search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சித்தராமையா மகனை எதிர்த்து போட்டியிடாததால் எடியூரப்பாவுக்கு எதிராக பா.ஜனதாவினர் ரகளை
    X

    சித்தராமையா மகனை எதிர்த்து போட்டியிடாததால் எடியூரப்பாவுக்கு எதிராக பா.ஜனதாவினர் ரகளை

    கர்நாடகா சட்டசபை தேர்தலில் சித்தராமையா மகன் போட்டியிடும் தொகுதியில் எடியூரப்பா மகன் போட்டியிடாததால் பாரதிய ஜனதாவினர் ரகளையில் ஈடுபட்டனர். #KarnatakaElection #BJP
    பெங்களூர்:

    கர்நாடகா சட்டசபை தேர்தல் வருகிற மே 12-ந்தேதி நடக்கிறது. முதல்-மந்திரி சித்தராமையா மகன் யதீந்திரா காங்கிரஸ் வேட்பாளராக வருணா தொகுதியில் போட்டியிடுகிறார்.

    இவரை எதிர்த்து பா.ஜனதா சார்பில் மாநில தலைவரும் முன்னாள் முதல்- மந்திரியுமான எடியூரப்பாவின் மகன் விஜயேந்திராவை நிறுத்த வேண்டும் என்று தொண்டர்கள் வற்புறுத்தி வந்தனர்.

    நேற்று அவர் வருணா தொகுதியில் மனுதாக்கல் செய்வார் என்று கூறப்பட்டது. ஆனால் திடீர் என்று மைசூர் மாவட்டம் நஞ்சன் கூடு தொகுதியில் போட்டியிட நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். இதனால் பா.ஜனதாவினர் அதிருப்தி அடைந்தனர்.

    இதற்கிடையே நஞ்சன் கூடு பகுதியில் நடந்த கட்சியின் பிரசார கூட்டத்தில் எடியூரப்பா தனது மகன் விஜயேந்திராவுடன் கலந்துகொண்டார்.

    அப்போது விஜயேந்திராவை வருணா தொகுதியில் நிறுத்த வேண்டும். அப்போது தான் சித்தராமையா மகனுக்கு கடும் போட்டி கொடுக்க முடியும் என்று தெரிவித்தனர்.

    இதற்கு பதில் அளித்து எடியூரப்பா பேசுகையில், "வருணா தொகுதியில் விஜயேந்திரா போட்டியிட மாட்டார். அங்கு பா.ஜனதா சார்பில் வேறொரு வேட்பாளர்தான் போட்டியிடுவார். அவருக்கு நீங்கள் ஆதரவு அளிக்க வேண்டும்" என்றார்.

    எடியூரப்பாவின் இந்த அறிவிப்பால் ஏமாற்றம் அடைந்த தொண்டர்கள் அவருக்கு எதிராகவும், கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷாவுக்கு எதிராகவும் கோ‌ஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    திடீர் என்று நாற்காலி களை தூக்கிவீசி கலாட்டா செய்தனர். இதனால் கோபம் அடைந்த எடியூரப்பா தனது மகனுடன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். உடனே தொண்டர்கள் அவரது காரை வழிமறித்து முற்றுகையிட்டனர்.

    தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்துவந்து தொண்டர்கள் மீது தடியடி நடத்தி கலைத்தனர். அதன் பிறகு நிலைமை கட்டுக்குள் வந்தது.

    இந்த சம்பவம் பற்றி விஜயேந்திரா தனது டுவிட்டரில் "நான் எப்போதுமே கட்சியின் முடிவுகளுக்கு முழு மனதுடன் ஆதரவு அளித்து வந்துள்ளேன். எனது தந்தை எடியூரப்பாவின் தலைமையில் கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சி மலர வேண்டும் என்பதற்காக தொடர்ந்து பணியாற்றுவேன்" என்று தெரிவித்துள்ளார்.

    கர்நாடக தேர்தலில் பா.ஜனதா முதல்-மந்திரி வேட்பாளராக எடியூரப்பா அறிவிக்கப்பட்டார். அவர் ஷிகாரிபுரா தொகுதியில் போட்டியிடுகிறார். முதல்- மந்திரி சித்தராமையா சாமுண்டீஸ்வரி தொகுதியில் போட்டியிடுகிறார். சித்தராமையா மகனை எதிர்த்து போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர் இன்று அறிவிக்கப்படுகிறார். #Tamilnews
    Next Story
    ×