search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும்: அன்புமணி ராமதாஸ்
    X

    பாராளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும்: அன்புமணி ராமதாஸ்

    40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெறும் என்று அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேசினார். #AnbumaniRamadoss #ADMK
    தர்மபுரி :

    தர்மபுரி - மொரப்பூர் இடையே புதிய ரெயில் பாதை அமைக்கும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. விழாவில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேசியதாவது:-

    தர்மபுரி - மொரப்பூர் ரெயில்பாதை இணைப்பு திட்டத்தின் மூலம் தர்மபுரி மாவட்டத்தில் புதிய வரலாறு படைக்கப்பட்டு புதிய அடையாளம் உருவாக்கப்பட்டு உள்ளது. நான் 5 ஆண்டுகளுக்கு முன்பு தர்மபுரி மாவட்ட மக்களை சந்தித்தபோது நான் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டால் தர்மபுரி - மொரப்பூர் ரெயில்பாதை திட்டத்தை கொண்டு வருவேன் என்று உறுதியளித்தேன். அந்த உறுதிமொழி தற்போது நிறைவேற்றப்பட்டு உள்ளதால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

    கடந்த 4½ ஆண்டுகளில் இந்த ரெயில் பாதை இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி 19 முறை மத்திய ரெயில்வே மந்திரிகளை நேரில் சந்தித்து பேசி அழுத்தம் கொடுத்து உள்ளேன். தி.மு.க. ஆட்சியில் கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்தபோது பா.ம.க.வை சேர்ந்த ஏ.கே.மூர்த்தி, வேலு ஆகியோர் மத்திய ரெயில்வே இணை மந்திரிகளாக இருந்தனர். அப்போது தமிழக அரசு தனது பங்களிப்பு நிதியை ஒதுக்கி இந்த திட்டத்தை நிறைவேற்ற உதவ வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடுத்தனர். ஆனால் அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதி இந்த திட்டத்திற்கு உரிய நிதியை ஒதுக்க முன்வரவில்லை.



    இப்போது முழுமையாக ரெயில்வே துறை நிதியில் தர்மபுரி - மொரப்பூர் ரெயில்பாதை இணைப்பு திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் தர்மபுரியில் இருந்து சென்னைக்கு நேரடியாக ரெயில் போக்குவரத்து வசதி கிடைக்கும். அதன் மூலம் வேலைவாய்ப்பு, பொருளாதார மேம்பாடு ஆகியவை உருவாகி தர்மபுரி மாவட்டம் வளம் பெறும். இந்த பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட சேலம் மாவட்டம் மேட்டூருக்கு உரிய ரெயில் திட்டங்களையும் செயல்படுத்த வேண்டும். காவிரி உபரிநீரை தர்மபுரி மாவட்ட ஏரிகள், குளங்களுக்கு நிரப்பும் திட்டம் தொடர்பாக கையெழுத்து இயக்கம் நடத்தி தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த 10 லட்சத்து 20 ஆயிரம் பேரிடம் கையெழுத்து பெற்று உள்ளோம்.

    இந்த கோரிக்கை உள்பட தர்மபுரி மாவட்டத்தின் வளர்ச்சிக்கான சிப்காட் திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நாளை (இன்று) நான் நேரில் சந்தித்து பேச உள்ளேன். தமிழகம் வளர்ச்சி பெற வேண்டும் என்பதே நம்முடைய நோக்கம். வருகிற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா, அதிமுக, பா.ம.க. ஆகியவை அடங்கிய கூட்டணி வெற்றிக்கூட்டணி. இந்த கூட்டணி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் மிகப்பெரிய வெற்றி பெறும்.

    இவ்வாறு டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேசினார். #AnbumaniRamadoss #ADMK
    Next Story
    ×