப்பிட்ட சில இடத்தில் நிகழச் செய்வதாக கூறப்படுகிறது. இது எந்த அளவு உண்மை என்பதை நமக்கு தெரியவில்லை. கடந்த காலங்களில் காஷ்மீர் அருகே இது போன்று மேகவெடிப்பு நடத்தப்பட்டது. பிறகு உத்தரகாண்டிலும் நடந்தது. தற்போது கோதாவரி பகுதியில் மேகவெடிப்பை ஏற்பட செய்து வருவதாக எங்களுக்கு தகவல்கள் வந்து கொண்டு இருக்கின்றன" என்றார்.

    குறுகிய நேரத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மிக மிக அதிக கனமழை பெய்வது மேக வெடிப்பு என்று சொல்லப்படுகிறது. அதாவது, திடீரென 100 மி.மீட்டர் (10 செ.மீ) மேல் ஒரு குறிப்பிட்ட பரப்பளவில் மழை கொட்டுவதை மேக வெடிப்பு என்று வானிலை ஆய்வு மையம் வரையறுக்கிறது. சமீபத்தில் அமர்நாத்த்தில் மேக வெடிப்பு ஏற்பட்டு பெரு வெள்ளம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

    ×