search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தெலுங்கானா சட்டசபை தேர்தல்: ராகுல்- சந்திரபாபு நாயுடு ஒரே மேடையில் பிரசாரம்
    X

    தெலுங்கானா சட்டசபை தேர்தல்: ராகுல்- சந்திரபாபு நாயுடு ஒரே மேடையில் பிரசாரம்

    தெலுங்கானாவில் நாளை ராகுலும், சந்திரபாபு நாயுடுவும் ஒரே மேடையில் பிரசாரம் செய்வதால் மெகா கூட்டணி மீது வாக்காளர்களின் பார்வை திரும்பியுள்ளது. #TelanganaAssemblyElection #RahulGandhi #ChandrababuNaidu
    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநில சட்டசபைக்கு வருகிற 7-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

    119 தொகுதிகளை கொண்ட அம்மாநிலத்தின் ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள சந்திரசேகரராவின் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி தீவிரமாக உள்ளது.

    தெலுங்கானா ராஷ்டீரிய சமிதியிடம் இருந்து ஆட்சியைத் தட்டிப் பறிக்க காங்கிரஸ், தெலுங்கு தேசம், இந்திய கம்யூனிஸ்டு, தெலுங்கானா ஜன சமிதி ஆகிய 4 கட்சிகளும் ஒன்று சேர்ந்து மெகா கூட்டணியை உருவாக்கி உள்ளது. இதற்கிடையே பாரதிய ஜனதா கட்சியும் களத்தில் உள்ளது.

    இதனால் தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தலில் மும்முனைப் போட்டி நிலவுகிறது. மூன்று அணிகள் சார்பில் தீவிர தேர்தல் பிரசாரம் நடந்து வருகிறது. பிரசாரம் நிறைவு பெற இன்னும் 8 நாட்களே இருப்பதால் அங்கு உச்சக்கட்ட அனல் பறக்கும் பிரசாரம் நடந்து வருகிறது.

    தெலுங்கானாவில் எப்படியாவது ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற தீவிர முயற்சியில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். 119 தொகுதிகளில் 75 தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரசுக்கு ஆதரவு திரட்ட மூத்த தலைவர்கள் அனைவரும் தெலுங்கானாவில் குவிந்துள்ளனர்.

    காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாகாந்தி கடந்த 22 மற்றும் 23-ந்தேதிகளில் தெலுங்கானா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ஆதரவு திரட்டினார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பிரதமர் மோடி இன்று பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து தெலுங்கானாவில் பிரசாரம் மேற்கொள்கிறார்.


    இன்று மதியம் அவர் நிஜாமாபாத்தில் பேசுகிறார். பிற்பகலில் மெகபூப் நகரில் பிரசாரம் செய்கிறார்.

    இந்த நிலையில் தெலுங்கானா மக்களிடம் ஆதரவு திரட்டும் பணியை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் தீவிரப்படுத்தி உள்ளார். தெலுங்கானா மாநிலத்துக்கு நாளை (புதன்கிழமை) அவர் வர உள்ளார். வழக்கம் போல இந்து கோவில்களுக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு அவர் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார்.

    கம்மம் பகுதியில் நடக்கும் பிரமாண்ட தேர்தல் பிரசார கூட்டத்தில் ராகுல் காந்தி பேச உள்ளார். அதற்கு முன்பும், பின்பும் “ரோடு-ஷோ” நடத்தவும் ராகுல் முடிவு செய்துள்ளார். இதற்கான ஏற்பாடுகளை தெலுங்கானா மாநில காங்கிரசார் சுறுசுறுப்புடன் செய்து வருகிறார்கள்.

    இதற்கிடையே ராகுல் காந்தி பேச உள்ள கம்மம் பொதுக்கூட்டத்தில் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவும் கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானாவில் மெகா கூட்டணி அமைத்துள்ள ராகுலும், சந்திரபாபு நாயுடுவும் ஒரே மேடையில் பேச இருப்பது இதுவே முதல் முறையாகும். ராகுலும், சந்திரபாபு நாயுடுவும் ஒரே மேடையில் ஒன்று சேர்ந்து ஆதரவு திரட்டுவதன் மூலம் மெகா கூட்டணிக்கு மிகப்பெரிய எழுச்சி ஏற்படும் என்று காங்கிரஸ் தலைவர்கள் கருதுகிறார்கள்.

    இந்த நிலையில் கம்மம் பொதுக்கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு தேசிய பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி, தெலுங்கானா ஜன சமிதி கட்சித் தலைவர் கோதண்டராம் ஆகியோரையும் கலந்து கொள்ள செய்யும் முயற்சியில் காங்கிரஸ் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்களும் பங்கேற்றால் காங்கிரஸ் தலைமையிலான மெகா கூட்டணியின் ஒற்றுமையை மக்கள் மத்தியில் காட்ட முடியும் என்று காங்கிரஸ் தலைவர்கள் கருதுகிறார்கள்.

    காங்கிரஸ் - தெலுங்கு தேசம் கட்சிகள் உருவாக்கி இருக்கும் மெகா கூட்டணிக்கு “மக்களின் முன்னணி” என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த முன்னணி சார்பில் நேற்று குறைந்தபட்ச பொதுவான தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் தெலுங்கானா வாக்காளர்களைக் கவரும் வகையில் பல்வேறு புதிய வாக்குறுதிகள், அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன.

    இந்த நிலையில் நாளை ராகுலும், சந்திரபாபு நாயுடுவும் ஒரே மேடையில் பிரசாரம் செய்வதால் மெகா கூட்டணி மீது வாக்காளர்களின் பார்வை திரும்பியுள்ளது. இதைத் தொடர்ந்து சந்திரபாபு நாயுடுவை மிகக் கடுமையாக விமர்சனம் செய்து தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி தலைவர்கள் தாக்கி பேசி வருகிறார்கள்.

    இதற்கு பதில் அளித்த சந்திரபாபு நாயுடு, “தெலுங்கு மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆனால் சந்திரசேகரராவ் பிரிவினையை அதிகப்படுத்துகிறார். அவரை தோற்கடித்தால்தான் தெலுங்கு மக்கள் அனைவருக்கும் முன்னேற்றம் கிடைக்கும்” என்றார்.

    ஆனால் தெலுங்கானா மாநிலத்தில் நடத்தப்பட்ட தேர்தல் கருத்துக் கணிப்புகள் அனைத்திலும் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. தெலுங்கானா மக்களில் 64 சதவீதம் பேர் சந்திரசேகரராவுக்கே ஆதரவு தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.  #TelanganaAssemblyElection #RahulGandhi #ChandrababuNaidu
    Next Story
    ×