search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எத்தனை துரோகிகள் வந்தாலும் அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது- முதலமைச்சர் பழனிசாமி பேச்சு
    X

    எத்தனை துரோகிகள் வந்தாலும் அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது- முதலமைச்சர் பழனிசாமி பேச்சு

    எத்தனை துரோகிகள் வந்தாலும் அ.தி.மு.க.வை ஒன்றும் செய்ய முடியாது என்றும் இது வலிமையான இயக்கம் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். #ADMK #Jayalalithaa #TNCM #Edappadipalaniwami
    ஆத்தூர்:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று சேலம் மாவட்டம் கீரிப்பட்டியில் பேசியதாவது:-

    நான், ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன். இன்றைக்கும் விவசாயம் செய்து கொண்டிருக்கின்றேன். விவசாய பணி என்பது கடுமையான பணி.

    உழைப்பவன் தான் என்றைக்கும் நிலைத்து நிற்பான். மற்றவன் தோளில் சவாரி செய்தால் நிற்க மாட்டான். என்னை பொறுத்தவரைக்கும் இந்த நிலைக்கு உழைத்து தான் நான் வந்திருக்கிறேன். உங்களுடைய ஆதரவோடு. ஆகவே விவசாயம், விவசாய தொழில், விவசாய தொழிலாளிகளை அம்மாவுடைய அரசு முழுமையாக காப்பாற்றும்.

    எடப்பாடியில் எல்லா மனுக்களையும் வாங்கினேன். நிகழ்ச்சிகள் எல்லாம் கலந்து கொண்டேன். வீட்டிலும் பொதுமக்கள் வந்தார்கள். அவர்களிடம் இருந்தும் மனுக்களை வாங்கினேன். இப்போது கூட பொதுமக்களை சந்தித்து மனுக்களை வாங்கி இருக்கிறேன். இந்த மனுக்கள் மீது தீர்வு காணப்படும்.

    இப்படி ஒவ்வொரு பகுதிக்கு போய் மக்களை சந்தித்து, மக்களுடைய குறைகளை கேட்டு, நிவர்த்தி செய்கின்ற அரசாக இன்றைக்கு அம்மாவுடைய அரசு செயல்பட்டு கொண்டிருக்கின்றது.

    இந்த அரசை பார்த்து செயல் இழந்த அரசு என்று சொல்கிறார். நீ எத்தனை ஊருக்கு போன? இவர் விவசாயி என்று சொல்லி கெங்கவல்லிக்கு போகும்போது பேண்ட் போட்டு, ஷூ போட்டு ஏர் ஓட்டினார். இவருக்கு விவசாயம் எப்படி தெரியும் சொல்லுங்கள்? பார்க்கலாம்.

    விவசாயம் என்றால் எப்படி? இருக்கும் என்பதை நான் உணர்வு பூர்வமாக அனுபவ ரீதியாக சந்தித்தவன். இன்றைக்கு விவசாய தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றேன். ஆகவே விவசாயிகளிடமும் சரி, விவசாய தொழிலாளர்களிடமும் சரி, பல்வேறு தொழில் செய்கின்ற அத்தனை மக்களுக்கும் அம்மாவுடைய அரசு ஆதரவாக இருக்கும்.


    2011-ல் ஜெயலலிதா முதல் -அமைச்சராகும் போது 100-க்கு 21 சதவீதம் பேர் தான் உயர்கல்வி படித்துக் கொண்டிருந்தனர். 2011-க்கு பிறகு அரசு கல்வியில் எடுத்த மறுமலர்ச்சி காரணமாக 46 சதவீதமாக உயர்ந்திருக்கிறது.

    100-க்கு 21 சதவீதம் பேர் படித்தவர்கள். இப்போது 100-க்கு 46 சதவீதம் பேர் படிக்கிறார்கள் என்று சொன்னால் கல்வியில் புரட்சி செய்த காரணத்தினால் தான் இன்றைக்கு தமிழகம் இந்தியாவிலேயே உயர்க்கல்வி படிக்கின்ற மாநிலத்தில் முதல் மாநிலமாக திகழ்ந்து கொண்டிருக்கின்றது. சிறந்த வல்லுநர்களாக, சிறந்த கல்வியாளர்களாக, படித்து முடித்ததும் வேலைக்கு செல்லக்கூடிய சூழலை மாணவ செல்வங்களுக்கு உருவாக்கி தந்து கொண்டிருக்கின்றேம். இதெல்லாம் ஆட்சி செய்த சாதனை.

    இதெல்லாம் தி.மு.க. கண்ணுக்கு தெரியாது. அவர்கள் ஆட்சிக்கு எப்போது வந்தாலும் குடும்பம் தான் ஆட்சி செய்யும். குடும்பத்தில் இருக்கிறவர்களுக்குத்தான் பதவி தர முடியும் என்று கூறுவார்கள்.

    ஆனால், நடுத்தர குடும்பத்தில் பிறந்து இன்றைக்கு பதவி கிடைத்தது என்று சொன்னால் அ.தி.மு.க.வில் தான் கிடைக்கும். வேறு எந்த கட்சியிலும் கிடைக்காது.

    காங்கிரஸ் கட்சியாக இருக்கட்டும், தி.மு.க.வாக இருக்கட்டும், இதில் யார் பதவிகளில் வருகிறார்கள் என்றால் அவர்களின் மகன்கள் தான் பதவிக்கு வர முடியும். அவர்கள் உறவினர்கள் தான் வர முடியும். ஆனால், அ.தி.மு.க.வில் மக்கள் செல்வாக்கு இருக்கின்றவர்கள் தான் கட்சியில் இருப்பார்கள். பதவிக்கும் வருவார்கள். இப்படி வருகின்றவர்கள் தான் மக்களுடைய குறைகளை தீர்ப்பார்கள்.

    அந்த வகையில் மக்களுக்கு தேவையான திட்டங்களை அம்மாவுடைய அரசு செயல்படுத்தும். மக்களுக்காக உருவாக்கப்பட்ட கட்சி அ.தி.மு.க.,

    அ.தி.மு.க.வை சில சதிகாரர்கள் உடைக்க நினைத்தார்கள். அம்மா இருக்கின்றபோது அவரை ஏமாற்றி கொல்லைபுறத்தின் வழியாக இந்த ஆட்சிக்கு தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தார்கள். இந்த இயக்கத்தை அழிக்க நினைத்தார்கள். பின்னர் அம்மா அவர்கள் மறைவிற்கு பிறகு இந்த ஆட்சியை வளைத்து போட நினைத்தார்கள். மக்கள் துணை நின்றோடு, நிர்வாகிகள் துணை நின்றோடு, கட்சி தொண்டர்கள் துணை கொண்டு இன்றைக்கு முறியடிக்கப்பட்டது.

    எத்தனை துரோகிகள் வந்தாலும் அ.தி.மு.க.வை ஒன்றும் செய்ய முடியாது. இது வலிமையான இயக்கம். மரத்திற்கு ஆணி வேர் எப்படி முக்கியமோ அதுபோல் அ.தி.மு.க.விற்கு ஆணிவேர் போல் இருப்பது தொண்டர்கள் . அதற்கு தாங்கி நிற்பவர்கள் நிர்வாகிகள். அதற்கு துணை நிற்பவர்கள் பொதுமக்கள். ஆகவே நீங்கள் இருக்கின்ற வரை இந்த இயக்கத்தை எவராலும் ஒன்றும் செய்ய முடியாது என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார். #ADMK #Jayalalithaa #TNCM #Edappadipalaniwami
    Next Story
    ×